
நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாம், ஐரோப்பாவின் பழைமையான துறைமுகமும்கூட! இங்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து நாள் நடக்கும் "செய்ல் ஆம்ஸ்டர்டாம்' எனும் பிரம்மாண்டமான கப்பல் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் பல நாள்கள் பயணித்து, முன்னெப்போதுமில்லாத வகையில் இந்த ஆண்டு 800-க்கும் அதிகமான கப்பல்கள் வந்திருந்தன. நிகழ்ச்சியை சுமார் 25 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்.
ஆம்ஸ்டர்டாம் நகரத்தின் 700-ஆவது ஆண்டுவிழா 1975-இல் நடைபெற்றபோது, கப்பல்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஏழு லட்சம் மக்கள் திரண்டனர். இதையடுத்து, கப்பல் திருவிழாவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவதற்காக, "செய்ல் ஆம்ஸ்டர்டாம் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கப்பல் திருவிழாவுக்கு இது பொன்விழா ஆண்டு.
1980-ஆம் ஆண்டில் இரண்டாவது கப்பல் திருவிழாவை 10 லட்சம் பேர் பார்வையிட்டனர். 2015-ஆம் ஆண்டில் 23 லட்சம் பேர் பார்வையிட்டனர். கரோனா தொற்று காரணமாக 2020-இல் விழா ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த ஆண்டு விழா நடத்தப்பட்டது.
இதற்காக, ஆம்ஸ்டர்டாம் துறைமுகப் பகுதியில் கப்பல்கள் வரிசையாக அணிவகுத்து நங்கூரம் பாய்ச்சி நின்றன. இவற்றின் நகர்வுகளுக்கு உதவும் வகையில், இரண்டு பிரம்மாண்டமான கடற்பாலங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டன.
பார்வையாளர்கள் கப்பல்களின் உள்ளே ஏறிச் சென்று பார்வையிடுவதற்கு சிரமம் இல்லாமல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சில கப்பல்கள் கடலில் நகர்ந்தபடியே இருந்தன. ஏராளமான சிறிய, பெரிய படகுகளில் பயணித்து, கப்பல்களுக்குச் சென்று பார்க்கவும் முடிந்தது.
கப்பற்படைகளின் சிறிய கப்பல்கள், கடல்சார் பல்கலைக்கழகங்களின் பயிற்சிக் கப்பல்கள், தனியார் கப்பல்கள், பழைமையான கப்பல்கள், நவீன கப்பல்கள், சிறிய சொகுசுக் கப்பல்கள் என பலவகையான கப்பல்கள் அணிவகுத்து நின்றன. இரவு நேரங்களில் சில கப்பல்களில் வண்ண விளக்கு அலங்காரம், இசை, நடனம் மற்றும் இதர கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வண்ணமிகு வாணவேடிக்கையும் நடைபெற்றது.
தங்களது அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குளாகும் என பயந்து ஆம்ஸ்டர்டாம் துறைமுகப் பகுதியில் வசித்தோர் தற்காலிகமாக வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர்.
ருசிகரத் தகவல்கள்
பெரு நாட்டைச் சேர்ந்த பி.ஏ.பி.யூனியன் என்ற கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பத்தாயிரம் கி.மீ. தொலைவு பயணித்து, ஆம்ஸ்டர்டாமுக்கு வந்தது.
கேம்பர் கோகே என்ற கப்பல் 14-ஆம்நூற்றாண்டில் கடைப்பிடிக்கப்பட்ட கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உலோக ஆணி கூட பயன்படுத்தாமல், மரச்சட்டங்களைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது.
எல் கலீன் என்ற கப்பல், 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு போர்க் கப்பலைப் போலவே உருவாக்கப்பட்டது. கடலில் கண்காட்சிகள் நடத்துவதற்காக உருவாக்கப்பட்டபோதிலும், செட் நிர்மாணிக்கப்பட்டு பல கடற்கொள்ளையர்கள் பற்றிய படங்களும், ஆவணப்படங்களும் இங்கே படம் பிடிக்கப்பட்டுள்ளன.
சில கப்பல்கள் மிதக்கும் பல்கலைக்கழகங்களாகவே செயல்படுகின்றன. இதில் மாணவர்கள் பல நாடுகளுக்கும் கடலில் பயணித்துக் கொண்டே தங்கள் படிப்பைத் தொடர்வார்கள். மாதக்கணக்கில் கரையைத் தொடாமலேயே இந்தக் கப்பல்கள் பயணம் செய்யும்.
1896-இல் கட்டப்பட்ட பிரெஞ்சு கப்பலான பெலெம், தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. பாரம்பரிய கடல் கலாசாரத்தையும் கடைப்பிடித்துக் கொண்டு, நவீன கடல்சார் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.
கப்பல்கள் நவீன எல்.இ.டி. விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தால், இரவு நேரங்களில் ஒளிர்ந்தன.
நோவா விக்டோரியா, வெரா குரூஸ் இரு கப்பல்களிலும் ஜி.பி.எஸ்., கருவிகள், ராடார், மோட்டார் இஞ்சின் போன்ற நவீன உபகரணங்கள் எதுவுமே கிடையாது. 15-ஆம் நூற்றாண்டு கப்பல்களைப் போல வானில் உள்ள நட்சத்திரங்கள், திசை காட்டும் கருவி, பாய் மரங்கள் ஆகியன மட்டுமே கொண்டு இயங்கிவருகின்றன.
முந்தைய கப்பல் திருவிழா ஒன்றின்போது, நிறைமாதக் கர்ப்பிணிக்குப் பிரசவ வலி எடுத்து, கப்பலிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். மறுநாள் தலைப்புச் செய்தியான அந்தக் குழந்தைக்கு பத்திரிகைகள் சூட்டிய பெயர் "செய்ல் பேபி'.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மறு சுழற்சி பொருள்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட ஒரு கப்பல் இந்த வருட நிகழ்வில் கலந்துகொண்டது.
திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் உதவிகளைப் புரிந்தனர்.
பெரும்பாலான கப்பல்களில் இலவசமாக உள்ளே சென்று பார்க்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன. சில கப்பல்களில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பார்வையாளர்களுக்காக நிறைய இடங்களில் குடிநீர் வசதி, பொத்தானை அழுத்தினால் இலவசமாக "சன் ஸ்க்ரீன் லோஷன்' வழங்கும் இயந்திரங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. கழிவறைகளில் ஒருமுறை பயன்படுத்த ஒன்றரை யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 150 ரூபாய்) கட்டணம். உணவகங்களில் சாப்பிடாமல், கழிவறைகளை மட்டும் பயன்படுத்தினால் இரண்டு யூரோ வசூலித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.