இதயம் சார்ந்த பல்வேறு வகை நோய்களில், உயர் ரத்த அழுத்தத்துக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் சிறப்பு உணவு பின்பற்றப்படுகிறது. அந்த உணவுக்கு 'டேஷ் டயட்' என்று பெயர். அதாவது, உயர் ரத்த அழுத்த நிலையிலிருந்து விடுபடுவதற்கான 'உணவு அணுகுமுறை' என்று பொருள் கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும் இந்த உணவு அணுகுமுறையானது, 1990, 1992-ஆம் காலகட்டங்களில் நிபுணர்களின் ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் கீழ் இயங்கும் 'இதயம், நுரையீரல் மற்றும் ரத்தம் சார்ந்த தேசிய நிறுவனம்' உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்து வந்தது.
அதில் ஓர் ஆராய்ச்சியில், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்குப் பழங்கள், காய்கள், பருப்புகள், குறைவான கொழுப்புள்ள பால், கொழுப்பற்ற சிவப்பு இறைச்சி போன்றவை கொடுக்கப்பட்டு, அவர்களின் ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்டன.
உணவு முறை மாற்றத்தால், உடலின் ரத்த அழுத்தத்தில் என்ன மாற்றம் நிகழும் என்று பார்க்க விரும்பியதால், மேற்கண்ட உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டவர்களுக்கு வேறெந்த வாழ்வியல் மாற்றங்களும் பரிந்துரைக்கப்படவில்லை.
பரிசோதனை முடிவில், வியக்கத்தக்க வகையில், அவர்களின் சிஸ்டோலிக் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. உயர் ரத்த அழுத்தம் இல்லாமல் இருந்தவர்களுக்கும் அவர்களின் சாதாரண ரத்த அழுத்த அளவு குறைந்திருந்தது. இந்த ஆராய்ச்சி முடிவைப் பின்பற்றியே இவ்வகை உணவுமுறை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, வாழ்வியல் மாற்றங்களுடன் பரிந்துரைக்கப்பட்டு, டேஷ் உணவு முறை பிரபலமானது.
இதனையடுத்து, ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் இந்த உணவு முறை வந்ததுடன், அமெரிக்காவில் உணவு முறை வழிகாட்டுதலில் மிக முக்கியமான மூன்று உணவுமுறை பட்டியலிலும் இடம் பிடித்தது. மற்ற இரண்டு உணவுமுறை, மெடிட்டரேனியன் உணவு என்னும் மத்திய தரைக்கடல் பகுதியில் பின்பற்றும் உணவு முறை மற்றும் சைவ உணவுமுறை என்பதாகும். அமெரிக்காவின் இதய கூட்டமைப்பும் இந்த உணவு முறையை வயது, பாலினம், மக்களினம் என்று அனைத்திற்கும் உட்பட்டு இருக்கும் சிறப்பு உணவுமுறை என்று அங்கீகரித்தது.
உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மட்டுமன்றி, இதயம் சார்ந்த பிற நோய்கள், ஸ்ட்ரோக் எனப்படும் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் அடைப்பு, நீரிழிவு நோயாளிகள், உடற்பருமன் சார்ந்த நோய்கள் உள்ளவர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த உணவு முறையில், ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சோடியம் அளவு 2.3 கிராம் இருக்க வேண்டும். இருப்பினும், நோயாளியின் ரத்த அழுத்தம் மிக அதிகமாகவும் தீவிர சிகிச்சை சார்ந்தும் இருக்கும் நிலையில், 1.5 கிராம் அளவில் குறைக்கப்படும். ஒரு நாளைக்கான கலோரி அளவு 2,000 கிலோ கலோரியாக வரையறுக்கப்படும்.
ஒரு நாளைக்கான உணவுப் பட்டியலில் கீழ்க்கண்டவாறு உணவுப் பொருள்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தானியங்கள்: ஒரு வேளைக்கு 45 - 50 கிராம் ( 1 கிண்ணம்) என்ற அளவில் 6 முதல் 8 முறை சாப்பிட வேண்டும்.
காய்கள்: ஒரு நாளைக்கு 50 - 75 கிராம் ( 1 கிண்ணம்) என்ற அளவில் 4 முதல் 5 முறை சாப்பிட வேண்டும்.
பழங்கள்: 50 கிராம் முதல் 75 கிராம் எடையுள்ள பழங்கள் அல்லது பழச்சாறு ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை சாப்பிட வேண்டும்.
குறைவான கொழுப்புள்ள பால் / பால் பொருள்கள்: ஒரு நாளைக்கு 1 கிண்ணம் பால் அல்லது தயிர் அல்லது பால் சார்ந்த பிற பொருள்கள் 2 - 3 முறைகள் சாப்பிட வேண்டும்.
கொழுப்பில்லாத மெல்லிய இறைச்சித் துண்டுகள் மற்றும் மீன்: ஒரு நாளைக்கு 100 - 150 கிராம் இறைச்சி அல்லது மீன் அல்லது 1 முட்டை சாப்பிட வேண்டும்.
வித்துகள் அல்லது கொட்டை உணவுகள்: ஒரு நாளைக்கு முக்கால் கப் அளவிற்குக் கொட்டை உணவுகள் (பாதாம், பிஸ்தா, முந்திரி, பிளாக்ஸ் விதை, பூசணி விதை, சியா விதை, எள், மணிலா போன்றவற்றை ) 4 முதல் 5 முறை சாப்பிடலாம்.
எண்ணெய் மற்றும் கொழுப்பு - 1 தேக்கரண்டி அளவு ஏதேனும் தாவர எண்ணெய் ஒரு நாளைக்கு 2 - 3 முறை சாப்பிடலாம்.
இனிப்புப் பொருள்கள்: 1 தேக்கரண்டி அளவு சர்க்கரை அல்லது பிற இனிப்புகள் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிடலாம்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமல்லாமல், சரியான அளவு ரத்த அழுத்தத்தைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பதற்கும் இந்த உணவு வகை உதவி செய்கிறது. எனவே, ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் மட்டும் பின்பற்றி
விட்டுப் பிறகு முறையற்ற உணவுப் பழக்கத்தைத் தொடர்ந்தால், ஆரோக்கியமான மாற்றம் இருக்காது. எனவே, இதயம் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருப்பதற்கும், உடல் எடை மற்றும் ரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவு சரியாக இருப்பதற்கும் டேஷ் உணவு முறையை வாழ்நாள் உணவு முறையாகப் பின்பற்றுவது நிரந்தரமான நன்மையைக் கொடுக்கும்.
இந்த உணவு முறையைத் தொடங்கிய ஆறாவது வாரம் முதல் 12 வாரங்கள் உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களைக் காணலாம். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இல்லாமல், போதுமான உடல் பயிற்சியுடன் இந்த உணவு முறையைக் கடைப்பிடித்தால், இதய ஆரோக்கியம் மேம்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் நிலைத்து நிற்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.