வருடா வருடம், பெரிய பண்டிகைகள் அல்லது விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரிசையாகப் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடத் தொடக்கத்திலேயே, பெரிய நடிகர்களின் படங்கள் சில வெளியாகி விட்டன. இருப்பினும், இந்த வருடத்தில் எதிர்பார்ப்புக்குரிய சில படங்கள் வெளியாக லைனில் ரெடியாக காத்து நிற்கின்றன. வரும் தீபாவளிக்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்பதை இங்கு பார்ப்போம்.
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், பைசன். இந்தப் படத்தில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில், இப்படத்திலிருந்து 'காளமாடன்' உள்ளிட்ட பாடல் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'பைசன்' திரைப்படம், அக்டோபர் 17-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. கபடி ஆடும் ஒரு இளைஞனைச் சுற்றி நடக்கும் கதையாக இருக்கிறது இதன் திரைக்கதை. 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இந்தப் படத்தை எந்த மாதிரி படைப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
ராம்போ
சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது அருள்நிதியின் 'ராம்போ'. தீபாவளி சிறப்புப் படமாக அக்டோபர் 10-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, 'கொம்பன்', 'குட்டிப்புலி', 'புலிக்குத்தி பாண்டி', 'விருமன்' போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் முத்தையா.
தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிப்பதில் தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு செல்கிறது. 'பிக் பாஸ்' புகழ் ஆயிஷா இந்தப் படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கெனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கார்மேனி செல்வம்
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கார்மேனி செல்வம்'. இப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற 'பேராசை பட்டாதான் இறைவன் தருவான்...' என்ற பாடல் பெரும் ஹிட் அடித்துள்ளது.
கார்மேனி செல்வம் என்பது ஓர் ஆழமான சமூகத் திரைப்படம் ஆகும். கடமைக்கும் ஆசைக்கும் இடையிலான இடைவெளியை, நேர்மை மற்றும் விரக்திக்கு இடையிலான இடைவெளியை இது ஆராய்கிறது. செல்வம் என்ற நேர்மையான கொள்கைமிக்க கார் ஓட்டுநரைப் பற்றிய இந்தப் படம், திடீர் குடும்ப அவசரநிலை அவரை எந்த எல்லைக்குத் தள்ளுகிறது என்பதைக் காட்டும்.
காதல் மற்றும் உயிர் வாழ்தலில் உண்மையான அர்த்தத்தை செல்வமும் அவரது மனைவியும் எவ்வாறு புரிந்து கொண்டனர் என்பதை இதன் திரைக்கதை விவரிக்கிறது. சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமெளலியும், கெளதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
டீசல்
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், 'டீசல்'. இந்தப் படத்தை ஷண்முகம் முத்துசாமி இயக்கியிருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் 'ஆருயிரே...' என்ற பாடல், சமீபத்தில் வெளியானது. 'பார்க்கிங்' மற்றும் 'லப்பர் பந்து' என அடுத்தடுத்த படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
முந்தய இரண்டு படங்களைப் போல, ஹரிஷ் கல்யாணின் இந்தப் படத்தை இயக்குவதும் புதுமுக இயக்குநர்தான். இதில், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இதில் இடம் பெற்றிருந்த 'பீர் சாங்....' பாடல் ஏற்கெனவே பெரிய ஹிட் அடித்து விட்டது. 'டீசல்' படமும், வரும் அக்டோபர் 17 -ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
டியூட்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், 'டியூட்'. இந்தப் படத்தை, கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். சாய் அப்யங்கர், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஹிருது ஹரோன், ரோகிணி, ஐஸ்வர்யா ஷர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த 'டியூட்...' என்கிற பாடல் பெரிய ஹிட் அடித்துள்ளது. இப்படமும், வரும் அக்டோபர் 17-ஆம் தேதியன்று தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. தியேட்டர் ரிலீஸிற்கு பிறகு சில வாரங்கள் கழித்து இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.