
'இறந்தவர்களின் புகைப்படங்களை எங்களிடம் கொடுத்தால் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலமாக அவர்கள் பேசுதல், நடத்தல் போன்று குறும்படமாக மாற்றித் தருகிறோம். அதைப் பார்க்கும்போது அவர்கள் எப்போதும் நம்முடன் இருப்பது போன்ற எண்ணம் ஏற்படும்'' என்கிறார் புகைப்படக் கலைஞர் தனுஷ்மாறன்.
பெரிய காஞ்சிபுரம் புத்தேரித் தெருவில் 'இன்பினிட்டி கலர் லேப்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், உற்பத்திப் பிரிவின் பொறியியல் பட்டதாரி. இருபத்து மூன்று வயதான இவர் 'உயிரிழந்தவர்களைப் பேச வைக்கும் குறும்படங்களை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமாகத் தயாரித்துக் கொடுக்கிறார்.
அவரிடம் பேசியபோது:
'கோவையில் கல்லூரியில் படிக்கும்போதே, அதிகாலையிலும், அந்தி சாயும் நேரங்களிலும் கேமராவுடன் வனப் பகுதிகளுக்குச் சென்று விலங்குகள், பறவைகள், பூச்சிகள், இயற்கை காட்சிகளைப் புகைப்படமாக எடுப்பேன். படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்லாமல் புகைப்படம் எடுப்பதையே ஒரு முழுநேரத் தொழிலாக செய்யத் தொடங்கினேன்.
அதிநவீனமான, பல லட்சம் ரூபாய் விலை மதிப்புடைய கேமராக்களை மட்டுமே வாங்குவது என்றும் முடிவெடுத்தேன். காஞ்சிபுரம் மாவட்டத் தொழில் மையத்தை அணுகியபோது, 'நீட்ஸ்' திட்டம் மூலம் வங்கிக் கடன் வழங்கினர். போதுமான மானியமும் கிடைத்தது.
தற்போது என்னிடம் 15 புகைப்படக் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். சுப நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்தல், அதை எடிட் செய்தல், வளவளப்பான தாளில் பிரிண்டிங் செய்து அளித்தல், ஆல்பங்கள் தயாரித்து தருதல், புகைப்படங்களுக்கு வித்தியாசமான பிரேம்கள் வடிவமைத்தல், காலண்டர்களில் புகைப்படங்களை வடிவமைத்து தருதல் போன்றவை வழக்கமான பணிகளாகும்.
ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி, பொள்ளாச்சி, காஷ்மீரில் லடாக் பனிப்பிரதேசம் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பல நாள்கள் தங்கியிருந்து போட்டோ சூட்டிங் முடிந்து திரும்புவோம். திரும்பிய ஒரே மாதத்தில் புகைப்பட ஆல்பமும் தயாரித்து தந்து விடுவோம். வித்தியாசமான ஆல்பங்களை நாங்கள் வடிவமைப்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புகைப்படக் கலைஞர்களும் எங்களிடம் படங்களை அனுப்பி வைக்கின்றனர்.
முக்கியமாக, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இறந்தவர்களையும் பேச வைக்கிறோம். இறந்தவர்களது புகைப்படங்களை எங்களிடம் கொடுத்தால், அவர்களை நடக்க வைக்கவும், பேச வைக்கவும் எங்களால் முடியும். நினைவுகளை அடிக்கடி புதுப்பிக்கவும், உணர்வுகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தவும், மனிதச் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவுவது புகைப்படங்கள்'' என்கிறார் தனுஷ்மாறன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.