

சோழர் காலத்திலிருந்தே தஞ்சாவூர் கலைகளின் தலைநகரமாக இருந்து வருகிறது. இந்தப் பெருமை அடுத்து வந்த நாயக்கர் மற்றும் மராட்டியர் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது. தஞ்சை மராட்டிய மன்னர்களில், 1763 - 1787 வரை ஆட்சி செய்த இரண்டாம் துளஜா காலத்தில் இசைக் கலையும், நாட்டியக் கலையும் போற்றப்பட்டன.
இவரது காலத்தில் கோயில்களிலும், அரசபையிலும் இசை, நடனக் கலையை வளர்ப்பதற்காக திருநெல்வேலியிலிருந்து சகோதரர்களான கங்கைமுத்து நட்டுவனார், இராமலிங்கம் ஆகியோர் தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலிலும், அரண்மனையிலும் இருந்த நர்த்தகிகளுக்கு இசை, நாட்டிய பயிற்சியைப் பயிற்றுவித்தனர். இவர்களுக்கு மேல வீதியில் தேர் நிறுத்துமிடம் அருகே நிலத்தையும் துளஜா மன்னர் வழங்கினார்.
கங்கைமுத்து நட்டுவனார் இயற்றிய நவசந்தி கவுத்துவங்கள் பெரிய கோயில் சித்திரை மாத பெருந்திருவிழாவிலும், பஞ்சமூர்த்தி கவுத்துவங்கள் ஆருத்ரா தரிசன விழாக் காலத்திலும் சுவாமி புறப்பாட்டுக்கு முன்பாக பாடியும் ஆடியும் வந்தனர். கங்கைமுத்து நட்டுவனாரின் புதல்வரான சுப்பராயனின் நான்கு மகன்களே தஞ்சை நால்வர்கள் என்கிற சின்னையா (1802), பொன்னையா (1804), சிவானந்தம் (1808), வடிவேல் (1810) ஆகியோர்.
இந்நால்வரின் இசைத் திறமையை அறிந்த மன்னர் இரண்டாம் சரபோஜி இவர்களை கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரிடம் இசைப் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். இந்நால்வருக்கும் மன்னர் இரண்டாம் சரபோஜி அரசவையிலேயே அரங்கேற்றம் நிகழ்த்தி, முத்துஸ்வாமி தீட்சிதருக்கு நவரத்னமாலா என்ற 9 கீர்த்தனைகளை இயற்றி, குருவுக்குக் காணிக்கையாக வழங்கினர். இசைக் கலையில் புகழ்பெற்று விளங்கிய நால்வரும் நாட்டியக் கலையிலும் பெரும்புகழ் அடைந்தனர் என்கிறார் இப்பரம்பரையில் எட்டாவது தலைமுறையைச் சேர்ந்த கே.பி.கே. சந்திரசேகரன். தொடர்ந்து நம்மிடம் அவர் பகிர்ந்தது...
'கடந்த 19 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேல் ஆகிய நால்வரே கோயில்களிலும், அரசபையிலும் இருந்த நடனக் கலையை அரங்கக் கலையாக மாற்றியமைத்தனர். அரங்கக் கலைக்கேற்ப அடவு முறைகள், அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், பதவர்ணம், பதம், ஜாவளி, ஸ்வரஜதி, தில்லானா போன்ற நடன உருப்படிகளை உருவாக்கி, ஒழுங்கான அட்டவணை முறையை வகுத்து, அதன்படி நடனம் அமைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அதாவது, நாட்டியத்துக்கென முறையான ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதைப் பரவச் செய்த பெருமை தஞ்சை நால்வரையே சாரும். இந்த மரபு இப்போதும் தொடர்கிறது.
இதனிடையே இவர்களது இசை, நாட்டியத் திறமையை அறிந்த மைசூர் மகாராஜா அழைப்பின் பேரில் சின்னையா மைசூர் அரண்மனையின் ஆஸ்தான வித்வானாகப் பணியாற்றினார். இதேபோல, வடிவேலுவை திருவனந்தபுரம் சுவாதி திருநாள் மகாராஜா அழைத்து, தனது அரண்மனையின் ஆஸ்தான வித்வானாக நியமித்தார். சுவாதி திருநாள் மகாராஜாவின் வேண்டுகோளை ஏற்று, கதகளியையும்,
பரதநாட்டியத்தையும் இணைத்து மோகினி ஆட்டம் என்கிற நடனத்தை உருவாக்கினார்.
மேலும், வயலின் இசைக்கருவியை முதன் முதலில் கர்நாடக இசைக்குப் பயன்படுத்தி சுவாதி திருநாள் மகாராஜாவிடம் பாராட்டும் பரிசும் பெற்றார். தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் அரண்மனையில் இசை, நாட்டியப் பணியை பொன்னையா, சிவானந்தம் மேற்கொண்டனர்.
இவர்களது பரம்பரையில் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் எனது தந்தை இசைப் பேரறிஞர் தஞ்சாவூர் கே.பி. கிட்டப்பா பிள்ளை (1913 - 1999). இவர் தனது இசைக் கலையை தந்தை கே. பொன்னையா பிள்ளையிடமும், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரி வழிவந்த நடேச சாஸ்திரியிடமும் பயின்றார். கே.பி. கிட்டப்பா பிள்ளை பல ஆண்டுகளாக நின்று போன நவசந்தி கவுத்தங்கள், பஞ்சமூர்த்தி கவுத்தங்கள், சூளாதி பிரபந்தம் போன்ற அரிய வகை உருப்படிகளையும், சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தையும் மீட்டுருவாக்கம் செய்தார்.
இவரிடம் பரதம் பயின்ற பத்மலோச்சனி, நடிகைகள் வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, சுதாராணி ரகுபதி, நர்த்தகி நடராஜ் மற்றும் பல மாணவர்கள் நாட்டியக் கலையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தனர். பெங்களூரு, சென்னையில் ஏராளமான நாட்டியக் கலைஞர்களை உருவாக்கிய இவர் 1999, அக்டோபர் 30-ஆம் தேதி காலமானார்.
இப்பரம்பரையில் எட்டாவது தலைமுறையைச் சேர்ந்த நான் திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பரதநாட்டிய ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த ஆண்டு ஓய்வு பெற்றேன். மேலும், தஞ்சாவூர் மேல வீதியிலுள்ள பூர்வீக இல்லத்தில் பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் நாட்டிய பயிற்சிப் பள்ளியை தந்தை மறைவுக்குப் பிறகு முன்னெடுத்துச் செல்கிறேன். அடுத்த தலைமுறையான எனது மகள் சாருமதி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே பரதநாட்டியக் கலைஞராகவும், பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.
பொறியியல் பட்டப்படிப்பு படித்து வரும் மகன் சபாபதி மிருதங்க வித்வானாகவும் திகழ்கிறார். இப்போதும் நாங்கள் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா, ஆருத்ரா தரிசனத்தின்போது நாட்டிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறோம்'' என்கிறார் சந்திரசேகரன்.
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய அரசு நிதியுதவியுடன் கிட்டப்பா நாட்டியாலயா மூலம் அக்டோபர் 30 -ஆம் தேதி கே.பி. கிட்டப்பா பிள்ளை நினைவு நாள் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழாண்டு 19 -ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள சங்கீத மஹாலில் கே.பி.கே. கிட்டப்பா பிள்ளை நினைவு நாட்டிய நிகழ்ச்சி அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.