
மகாகவி பாரதியார் குறித்து பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவரது அரிய படைப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு அளித்தவர், பாரதி ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன். 91 வயதாகும் இவர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியியல் ஆய்வாளராக இடைவிடாது இயங்கி வருகிறார். இவரது பாரதி பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு "பாரதி விருது' வழங்கிப் பெருமைப்படுத்தியது. தினமணி நாளிதழ் 2018-இல் மகாகவி பாரதி விருது வழங்கிச் சிறப்பித்தது. மத்திய அரசு 2025-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கெளரவித்தது.
பாரதியியல் ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன் இதுவரை சாதித்தது குறித்தும், சாதிக்க வேண்டியது குறித்தும் மனம் விட்டுப் பேசுகிறார்:
'1960-ஆம் ஆண்டில், அதாவது என் 26-ஆவது வயதில் பாரதி நூல் பதிப்புப் பணிகளை மேற்கொண்டேன். எனக்கு இப்போது 91 வயது. சுமார் 60 ஆண்டுகள் பாரதி நூல்கள் பதிப்புப் பணிகளை மட்டுமே என் வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வருகிறேன். பாரதி பக்தி ஒன்றே எனக்கு வழிகாட்டியாக அமைந்தது.
ஆரம்ப காலத்தில் பாரதி தொகுப்பு நூல்களை மட்டுமே பிரசுரம் செய்து வந்தேன். பின்னர் பாரதியின் விஸ்வரூப தரிசனத்தை நன்கு புலப்படுத்திக் காட்டும் மகாகவி பாரதி வரலாற்று நூலையும், பின்னர் காலவரிசையிலான தொகுதிகளையும் வெளியிட்டேன்.
என்னுள் பாரதி சக்தியைப் பாய்ச்சிய முதல் நூல், எழுத்தாளர் கல்கி எழுதிய "பாரதி பிறந்தார்' என்ற நூல்தான். 1952-ஆம் ஆண்டில், அதாவது, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதுதான் ஏதேச்சையாக பாரதி எனக்குப் பரிச்சயமானார். அதுவே பின்னர் என் வாழ்க்கைப் பணியாக மாறிவிடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 1952-ஆம் ஆண்டிலிருந்து பாரதி நூல்கள் படிப்பாளனாக இருந்த நான், 1962-ஆம் ஆண்டிலேயே பாரதி நூல்களை வெளியிடும் பதிப்பாளனாக ஆனேன்.
1962-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரதியாரின் 81-ஆவது பிறந்தநாள் விழாவின்போது, அந்த மகாகவியின் மகிமைகளை விளக்கிக் காட்டும் நூல் ஒன்றை வெளியிட விரும்பினேன். அந்த வகையில், அறிஞர் பெருமக்கள் பாரதி பற்றி எழுதிய அரிய கட்டுரைகளைத் தொகுத்து "தமிழகம் தந்த மகாகவி' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். அந்த நூல் பல அறிஞர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது. அது தந்த உற்சாகத்தில் இனி பாரதி நூல்களை மட்டுமே பதிப்பது என்று உறுதி பூண்டேன்.
1979-ஆம் ஆண்டில் பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரர் சி.விஸ்வநாத ஐயரின் தொடர்பு எனக்குக் கிடைத்தது, நான் செய்த பெரும் பாக்கியம். சி.விஸ்வநாத ஐயரைக் கொண்டு, பாரதி வரலாற்று நூல் ஒன்றைக் கொண்டு வர ஆசைப்பட்டேன். அவரோ தமது வயதையும், உடல் நலத்தையும் கருதி பாரதி வரலாற்று நூலை என்னையே எழுதும்படி பணித்தார். அவரிடமிருந்த பாரதி பற்றிய அரிய ஆவணங்களையும் எனக்கு வழங்கினார். அவருடைய வழிகாட்டுதலின்படி பாரதிக்கான வரலாற்று நூலை எழுத முற்பட்டேன். அந்தப் பணி 1996-இல்தான் முடிவடைந்தது.
மகாகவி பாரதி பற்றி பலர் எழுதிய நூல்களைத் தொகுத்து, 1981-ஆம் ஆண்டில் "மகாகவி பாரதி நூற்பெயர்க் கோவை' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டேன். பாரதி நூற்றாண்டு விழாவின்போது தமிழக அரசின் சார்பில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாரதி நூல்கள் மற்றும் வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியை அமைத்து பாரதிக்குப் பெருமை சேர்த்தேன். பாரதியின் இலக்கியப் படைப்புகள் நூல் வடிவம் பெற்ற வளர்ச்சி வரலாற்றை "பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு' என்னும் தலைப்பில் 1989-ஆம் ஆண்டு வெளியிட்டேன்.
நூல் வடிவம் பெறாத பாரதியின் படைப்புகளைத் தேடிப்பெற்று, அவற்றை காலவரிசையில் "பாரதியின் படைப்புகள்' என்ற தலைப்பில் பதிப்பித்து வெளியிட ஆசைப்பட்டேன். அப்போது நான் படித்த நூல்களில், கேட்ட மேடைப் பேச்சுகளில் எல்லாம் பாரதி எழுத்துகளின் முன்னும் பின்னுமான பகுதிகளைக் கொண்டு, வாதாடுவதும், ஆராய்ச்சி செய்வதுமான போக்கைக் காண முடிந்தது.
