மாரத்தான் ஓடிய பாடகி!

டிசம்பர் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இசைக்கலைஞர்கள் அனைவரும் எதிர்வரும் இசைவிழாக் கச்சேரிகளுக்காக தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
மாரத்தான் ஓடிய பாடகி!
Published on
Updated on
2 min read

டிசம்பர் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இசைக்கலைஞர்கள் அனைவரும் எதிர்வரும் இசைவிழாக் கச்சேரிகளுக்காக தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இசை விழாவுக்குத் தயாராகிக் கொண்டே, ஜனவரியில் சென்னையில் நடக்கவிருக்கும் மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்பதற்காக ஓட்டப் பயிற்சியில் இறங்கி இருக்கிறார் கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி கிரீஷ். இவருக்கு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்கும் ஆர்வம் வந்தது எப்படி? அவரது ஓட்ட அனுபவங்கள் என்ன? இதோ அவரே பேசுகிறார்:

'நாலைந்து வருடங்களுக்கு முன்னால் என்னிடம் "மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்கிறீர்களா?' என்று யாராவது என்னிடம் கேட்டிருந்தால், நான் மிரண்டு போயிருப்பேன். அப்போதெல்லாம் எனக்கு அதுபற்றிய எண்ணம் துளியும் கிடையாது.

ஒரு நாள், உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். வழக்கமாக உடற்பயிற்சி என்றால், கையை, காலை ஆட்டி, குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்வதுதானே! அப்படித்தான் எனது உடற்பயிற்சியும் ஆரம்பித்தது.

அதன்பின் தினமும் காலையில் நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சி என்று விரிவடைந்தது. அன்றாட நடைப்பயிற்சியின் பலனாக, நாள் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியோடும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடிவதை நான் உணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து செய்ததன் காரணமாக, காலையில் வாக்கிங், ஓட்டம் என்பது என் தினசரி வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமாகிவிட்டது.

1922 ஜூலை மாதம் சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் பற்றிய அறிவிப்பைப் பார்த்தபோது, நாமும் கலந்துகொண்டால் என்ன என்று ஆர்வம் ஏற்பட்டது. என்னைப் பார்த்து, என் மகள் விஷ்ருதி, "அம்மா! நானும் உன் கூட மாரத்தானில் ஓடுகிறேன்!' என்றாள். இருவரும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க பெயர்களைப் பதிவு செய்தோம்.

அதன் பிறகு, தினமும் காலை ஐந்தரை மணிக்கு ஆரம்பித்து, சுமார் ஒரு மணி நேரம் போல ஓடினோம். கொஞ்சம் கூடுதலாக ஸ்டிரெச்சிங் உடற்பயிற்சிகள் செய்தோம். அவ்வளவுதான். மாரத்தானுக்காக சிறப்பான பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு ஆர்வத்துக்காக ஓட விரும்பினேன். அவ்வளவுதான்.

டிசம்பர் ஆரம்பித்தவுடன், கச்சேரிகள் நிறைய இருந்ததால், தினமும் ஒழுங்காக ஓடுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனாலும் முடிந்தவரை காலையில் ஓடினேன். ஜனவரி மாதம் எட்டாம் தேதி மாரத்தான் நாள். அதற்கு மூன்று, நான்கு நாள்கள் முன்பிருந்தே திருவையாறில் தியாகராஜ உத்சவம், சென்னையில் கச்சேரி என்று பிசி. மாரத்தான் ஓட்டத்துக்கு முந்தைய தினம் காலையில் ஒரு லெக்சர் டெமோ நிகழ்ச்சி. அதை முடித்துவிட்டு வந்தால் மாலையிலும் கச்சேரி இருந்தது. கச்சேரி முடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி, சாப்பிட்டுவிட்டு, தூங்கப் போனபோது ஏறத்தாழ நள்ளிரவு.

மறுநாள் நானும், என் மகளும், அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி, ஐந்தரை மணிக்கு மாரத்தான் துவக்க இடமான நேப்பியர் பாலத்தை அடைந்தோம். அந்த அதிகாலை நேரத்திலும், ஆயிரக்கணக்கில் அங்கே பல்வேறு வயதினரும், ஆண்களும், பெண்களும் கூடி இருந்ததைப் பார்த்தபோது, ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும், இவர்களோடு சேர்ந்து நாமும் பங்கேற்கிறோம் என்று பெருமையாகவும் இருந்தது.

நேப்பியர் பாலத்தில் துவங்கி, அடையாறு, மத்திய கைலாஷ் கோயில், தரமணி வரை ஓடி மாரத்தானில் 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தோம். வழியில் ஆங்காங்கே பொது மக்கள் கூடி நின்று, ஓடியவர்களை உற்சாகப்படுத்தினார்கள். குடிநீரும், குளுக்கோஸ் கலந்த தண்ணீரும் கொடுத்தார்கள்.

நான் பத்து கிலோ மீட்டர் தூரம் ஓடி முடிக்க சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் ஆனது. நானும் என் மகளும் ஒரே சமயத்தில்தான் புறப்பட்டோம் என்றாலும், நான் ஓடி முடித்து சிறிது நேரம் கழித்துத்தான் அவள் ஓட்டத்தை முடித்தாள்.

எங்கள் குடும்ப நண்பரான ஜெயேந்திரன் என்பவர்தான் எங்களுக்கு ஆரம்பம் முதலே ஊக்கமளித்து, எப்படி ஓட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

இந்த முதல் மாரத்தான் ஓட்ட அனுபவம் கொடுத்த ஊக்கம் மற்றும் உற்சாகம் அடுத்த மாரத்தான் அறிவிப்பு வருமா என ஆர்வத்துடன் எங்களை எதிர்பார்க்க வைத்தது. அதன் பிறகு மூன்று முறை சென்னை ஃப்ரெஷ் ஒர்க்ஸ் மாரத்தான், டெக்கத்தலான் மாரத்தான், என்.ஈ.பி. ஸ்போர்ட்ஸ் மாரத்தான், காவேரி கேன்சர் விழிப்புணர்வு மாரத்தான், என வரிசையாக பங்கேற்று வருகிறேன்.

அது மட்டுமில்லை. சென்னை தவிர பெங்களூரில் நடக்கிற மாரத்தானிலும் நான் பங்கேற்றிருக்கிறேன். அதே போல பத்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆரம்பித்து, இப்போது 21 கி.மீ. அரை மாரத்தான்களில் பங்கேற்று வருகிறேன். வரும் ஜனவரியில்கூட 21 கி.மீ. ஓடுவதற்கு தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறேன். மழை நாள்களில் வீட்டுக்குள்ளேயே டிரெட் மில்லில் ஓடிப் பயிற்சி செய்கிறேன்.

இனிமேலும் நான் தொடர்ந்து மாரத்தான் ஓட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீங்கள் என்ன வேலை செய்பவராக இருந்தாலும், ரிடையர் ஆனவர்களாக இருந்தாலும் கூட, ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அத்தியாவசியமானது.

எனவே, தினசரி உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஆகையால், வாக்கிங், ஜாக்கிங் அல்லது ஓட்டத்தை உங்கள் காலை தினசரி வழக்கம் ஆக்கிக் கொள்ளுங்கள்! அதன் பிறகு அதன் பலனை முழுமையாக நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்'' என்று தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனை கூறுகிறார் காயத்ரி கிரீஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com