'சாமானியன் ஒருவனுக்கு பிரச்னை என்றால், அவன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவான். போலீஸ் ஸ்டேஷனுக்கே பிரச்னை என்றால் போலீஸ் எங்கே போகும்? என்பதுதான் ஒன்லைன்.
ஒரு குற்றம், அதை நிகழ்த்திய குற்றவாளி யார் என்று புலனாய்வு செய்யும் கதையில் முன்னும் பின்னுமாகச் சில சம்பவங்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களும் பிணைக்கப்படுகின்றனர்.
பல சுவாரஸ்யமான திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை நாற்காலி நுனியில் அமரவைப்பதோடு, கதையின் முடிச்சு அவிழும்போது வாழ்க்கைக்கான நீதியையும் முன்வைக்கிறது 'ரைட்'. புதுமுக இயக்குநரான சுப்பிரமணியன் ரமேஷ்குமார், நடிகர்கள் அருண்பாண்டியன், நட்டியுடன் சினிமாவில் பயணம் செய்தவர். இப்போது அவர்களை வைத்தே தனது முதல் படத்தை இயக்குகிறார்.
'ரைட்' எதன் பிரதிபலிப்பாக இருக்கும்?
அருண்பாண்டியன் ஒரு சாமானியர். அவர் மகனைக் காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்க போவார். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் வேறு நிலைமை. அங்கு அசாதாரண நிலை நிலவுகிறது. அந்தச் சூழலைக் கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர் கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷக்கு அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம்.
அது அந்த நேரத்தில் அழகாக இருக்கும். கிரீடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும். ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கிரீடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையைக் கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்குத் தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க... பலர் சாமியாராகத் திரிகிறார்கள். சிலர் பைத்தியமாகிறார்கள்.
என்னைக் கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உயிரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்கு கை கூடி வருகிறது. அதைப் பல கோணங்களின் வழியே கடத்தியிருக்கிறேன். தர்ம நியாயத்துக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, இறுதியில் மனம் திருத்தியது யாரை.... இந்தச் சமூகத்துக்குச் சொல்ல வந்த நீதி என்ன.... பரபர சம்பவங்கள்.
அதற்கான திடுக் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்கின்றன. ரைட் என்பது எல்லோரும் கடந்து வரும் சொல். அது இங்கே எங்கே நிற்கிறது என்பதுதான் கதை.
கதைக்குள் அருண்பாண்டியன், நட்டி இருவரும் வந்து எப்படி உருவெடுத்திருக்கிறார்கள்...?
எப்போதுமே நட்டி என்றாலே அவர்தான் போலீஸாக இருப்பார். இது தமிழ்ச் சினிமாவின் எழுதப்படாத விதி. ஆனால், இந்த முறை அவர் வேறு மாதிரி இருப்பார். நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருப்பார். அதற்கெனத் தனி லுக், மொழி, பாவனை எல்லாமே புதிதாக இருக்கும்.
இன்னொரு பக்கம் அருண்பாண்டியன் சார். அவர் பார்க்காத வேடங்கள் இல்லை. கிட்டத்தட்ட 150 படங்கள் நடித்து மைல் கல்லைத் தொட்டு விட்டார். அவர்தான் இந்தக் கதைக்குப் பொருத்தம் என்று கதை எழுதும் போதே எழுதி விட்டேன். அந்தளவுக்கு இந்தக் கதையில் பொருத்தமாக இருந்தார்.
இருவருமே கதையின் ஆகப் பெரும் சுவாரஸ்யம். பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனா தினமும் ஏழெட்டுப் பேரை புதிதாகச் சந்தித்துப் பேசினாலே அதிகம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட புழங்க வேண்டியிருக்கும்.
அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேத்த மாதிரி இயங்குவதே சிரமமானது. இது சாமானிய போலீஸ் அதிகாரியின் கதை. இது ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் கதையும் கிடையாது. நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு.
நிச்சயம் 'சிங்கம்', 'சாமி' படங்கள் மாதிரி கிடையாது. மனிதம் பேசுகிற ஒரு கதை. கதை அனுமதிக்கிற, பொருந்துகிற அளவுக்குத்தான் ஆக்ஷன். படத்தில் ஹீரோயின், காதல் என்ற வழக்கமான சம்பிரதாயங்கள் எல்லாம் கிடையாது. கதைக்கு என்ன வேண்டுமோ அது மட்டுமே இருக்கும்.
லைன் ஓ.கே... ரசிகர்களிடம் கதை பேசப் போவது என்ன?
இந்தியக் காவல்துறையில் பணியாற்றும் ஒருவன், பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை தீவிரமாக யோசித்து திரைக்கதை எழுதியிருக்கிறேன்.
உண்மையில், பிளாட்ஃபாரத்தில் இளித்துக் கொண்டு நிற்கும் போலீஸ்காரர்களை யார் உருவாக்குகிறார்கள்... சாலைகளிலும் கடைகளிலும் அனுதினம் பார்க்க நேரிடும் போலீஸ்காரர்களைக் கேவலமாகத் திட்டும் நமக்கு, பெரும் அரசியல் பேரங்களிலும் கலவரங்களிலும் கொலைகளிலும் பங்கு போட்டு நடத்தும் காவல் அதிகாரிகளை தெரிவதே இல்லை. குற்றங்கள்தான் இந்தக் கதையின் பிரதானம். அதன் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். போலீஸ் கதைகளில் 100க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது.
அதை ரிப்பீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும். நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதை இயக்க முடியும். ஒரு ஆளை நாம் சந்திக்க மட்டும்தான் செய்வோம். ஆனால், போலீஸ் அந்த ஆளை ஊடுருவிப் பார்க்கும். கண்காணிக்கும். விட்டுட்டு வேடிக்கை பார்க்கும். பிறகுதான் பிடிக்கும். அதற்கே ஒரு பிரச்னை என்றால் எப்படி... பாருங்கள், சுவாரஸ்யம் குறையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.