பாரதியை முழு வடிவத்தில் கண்டு மகிழ வேண்டுமானால், அவருடைய படைப்புகளைக் கால நிரலில் ஆராய வேண்டும் என்பது என்னுடைய ஆதங்கம். அதன் காரணமாக, நான் பல விதங்களிலும் கடின முயற்சி செய்து, கால வரிசையில் பாரதியின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டேன். பாரதியின் இலக்கியங்களைப் பதிப்பித்து வந்த நான், எனக்குத் தெரிந்த அளவில், பாரதியின் படைப்புகளில் மண்டிக் கிடந்த சங்கீத விஷயங்களைத் திரட்டி, "பாரதியும் சங்கீதமும்' என்ற தலைப்பில் 1999-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டேன்.
என் பாரதி பணியில் ஆர்வமும், அக்கறையும் காட்டிய நண்பர்கள் சிலர், பாரதி ஆய்வு நூல்களில் நேர்ந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் நூல் ஒன்றை எழுதி வெளியிடும்படி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். பாரதி வரலாற்று நூல்களில் தவறான தகவல்கள், மயக்கம் தரும் வகையிலான செய்திகள், காலப்பிழைகள், ஊகத்தையே உண்மையாக்கும் கருத்துகள் போன்றவை பதிவாகிவிடக்கூடாது என்கிற கருத்தின் அடிப்படையில் 2009-ஆம் ஆண்டு "பாரதி ஆய்வுகள் : சிக்கல்களும் தீர்வுகளும்' என்கிற ஆய்வு நூலைப் பதிப்பித்து வெளியிட்டேன்.
பாரதியை ஒற்றாடிய தகவல்கள் அனைத்தும் முறையாக பிரிட்டிஷ் அதிகாரிகளால் ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதை மொழிபெயர்ப்பு நூலாக வெளியிட முயற்சி செய்தேன். பிரிட்டிஷ் இந்திய அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு பாரதியின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தனர் என்பதைப் புலப்படுத்திக் காட்டும் நூல் தொகுதிதான் "பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி' என்பது.
என்னுடைய பாரதி படைப்புகளின் 23 தொகுதிகளை சென்னையைச் சேர்ந்த அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்டுள்ளது. 2024, டிசம்பர் 11-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவற்றை தமது இல்லத்தில் வெளியிட்டு, என்னுடைய பாரதி பணிகளைப் பாராட்டிப் பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும்.
சாதிக்க முடியாத செயல்கள்:
நான் சாதிக்க நினைத்தும் சாதிக்க முடியாமல் போன சில காரியங்களும் உள்ளன.
பாரதி தேடல் பணி என்பது ஒரு தொடர் பணி. குறிப்பிட்ட கால எல்லைக்குள் முற்றுப்பெற்றுவிடும் பணி அல்ல. நான் மேற்கொண்ட பாரதி நூல்கள் பதிப்புப் பணிகள் மிகவும் கடினமான பணிகள் என்பதை நான் பாரதி எழுத்துகளைத் தேடி அலைந்தபோது நன்றாக உணர்ந்தேன். இனி, மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகளைப் பற்றிச் சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
பாரதியின் பெரும்பாலான எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டு இருந்தாலும், மேற்கொண்டு செய்து முடிக்கப்பட வேண்டும் என்று கருதிய சில பணிகளும் உள்ளன. பாரதியின் எழுத்துகள் வெளியான இந்தியா மற்றும் விஜயா ஆகிய பத்திரிகைகளின் இதழ்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. ஆங்கிலப் பத்திரிகைகளான "பாலா பாரத்' (சென்னை), "பாலா பாரத ஆர் எங் இந்தியா', "பாலா பாரத்' (புதுவை) மற்றும் ஷதர்மம்' ஆகிய பத்திரிகைகளின் பிரதிகள் பார்வைக்குக் கிடைக்கவில்லை.
மேற்குறித்த பத்திரிகைகளில் பாரதி எழுதியவை கிடைக்கப் பெற்றால், பாரதியின் பத்திரிகைப் பணி முழுமை அடையும் என்பதில் சந்தேகமில்லை. "காலவரிசையில் பாரதியின் நூல்கள் விவரக்கோவை' என்ற தொகுதி 1907-ஆம் ஆண்டு முதல் 1992 முடிய உள்ள பாரதி நூல்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு நூல் என்னால் உருவாக்கப்பட்டது.
இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு, இந்நாள் வரை வெளிவந்த பாரதி நூல்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டால், அந்தப் பணி பாரதியின் புகழுக்குக் கூடுதல் பெருமை சேர்க்கும் என்பது எனது கருத்தாகும். இந்த அரிய முயற்சியில் பாரதி ஆய்வாளர்கள் ஈடுபட்டு பாரதியின் இலக்கியப் பரப்பை வளப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்'' என்றார் சீனி.விஸ்வநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.