நல்லாசானாய் - வழிகாட்டியாய்!

பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.
நல்லாசானாய் - வழிகாட்டியாய்!
Published on
Updated on
2 min read

எஸ். எஸ். ஷாஜஹான்

பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் மு.றா.மு. முகம்மது காசிம்- கதிஜா பீவி தம்பதிக்கு மகனாக அப்துற் றஹீம் 1922 ஏப்ரல் 27-இல் பிறந்தார். 28 தன்னம்பிக்கை நூல்கள், 4 தன்னம்பிக்கை மொழிபெயர்ப்பு நூல்கள், 9 வரலாற்று நூல்கள், 21 இஸ்லாமிய நூல்கள், 4 மொழிபெயர்ப்பு நாவல்கள், ஒரு காவிய நூல், ஒரு நாவல், ஒரு ஆங்கில நூல் என 69 நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இவரது நூல்கள் வாசகனுக்கு நண்பனாய், நல்லாசானாய், நல்வழிகாட்டியாய் இன்றும் உற்ற வழி உணர்த்திக் கொண்டிருக்கிறது. வறுமையில் வாடிக் கொண்டிருந்தவரை வானத்தை நோக்கியும், தோல்வியில் துவண்டு கிடந்தவரை வெற்றியை நோக்கியும், சாகத் துணிந்தவரை வாழப் பயணிக்கவும், அனைத்தையும் இழந்துவிட்டதாக எண்ணி அழுது புலம்பியவரைப் புதிய மனிதராகவும் மாற்றிக் காட்டிய பெருமை அவரது எழுத்துகளைச் சாரும்.

'படிப்பு- எழுத்து', 'எழுத்து - படிப்பு' என வாழ்ந்து நிலைத்தவர், எழுத்தை மட்டுமே சார்ந்து நின்ற வாழ்நாள் சாதனையாளர், எந்தப் புத்தகத்திலும் தன்னுடைய புகைப்படத்தை இடம் பெறச் செய்ததில்லை- இவையெல்லாம் தமிழ்ப் படைப்பாளிகளிடமிருந்து அப்துற் றஹீமை வித்தியாசப்படுத்திக் காட்டும் தனித்துவச் சிறப்பாகும்.

ஐந்து வயதிலேயே அப்துற் றஹீம் அரபி மதரஸôவில் சேர்க்கப்பட, திருக்குர்ஆன் வசனங்களை ஓத, அரபு மொழியைக் கற்றார். தொண்டியில் தொடக்கக் கல்வியும், காரைக்குடியில் உயர்நிலைக் கல்வியும் புதுக்கோட்டை, சென்னையில் கல்லூரிக் கல்வியும் பெற்றார்.

சென்னையில் வேலையில்லாதவர்களுக்கு வேலை தேடித் தரும் அலுவலகத்தில் அப்துற் றஹீமுக்கு வேலை கிடைத்தது. பின்னர், அவர் கோவைக்கு மாற்றலாக, அங்கு சிறிது காலம் பணியாற்றியபோது அலுவலகம் மூடப்பட்டதால், வேலையை இழந்தார்.

தொண்டிக்கு அவர் வருகை தந்து, அப்போது தொடங்கப்பட்ட நூலகத்தில் பணிபுரிந்தார். ஆர்ம்ஸ்ட்ராங் எழுதிய 'லார்ட் ஆஃப் அரேபியா' என்ற ஆங்கில நூலை வாசித்தபோது, அவர் புதிய நம்பிக்கைகளைப் பெற்றார். அந்த நூலை 'அரேபியாவின் அதிபதி' என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தார்.

சென்னைக்குச் சென்ற அப்துற் றஹீம் வரலாற்று நூல்களை எழுதிய வே. சாமிநாத சர்மாவை சந்திக்க, அவரது உதவியுடன் சக்தி காரியாலய உரிமையாளர் வை.கோவிந்தன் அவரது நூலை அச்சிட்டு 1943-இல் வெளியிட்டார். பின்னர், 'வாழ்க்கையில் வெற்றி' என்ற நூலை அப்துற் றஹீம் எழுத, இதையும் சக்தி காரியாலயம் வெளியிட்டது.

'சுதந்திர நாடு' என்ற பத்திரிகையில் ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். 1948 ஜூன் 21-இல் 'யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்' என்ற பதிப்பகத்தையும், அதன்பின் 'யுனிவர்ஸல் பிரிண்டிங் ஹவுஸை'யும் அவர் ஆரம்பித்தார். யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸின் முதல் பதிப்பாக அவர் எழுதிய 'வாழ்க்கையில் வெற்றி' என்ற நூல் வெளிவந்தது.

காலம் செல்லச் செல்ல, இந்த நூல் விற்பனையில் மகத்தான வெற்றி பெற்றது. இதன்பின் எழுத்தே அவரது வாழ்க்கையானது.

1953-இல் 'திராவிட நாடு' என்ற தனது பத்திரிகையில் அண்ணா, 'ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். அங்கு அப்துற் றஹீம் நூல்கள் அவசியம் இடம் பெற வேண்டும்' என்று எழுதியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் உள்ளிட்டோர் தங்களது பத்திரிகைகளில் அப்துற் றஹீம் 1948, 1950-களில் எழுதிய 'வாழ்க்கையில் வெற்றி', 'முன்னேறுவது எப்படி', 'வாழ்வைத் துவங்கு' ஆகிய நூல்களை 1980-களில் தொடராக வெளியிட்டனர்.

நபிகள் நாயகக் காவியத்தை எழுதிக்கொண்டிருக்கும்போதே, 'இந்தக் கை இனி வேறு எந்த நூலையும் எழுதாது' என்று அடிக்கடி கூறுவார். எழுதிமுடித்தவுடன் உடல்நலம் குன்றி 1993 நவம்பர் 10-இல் மறைவுற்றார். இவரது நூற்றாண்டு விழா 2022 பிப் 26-இல் தொண்டியிலும், பன்னாட்டு ஆய்வரங்கம் 2022 மார்ச் 26-இல் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியிலும் கொண்டாடப்பட்டது.

1976-இல், சிங்கப்பூர், மலேசியாவில் கொடிகட்டிப் பறக்கும் 'ஹனீஃபா டெக்ஸ்டைல்ஸ்' உரிமையாளர் ஹனீஃபா சென்னையில் இவரது அலுவலகத்துக்கு வருகை தந்து, 'வாழ்க்கையில் வெற்றி' , 'வியாபாரம் செய்வது எப்படி?' ஆகிய இரு நூல்களையும் தலா 500 பிரதிகள் வாங்கினார்.

அப்போது அவர், 'இந்த நூலைப் படித்து உயர்ந்தேன். 500 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்காக இந்த நூல்களை வாங்குகிறேன். இவர்களில் 10 நபர்களாவது தொழிலதிபர்களாக மாறினால், அது எனக்கும் தங்களுக்கும் பெருமை சேர்க்குமல்லவா?' என்றார்.

'அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்' என்ற நூலை வெளியிட்ட அப்துற் றஹீமை பாராட்டி ஐஸன் ஹோவர் பாராட்டுக் கடிதம் எழுதியதோடு, 'தனது மாளிகையில் தங்கிப் பாராட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

அப்துற் றஹீமோ அழைப்பைச் சாமர்த்தியமாகத் தவிர்த்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com