மறு ஜென்மத்திலும் தொடரும்...

'நாம் ஒரு பந்தை சுவரில் எறிந்தால் அது உடனே நம்மிடமே திரும்பி வரும். அந்தப் பந்து வெள்ளை நிறமானால், வெள்ளை நிறத்தில்தான் திரும்பி வரும்; கறுப்பு நிறமானால், கறுப்பு நிறத்திலேயே திரும்பிவரும்.
மறு ஜென்மத்திலும் தொடரும்...
Published on
Updated on
3 min read

'நாம் ஒரு பந்தை சுவரில் எறிந்தால் அது உடனே நம்மிடமே திரும்பி வரும். அந்தப் பந்து வெள்ளை நிறமானால், வெள்ளை நிறத்தில்தான் திரும்பி வரும்; கறுப்பு நிறமானால், கறுப்பு நிறத்திலேயே திரும்பிவரும். அதுபோல்தான் நம் வாழ்க்கையும். முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவ, புண்ணியங்கள் மறுஜென்மத்தில் நம்மிடமே வரும்'' என்று தத்துவார்த்தமாக வாழ்க்கையை விளக்குகிறார், நூற்றாண்டு கண்ட பிரபல ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன்.

அவரிடம் பேசியபோது:

'எனக்கு இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்தான் பூர்விகம்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பயின்றபோது, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான நேதாஜியின் வீரமான போராட்ட முறைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்.

ரேடியோவில் அவர் ஆற்றும் உரைகளை ஆர்வத்துடன் கேட்பேன்.

நேதாஜியின் மர்ம மரணத்தின்போது மிகவும் மனமுடைந்து போனேன். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன். இதற்காக, நாகப்பட்டினத்துக்குச் சென்று துப்பாக்கி ஒன்றையும் ரகசியமாகக் கொண்டு வந்தேன். அப்போது இரண்டாம் உலகப் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது.

நான் பி.ஏ. தேர்வில் ஆங்கிலத்தில் நூற்றுக்கு நூறு மார்க் பெற்றேன். அச்சமயத்தில் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ' ஹிந்து'வில் வேலைக்கு விண்ணப்பித்தேன்.

ஆசிரியர் குழுவில் சேருவதுதான் என்னுடைய விருப்பம் என்றாலும், விநியோகப் பிரிவில் வேலை கொடுத்தார்கள். பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. மாதத்தில் இருபது, இருபத்தைந்து நாள்கள் பயணம்தான். பயணங்களின்போது நான் நேருஜி, சர்தார் பட்டேல் உள்ளிட்ட தலைவர்களைப் பார்க்க முடிந்தது. ஏராளமான புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் அரிய பாக்கியம் கிடைத்தது.

திருநெல்வேலியில் 'ஹிந்து' மூத்த நிருபராகவும், 'சுதேசமித்ரன்' கிளை நிர்வாகியாகவும் இருந்த கே.டி.வரதராஜன் தன் மகள் பத்மாசனியை எனக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அவர் எனக்கு மனைவியாக அமைந்தது இறைவன் கொடுத்த வரம்தான். அலுவலகத்தில் ஒரு மாதம் பயணம் முடிந்து வந்தால், எனது அடுத்த பயணத்துக்குத் துணிமணிகளைத் தயார் செய்து வைத்திருப்பார் எனது மனைவி. எங்களுக்கு ஐந்து பிள்ளைகள். ஒரே பெண். குடும்பத்தைப் பொறுப்போடு கவனித்துக் கொண்டது அவள்தான். என்னுடைய தாயார் உதவியாக இருந்தார்.

வேலை காரணமாக, குழந்தைகளோடு விரும்பியபடி நேரம் செலவிட முடியாமல் போய்விட்டது என்பதில் எனக்கு அளவில்லாத வருத்தம் உண்டு.

எனது உறவினர்கள் ஸ்ரீனிவாச பாட்ராச்சாரியார், செளமிய நாராயணாச்சாரியார் ஆகிய இருவரது அபார ஜோதிடக் கலைத்திறனால், எனக்கு பத்து வயதிலேயே ஜோதிடம் மீது ஈர்ப்பு வந்தது. அவர்கள்தான் மிக நுட்பமான 'சோடச சத வர்க்கம்' என்ற அற்புத சூட்சும கணித முறையைச் சொல்லிக் கொடுத்தனர்.

'ஜோதிடம் என்பது ஒருவரது கிரகநிலைகளை ஆராய்ந்து பலன்களைத் தெரிந்துகொள்வதற்கு மட்டுமில்லை; மக்களின் அன்றாடப் பிரச்னைகளை எளிய பரிகாரங்கள் மூலமாகத் தீர்ப்பதற்கே!' என்ற கருத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவன் நான். அதனால்தான் பலன்களைத் துல்லியமாகக் கணித்து, சாமானியர்களும் செய்யத்தக்க வகையில் எளிய பரிகாரங்களைக் கூறுவேன்.

'ஜோதிடத்தை வணிக நோக்கத்துக்காக இல்லாமல், இலவச சேவையாகவே நீ செய்ய வேண்டும்' என்பது ஜோதிட அறிவை வழங்கிய மகான்கள் எனக்கு இட்ட ஒரு கட்டளையாகும். ஒரு சமயம் நான் 'ஹிந்து'வில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட நேர்ந்தது. அதனால், சென்னை திருவல்லிக்கேணியில் வசித்த எனது பெரிய குடும்பம் சிரமத்தில் இருந்தது. ஒரு நாள் ஒரு வட இந்தியர், தன்னுடைய ஜாதகத்துடன் என்னைப் பார்க்க வந்தார்.

