தமிழானவன்
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனைஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாராம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும்.
பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாராம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.
பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?
பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்துவிட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.
எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?
இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாராம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன்.
கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.
பனை விதைகள் உங்களுக்கு எப்படிக் கிடைக்கின்றன?
பனை விதைகளைப் பெறுவதற்குப் பெருமுயற்சி எடுத்து வருகிறோம். குறிப்பாக எங்களிடம் 50 தன்னார்வலர்கள் இருக்கின்றனர். இதில் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் 25 பேர். மற்றவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். பனை வளர்ப்பில் ஆர்வம் உடையவர்கள்.
இவர்களின் துணையோடு தமிழகத்தின் விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், பூத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும், புதுச்சேரியில் நல்லவாடு, புதுக்குப்பம், கிருமாம்பாக்கம், பி.எஸ்.பாளையம், தவளக்குப்பம், கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் புதுவை அரசுக்குச் சொந்தமான டாக்டர் அப்துல்கலாம் கோளரங்கம், புதுப்பிக்க வல்ல எரிசக்தித்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் உள்ள பனை மரங்களில் இருந்து விழும் பழம்தான் எங்களுக்கு ஆதாரம். ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலரைப் பயன்படுத்தி வருகிறோம்.
அவர்களுக்கு ஒரு பழத்துக்கு ரூ. 1 கொடுத்துவிடுவோம். அரசுக்குச் சொந்தமான இடம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இலவசமாகக் கிடைக்கும் ஒரு பழத்தில் பெரும்பாலும் 3 விதை இருக்கும். ஒரு சில பழங்களில் 2 கூட இருக்கும். 90 சதவீதம் 3 விதைகள்தான்.
அண்மையில் எங்கு பனை விதை நடவு செய்தீர்கள்?
கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாள் பகுதியில்தான் 2025 -ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று சுமார் 1000 பனை விதைகளை நடவு செய்தோம். இந்த ஊரில் உள்ள சிவன் கோயிலில் பனைமரம்தான் தலவிருட்சம். இந்த ஊரைச் சேர்ந்த அறிவியல் இயக்கத்தை வழி நடத்தும் டி.பாண்டுரங்கன் தொடர்பு கொண்டார்.
அவருடைய ஏற்பாட்டில் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பனை விதைகளை நட்டுள்ளோம். நெடுஞ்சாலைத்துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் சாலையிலிருந்து 5 அடி தள்ளி பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இந்த விழாவில் திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சபாபதி தம்பிரான் சுவாமிகளும் பங்கேற்று எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது.
கருப்பட்டி காபி போன்ற உணவகங்கள் அதிகரித்து வருவது பற்றி?
பொதுவாக வியாபாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூளைதான் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் எதை நோக்கிச் செல்கிறார்களோ அதை நோக்கித்தான் சந்தை இருக்கும். இப்போது கருப்பட்டி காபி. பொதுவாகவே நம்முடைய முன்னோர் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனங்கிழங்கு, நுங்கு, ஓலை உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இப்போது மெல்ல மனிதர்கள் திரும்புகிறார்கள். மக்களிடம் பனை மரத்தின் பொருள்களைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு மேலும் வர வேண்டும்.
பொதுவாக மரக்கன்று நடுவோர் பாராமரிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்ற புகார் இருக்கிறதே?
பனங்கொட்டையில் தண்ணீர், வளர்வதற்கான சத்து இருக்கிறது. இந்தக் கொட்டையைப் பூமியில் ஊன்றி விட்டால் 3 மாதத்துக்குப் பிறகு பூமியில் பனங்கிழங்கு உருவாகும். பனங்கிழங்கு 3 மாதத்துக்குப் பிறகு பனை மரக்கன்றாக வெளியில் தென்படும். பனையைப் பொறுத்தவரை பராமரிப்புக்கு அவசியமில்லை. பனை மரக்கன்று பூமிக்கு வெளியே வரும்போது கூடவே புல் வளராமல் இருந்தால் போதும்.
புல் வளர்ந்தால் அதை மேயும் ஆடும், மாடும் பனையைக் கடித்துவிடும். பனை ஓலை ஆடு, மாடுகளின் நாக்கைப் பதம்பார்த்துவிடும். அதனால் கடித்த வேகத்தில் அவை கீழே துப்பிவிடும். இப்படிக் கடித்த பனங்கன்று மீண்டும் துளிர்விடும்.
பொதுவாக பனையின் வேர் ஈரப்பதத்தைத் தாங்கி நிற்கும் அமைப்பைப் பெற்றுள்ளது. அதனால்தான் வறட்சியிலும் வளமாக வளரும் மரம் பனை மரம். சுமார் 20 ஆண்டுகள் கழித்துதான் பனை மரம் காய்க்கத் தொடங்கும். மக்களுக்கான எல்லாப் பலன்களையும் கொடுக்கும்.
பனையால் தாங்கள் பெறும் பயன்?
எனக்கு பனைதான் பெயரையும் புகழையும் தேடிக் கொடுத்தது. பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு என்னையும் அழைத்து இருந்தார்கள். திருவள்ளுவர் ஓலைச் சுவடியில்தான் திருக்குறளை எழுதியுள்ளார். பனை விதைகளை நடவு செய்து பனையைப் பாதுகாப்பதற்காக என்னை இங்கு கெளரவப்படுத்தினார்கள். இந்தக் காரணத்துக்காக மலேசியாவுக்கும் சென்றுள்ளேன்... கூடவே பனை விதைகளுடன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.