
எம். பாரதி
தனுஷ்கோடி சிவானந்தம். மும்பை மாநகர போலிஸ் கமிஷனராகவும், மகாராஷ்டிர மாநில காவல்துறையின் தலைவராகவும் பணியாற்றிய தமிழர். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமான காவல்துறைப் பணியில் இவர் சந்தித்த சவால்கள், புரிந்த சாதனைகள் பல. இவரது பாராட்டுதலுக்குரிய பணிகளுக்காக ஜனாதிபதியின் பதக்கம் பெற்றவர். இந்தியாவின் உள்நாட்டு, அயல்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
இவரது காக்கிச்சீருடை பணிக்காலத்தின் மிகச்சிறப்பான அம்சமே மும்பை மாநகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பல்வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அத்தனை நிழல் உலக தாதாக்களின் கொட்டங்களையும் அடக்கி, மும்பை மக்களும், வர்த்தகத்துறையினரும் அச்சமின்றி வாழ வழி செய்தவர் என்பதுதான். சிவானந்தம், மும்பை நிழல் உலக தாதாக்களை ஒடுக்கிய அனுபவத்தை புத்தகமாக எழுதி இருக்கிறார். 'தி பிரம்மாஸ்திரா அன்லீஷ்டு' என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்காக அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவரோடு ஒரு சந்திப்பு:
நீங்கள் காவல்துறைப் பணிக்கு வந்தது எப்படி?
பொள்ளாச்சியில் புகுமுக வகுப்பும், பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு, 1974-இல் கோயம்புத்தூரில் முதுகலைப் படிப்பினை முடித்தேன். உடனே, கோயம்புத்தூரில் புதிதாகத்துவக்கப்பட்ட ஒரு கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. 1975-இல் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்து தேர்வு எழுதினேன். ஐ.பி.எஸ். பணிக்கு நான் தேர்வானேன். ஐ.பி.எஸ். பயிற்சியை முடித்துவிட்டு, எனக்கு ஒதுக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிக்குச் சேர்ந்தேன்.
உங்களது காவல்துறை பணி எங்கே துவங்கியது?
மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா என்ற ஊரில் முதல் போஸ்டிங். அதுதான் சத்ரபதி சிவாஜியின் தலைநகரம். ஐ.பி.எஸ். பயிற்சியின்போதுதான் ஹிந்தி கற்றுக் கொண்டு, அதற்குரிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் சதாராவில் எல்லோரும் மராத்திதான் பேசுவார்கள். நான் சீக்கிரமே அவர்களோடு பேசிப் பழகி சரளமாக மராத்தி மொழி பேசக் கற்றுக் கொண்டுவிட்டேன்.
இந்திய நாட்டின் நிதித் தலைநகரம், வர்த்தகத் தலைநகரம் என்றெல்லாம் பெயர் பெற்ற மும்பை நகரம் இந்தியாவின் குற்றத் தலைநகரமாக மாறியதற்கு முக்கிய காரணம் என்ன?
உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. மும்பை இந்த நாட்டின் நிதித் தலைநகரமாகவும், தொழில், வர்த்தகத் தலைநகரமாகவும் இருப்பதால்தான் இங்கே 'ஆர்கனைஸ்டு கிரைம்' என்று சொல்லப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்தன. ஆர்கனைஸ்டு கிரைம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதீதமான வன்முறையின் வழியாக அபரிமிதமான பணம் சம்பாதிப்பது.
சட்டத்துக்குப் புறம்பான வகையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். உதாரணமாக, ஒரு கிலோ போதைப் பொருளைக் கடத்தினால் அதற்கு உலகச் சந்தையில் என்ன மதிப்பு தெரியுமா? ஒரு கோடி ரூபாய். நூறு கிலோ கடத்தினால் அதன் மதிப்பு நூறு கோடி ரூபாய். ஆள் கடத்தி பணம் பறிப்பது என்று எடுத்துக் கொண்டால், ஒருவரைக் கடத்திச் சென்று ஐந்து கோடி, பத்து கோடி, ஐம்பது கோடி கேட்டு மிரட்டுவார்கள். சிலர் உயிருக்கு பயந்து கேட்ட பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்த கரீம் லாலாதான்
மும்பையின் ஆரம்ப கால நிழல் உலக தாதா. அவருக்குப் பின் வந்தவர்களான ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் என்று பலர் கொடிகட்டிப் பறந்தார்கள். 1984-இல் தாவூத் இப்ராஹிம் வரவுக்குப் பிறகுதான் பல்வகையான குற்றச் செயல்கள் அதிகரித்ததுடன், தாதாக்களின் கும்பல்கள் தெருக்களில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது, பட்டப்பகலில் வெட்டு, குத்து, துப்பாக்கிச் சூடு என்று நடக்க ஆரம்பித்தது.