நான் கூறிய பலன்களால் பெரிதும் மகிழ்ந்த அவர், ஒரு நூறு ரூபாய் நோட்டை தட்சணையாகத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அந்தப் பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டேன். அவருக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தேன். எனது வீட்டுச் சூழலைப் பார்த்துவிட்டு, 'இப்படியும் ஒரு மனிதரா?' என்ற வியப்புடன் அவர் புறப்பட்டுச் சென்றார்.

சில மணி நேரத்தில் அந்த வட இந்தியரிடம் பணியாற்றும் மேலதிகாரி ஒருவர் வந்து, 'உங்களுக்காக பம்பாயில் ஒரு மில்லில் ஃபேக்டரி மேனேஜர் வேலை காத்திருக்கிறது. இதோ அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். பயணச் சீட்டும், ஐந்தாயிரம் ரூபாயும் உள்ளது. உடனே வேலையில் சேரலாம்'' என்று சொல்லி, என்னிடம் கொடுத்தார். அவர் வாயிலாக, இறைவனின் கருணையை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். உடனே பம்பாய் சென்று வேலையை ஏற்றுக்கொண்டேன்.

'தினமணி'யில், 'காலம் உங்கள் கையில்' என்ற ஜோதிடப் பகுதி மூலமாக எனக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்தது. ஏராளமானவர்கள் தங்கள் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் மூலமாகப் பலன் பெற்றனர். பெங்களூரைச் சேர்ந்த ஒருவர், 'கடன் தொல்லையில் மூழ்கி, ஒன்பது பேர் கொண்ட தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறேன்' என்று கடிதம் எழுதி இருந்தார். உடனே நான் பதறிப்போய், 'தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்.

விவரமாக கடிதம் எழுதுகிறேன்' என்று என் சொந்த செலவில் தந்தி அடித்தேன். அவரது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து, 'கவலைப்பட வேண்டாம். இந்தப் பிரச்னை தாற்காலிகமானது. விரைவில் தீரும்'' என்று சொல்லி, சில ஆலோசனைகளும், பரிகாரங்களையும் கூறினேன். அவர்கள் தவறான எண்ணத்தைக் கைவிட்டனர். இது அப்போது

தினமணியில் செய்தியாகவும் வெளியானது.

ஒரு சமயம் திருச்சி சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவர், 'தான் செய்யாத குற்றத்துக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறேன்' என்றார். அந்த ஜாதகத்தை நான் ஆராய்ந்து பார்த்து, 'கவலைப்பட வேண்டாம்! இந்தத் தேதியில் நீங்கள் விடுதலை பெறுவீர்கள்' என்று ஒரு தேதியைக் குறிப்பிட்டு பதில் எழுதினேன். அந்தக் குறிப்பிட்ட தேதியில் நான் கூறிய அதிசயம் நிகழ்ந்தது! அன்று அவர் விடுதலையானார்.

அதன்பிறகு, 'குமுதம் ஜோதிடம்' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பு வந்தது. அதில், ஜோதிடம் மட்டுமில்லாமல், மிகவும் பழைமையான கோயில்கள் குறித்தும் எழுதினேன். அந்தக் கட்டுரைகளைப் படித்த வாசகர்கள், அந்தக் கோயில்களுக்குச் சென்று வழிபடத் தொடங்கினர். அந்தக் கோயில்களைப் புனரமைக்கவும் பலர் முன்வந்தார்கள். இதெல்லாம் எனக்கு மிகுந்த ஆத்ம திருப்தி அளித்த அனுபவங்கள்.

இறைவன் அருளால் 108 திவ்ய தேசங்களில் பலவற்றுக்கும் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கங்கை, யமுனை, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, அலகநந்தா, மந்தாகினி, பிரயாகை உள்ளிட்ட நதிகளுக்குச் சென்று புனித நீராடுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

மூன்று முறை நான் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை சென்று வந்துவிட்டேன். அந்த யாத்திரைகளின்போது எனக்கு மெய்சிலிர்க்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான இயற்கை சோதனைகள் மிகுந்த அந்தப் பயணங்களின்போது பல தருணங்களில் என்னை இறைவனே கைப்பிடித்து அழைத்துச் சென்றதை உணர்ந்தேன்.

ஒரு பயணத்தில் இருட்டிய பொழுதில் திடீரென்று கடும் பனி மழை பெய்ய ஆரம்பித்தபோது, சற்று தூரத்தில் ஒரு கூடாரம் இருந்தது; அதன் உள்ளே நாங்கள் நுழைந்தபோது ஒரு தம்பதியும், இரு குழந்தைகளும் மட்டுமே இருந்ததைக் கண்டபோது, அவர்களை சிவன்- பார்வதி, விநாயகர், முருகனாகவே உணர்ந்து மெய்சிலிர்த்து நின்றேன்.

கரூர் அருகே பழைமையான யோக நரசிம்மர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, ஒரு கல் மண்டபத்தில் இன்னும் சிலரோடு நின்று திருப்பணி குறித்துப் பேசிக்கொண்டே இருந்தோம். அப்போது யாரோ ஒருவர் எங்களை உடனே அந்த மண்டபத்திலிருந்து வெளியில் வரும்படி அழைப்பது போல இருக்கவே, உடனே வெளியில் வந்தோம். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கல் மண்டபம் இடிந்து விழுந்தது. நாங்கள் தப்பிப் பிழைத்தது இறையருள் அன்றி வேறென்ன? இதுபோன்று பல அனுபவங்கள்'' என்கிறார் ஏ.எம்.ராஜகோபாலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com