கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அதர்ஸ்'. ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் அபின் ஹரிஹரன். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் நவம்பர்
7-ஆம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது, 'இந்திய மருந்து வணிகச் சந்தை, மிகப் பெரியது. இங்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மருந்து வியாபாரம் நடைபெறுகிறது.
இதில், 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியான மருத்துவச் சந்தையில் நிகழும் சம்பவம் ஒன்றைத் தழுவி இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கருத்தரித்தல் மூலம் பிறக்கும் குழந்தைகளின் உடலில் ஒரு கால கட்டத்துக்குப் பிறகு மாற்றங்கள் நிகழ்கின்றன.
அது என்ன மாதிரியான பிரச்னைகளை அடுத்து வரும் தலைமுறைக்கு உருவாக்கப் போகிறது என்ற பதட்டம் உண்டாகிறது. அதைப் பற்றிய போலீஸ் விசாரணைதான் கதை. அது காவல்துறைக்கு சவால் என்பதை விட, தலைவலியாகவும் உருவெடுக்கிறது. சில குற்றங்களை பின் தொடரும் காவல்துறை அதை நடக்க விடாமல் முறியடிப்பு செய்கிறது.
சில குற்றங்களை ஒன்றுமே செய்ய முடியாத சூழல் வருகிறது. இப்படியான காலகட்டத்தில் நகருகிறது கதை. தர்ம நியாயத்துக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, இறுதியில் மனம் திருத்தியது யாரை.... இந்தச் சமூகத்துக்கு சொல்ல வந்த நீதி என்ன.... இதுதான் பரபர காட்சிகள். அதற்கான திடுக் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்லும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.