1990-களின் இரண்டாம் பாதியில் நிழல் உலக தாதாக்களின் குற்றச் செயல்பாடுகள் ரொம்பவும் அதிகமாகி அது தொழில், வர்த்தகத் துறையினரை கடுமையாகப் பாதித்தது. நடுத்தெருவில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டைப் பார்த்து மும்பை நகரமே மிரண்டது. 1998-ஆம் ஆண்டில் மட்டுமே இப்படி சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 101 பேர்! கத்திக் குத்து தனிக்கணக்கு.
1998-இல் மும்பை போலிஸ் குற்றப்பிரிவுத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டபோது உங்கள் மன நிலை எப்படி இருந்தது?
1998 ஜூன் மாதத் துவக்கத்தில் நான் நாக்பூரில் டி.ஐ.ஜி. ஆக இருந்தேன். எனது அதிகார வரம்புக்குட்பட்ட சந்திராபூர் என்ற ஊருக்கு அன்றைய மகாராஷ்டிர முதலமைச்சர் மனோகர் ஜோஷி வந்திருந்தபோது, அவரைச் சந்தித்தேன். அவர், 'அரசாங்கம் உங்களை ஒரு மிக முக்கியமான பொறுப்புக்காகத் தேர்வு செய்துள்ளது. சவால்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்' என்று கூறினார்.
அடுத்த சில நாட்களில் சிறப்பு ஐ.ஜி. ஆக எனக்கு பதவி உயர்வு கொடுத்து, உத்தரவு வந்தது. ஜூன் 29-ஆம் தேதி மும்பை கிரைம் பிராஞ்ச் தலைமைப் பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த சவாலான பொறுப்பினை ஏற்றுக் கொண்டபோது, இந்தப் பிரச்னைக்கு கடுமையான நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்பது மட்டுமே என் லட்சியமாக இருந்தது. அதன் பிறகு நான் எடுத்த நடவடிக்கைகளைத்தான் எனது புத்தகத்தில் விரிவாக எழுதி இருக்கிறேன்.
நம் சினிமாக்களில் நிழல் உலக தாதாக்களை பெரிய ஹீரோக்களாக சித்தரிக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அந்தப் படங்களையெல்லாம் பார்க்கிறபோது எனக்குச் சிரிக்கத்தான் தோன்றும். எனவே அவர்களை அப்படித்தான் சித்தரிப்பார்கள். பல படங்களில் லாஜிக் இருக்காது. 'நாயகனில்' கமலஹாசனின் நடிப்பை நான் ரசித்தேன். அந்தப் படத்தை பலமுறை பார்த்திருப்பேன். என்னுடைய கதாபாத்திரம் போல 'கம்பெனி' என்ற படத்தில் மோகன்லால் நடித்தார். அவர் நடிப்பு நன்றாக இருந்தது. அதற்காக அந்தப் படத்தில் இருந்த சினிமாடிக்கான விஷயங்களை எல்லாம் சரியென்று ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன?
நிழல் உலக தாதாக்களில் குற்றச் செயல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல, சமீபகாலமாக அதிகரித்துவரும் சைபர் குற்றங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சைபர் குற்றங்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நிகழும் தவிர்க்கமுடியாத விஷயம் எனலாம். போலிஸ், அரசாங்கத் தரப்பினரைவிட சைபர் குற்றம் செய்பவர்கள் தொழில் நுட்பரீதியில் முன்னேற்றத்தில் உள்ளனர். 2024-இல் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் பார்த்தால் சைபர் குற்றங்களால் ஏற்பட்டிருக்கும் இழப்பு 22 ஆயிரத்து 282 கோடி ரூபாய். எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு வேறு ஒரு கோடியில் இவர்களால் குற்றம் புரியமுடிகிறது. என்னுடைய மும்பை அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது, இந்தக் குற்றங்களில் உயிர்ச் சேதம் இல்லை என்பதில் கொஞ்சம் ஆறுதல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.