ஸ்ரீ ராமானுஜர்: புதிய ஆவணப்படம்!

வைஷ்ணவ வட்டத்துக்கு வெளியிலும் ஸ்ரீ ராமானுஜரைக் கொண்டாடும் பக்தர்கள் ஏராளம்.
ஸ்ரீ ராமானுஜர்: புதிய ஆவணப்படம்!
Published on
Updated on
2 min read

வைஷ்ணவ வட்டத்துக்கு வெளியிலும் ஸ்ரீ ராமானுஜரைக் கொண்டாடும் பக்தர்கள் ஏராளம். அவரைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், தொலைக்காட்சித் தொடரும் கூட வந்திருக்கின்றன. இப்போது ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி இரண்டரை மணி நேர ஆவணப் படம் ஒன்றை எடுத்திருக்கிறார், பம்பாய் கண்ணன். எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என அறியப்படும் பம்பாய் கண்ணன் இதற்கு முன் எடுத்த ஸ்ரீரங்கநாதர் குறித்த "அரங்காயணம்' என்ற ஆவணப்படம் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது. அவரது அண்மைப் படைப்பான

ஸ்ரீ ராமானுஜர் ஆவணப்படம் எடுத்த அனுபவம் குறித்துப் பேசுகிறார்:

'அயோத்தியிலிருந்து புறப்பட்ட ராமனின் பதினான்கு ஆண்டு கதையான ராமாயணம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு நாற்பத்தெட்டு ஆண்டுகள் தென்னிந்தியா முழுவதும் பயணித்து, மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பிய சரித்திரம் பலருக்குத் தெரியாது. 14-ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோயில் சிதிலமடைந்து, விலை உயர்ந்த நகைகளும், இதரப் பொருள்களும் சூறையாடப்பட்டன.

உற்சவரான அரங்கன் பஞ்சலோக திருவுருவச் சிலையையும், கோயிலின் பூஜைப்பொருள்களையும், விலையுயர்ந்த அரங்கனின் ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு, அரங்கனின் அடியவர்கள் ஐம்பத்திரண்டு பேர் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டார்கள். 1323-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து தொடங்கிய இந்த அரங்கன் உலா, நாற்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து 1371-ஆம் ஆண்டு அரங்கன் ஸ்ரீரங்கம் திரும்பி வந்தபோது முடிவடைந்தது. அது குறித்து நான் எடுத்த ஆவணப் படமான அரங்காயணத்துக்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களும், வரவேற்பும் என்னை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்றன.

அப்போதுதான் ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் தோன்றியது. உடனே அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். ஏராளமான அரிய தகவல்கள் எனக்குக் கிடைத்தன. எனது மேற்பார்வையில் ஒளிப்பதிவாளரான ஜே. கணேசன் ஆவணப்படத்துக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி, இயக்கி இருக்கிறார்.

பல்வேறு ஊர்களிலும் இருக்கும் ராமானுஜரின் வாழ்க்கை தொடர்பான இடங்களுக்கே நேரில் சென்று, அந்த ஸ்தலத்துக்குரிய தகவல்கள் இடம்பெறும் வகையில் படம்பிடித்தோம். உதாரணமாக, ஸ்ரீரங்கத்தில் படம் பிடித்த காட்சிகளில், இடம் பெற்ற ஓர் அரிய தகவலைக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் ஸ்ரீ ராமானுஜர் இருந்த காலகட்டத்தில் கோயில் நிர்வாகம் குறித்து அவர் பல நெறிமுறைகளை உருவாக்கி இருக்கிறார். யார் யாருக்கு என்னென்ன கடமை, பொறுப்பு என்பதை எழுத்து மூலமாகவே ஆவணப்படுத்தி இருக்கிறார். அந்த ஓலைச்சுவடியில், கடைசியில் "இராமானுசன்' என்று தமிழில் கிரந்த எழுத்துகளில் தனது கையெழுத்தினைப் பதிவிட்டு இருக்கிறார். மதுராந்தகம் கோதண்டராமர் கோயிலில்தான் ஸ்ரீ ராமானுஜர் பஞ்ச சம்ஸ்காரம் என்ற சங்கு- சக்கர முத்திரையை தன் புஜங்களில் பெற்றிருக்கிறார். அந்த முத்திரைகள் இன்னமும் கோதண்டராமர் கோயிலில் இருக்கின்றன.

கர்நாடகாவில் பேலூருக்கு அருகில் தொண்டனூர் ஊர் மக்கள் பயன்படுத்துவதற்காக மன்னன் விஷ்ணுவர்த்தனிடம் சொல்லி, ஒரு குளம் உருவாக்கிக் கொடுத்தார் ஸ்ரீராமானுஜர். இன்றும் அந்தக் குளம் அந்த ஊர் மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கிக்கொண்டு உள்ளது என்பதைக் கண்டபோது மிகவும் வியப்பாக இருந்தது.

ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், பூவிருந்தவல்லி, மதுராந்தகம், ஸ்ரீரங்கம், கூரம், ஆழ்வார் திருநகரி, கர்நாடகாவில் பேலூர், மேல்கோட்டை, தொண்டனூர் என்று பல ஊர்களுக்கும் சென்று படம் பிடித்தது ஓர் நெகிழ்வான ஆன்மிக அனுபவமாக இருந்தது.

சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவில், நாலரை மணி நேர நீளத்துக்கு எடுத்த காட்சிகளை இரண்டரை மணி நேர ஆவணப் படமாக உருவாக்கி இருக்கிறோம். இதுவரை பார்த்தவர்கள் மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறார்கள். தேவையானவர்களுக்கு ஸ்ரீ ராமானுஜர் ஆவணப் படத்தை ரூ.1500/-க்கு பென் டிரைவில் அனுப்பி வைக்கிறோம்.

பல்வேறு சபாக்களும், ஆன்மிக அமைப்புகளும் தங்கள் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக இந்த ஆவணப் படத்தைத் திரையிடவேண்டும் என்றும் கேட்கிறார்கள். அவர்கள் விருப்பத்தையும் நிறைவேற்றி வைக்கிறோம்'' என்று குறிப்பிட்டார் பம்பாய் கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com