குழந்தைகளின் உயர்வைக் கருதி அறிவுக்கதைகள், நீதிக் கதைகள், சிரிப்புக் கதைகள் என்று பலவிதமாகச் சொல்வார்கள். வன்முறைக் கதைகள், துஷ்டர்களின் கதைகள் போன்றவற்றைச் சொன்னாலும், "தீமைகள் ஒடுங்கி நீதியும் நியாயமும் இறுதியில் வெல்லும்' என்ற அறிவுரையோடு ஆணித்தரமாகச் சொல்லிக் குழந்தைகளை நல்வழியில் செல்ல அறிவுறுத்துவார்கள்.
பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறுதீவுக் கூட்டங்களில் ஒன்றுதான் சமோவாத் தீவு. அந்தத் தீவில் வாழும் மக்கள் பேசும் மொழியில்தான் "துசிதளா' என்பதற்கு "கதை சொல்வதில் மன்னன்' என்று பொருள்.
சுமோவா நாட்டு மக்களால் அந்த விருதைப் பெற்றவர் "லூயிஸ் பால்ஃபர்'. ஆங்கிலேயரான இவர், பிற்காலத்தில் சமோவாத் தீவில் வசித்தார். குழந்தைகளைக் கவரும் வண்ணம் இனிமையான சொல் அடுக்குகளால் எடுத்துச் செல்வதில் மகா வல்லவர். உலகப் புகழ் பெற்ற சிறந்த கதைகளை எழுதியவர்.
இவருடைய கதைகளில் வீரம், சாகசம், அற்புதம்... என்று இன்னும் எவ்வளவோ சொல்லலாம். உலகப் புகழ் வீரர்களைப் பற்றியெல்லாம் அதிஅற்புதமாக, ஆச்சரியப்படும்படியாகக் கதைகளை எழுதியவர்.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகரில் 1850-ஆம் ஆண்டு நவம்பர் 13-இல் லூயிஸ் பால்ஃபர் பிறந்தார். கட்டடக் கலை பொறியாளரான இவரது தந்தையோ தனது ஒரே மகன் கட்டடப் பொறியாளராக வருவதையே மிகவும் விரும்பினார். ஆனால், லூயிúஸா ஆரோக்கியமான குழந்தை அல்ல. அவனைப் பராமரிக்கும் செவிலியரான மம்மி என்பவர் பாடல்களைப் பாடி, கதைகளைச் சொல்லி மகிழ்விப்பார்.
லூயிஸ் சிறுவனாக இருக்கும்போதே எழுதப் படிக்கத்தெரிந்துகொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டார். சிறுவயதிலேயே கதை, கவிதை, கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டார்.உடல்நலக் கோளாறால் அவரால் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
வீட்டில் இருந்தபடியே தனிப்பயிற்சியும் தரப்பட்டது. தனது 16-ஆவது வயதில் எடின்பரோ சர்வகலா சாலையில் நுழைந்தார். அதே ஆண்டில் "தி பெண்ட்லாண்ட் ரைசிங்' எனும் கவிதைத் தொகுப்பை அவரது தந்தை சொந்தச் செலவில் வெளியிட்டார்.
லூயிஸ் பால்ஃபர் இலக்கிய விவாதங்களிலும், நாடகக் குழுக்களிலும் மிகவும் ஆர்வம் கொண்டார். கவிதைகள் பல எழுதி, "எடின்பரோ சர்வகலா சாலை' எனும் பத்திரிகைக்கு அளித்தார். பின்னர், சட்டம் படித்து, 1875-இல் வழக்குரைஞராக அனுமதியும் கிடைத்தது. ஆனால், அவர் வழக்குரைஞராகத் தொழில் நடத்தவில்லை.
ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிவிட்டு, "இன்லண்ட் வாயேஜ்' (உள்நாட்டுப் பயணம்), "டிராவல்ஸ் வித் ஏ டாங்கி' (ஒரு கழுதையோடு பயணம்) உள்ளிட்ட பல நூல்களை எழுதி, வாசகர்களின் வரவேற்பைப் பெற்றார்.
பிரான்சில் தன்னைவிட வயதில் மூத்த ஃபானி ஆஸ்போர்ன் என்ற பெண்ணை சந்தித்தார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருந்தன. இவரை திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவுக்குச் சென்றார். 1879-இல் அவரை விவாகரத்து செய்து, அடுத்த ஆண்டில் அவரையே மீண்டும் மணந்தார். இந்த நேரத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டார்.
1888-ஆம் ஆண்டு சமோவாத் தீவில் குடியேறினார். அங்கே குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்லத் தொடங்கினார். சிறுவர் பத்திரிகையான "யங் ஃபோல்க்ஸ்'-இல் நிறைய கதைகளை எழுதினார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய "டாக்டர் ஜெக்கிலும் மிஸ்டர் மாயாவியும்', "டாக்டர் ஜெக்கில் அன்ட் மிஸ்டர் ஹைட்', "ட்ரஷர் ஐலண்ட்' உள்ளிட்ட பல நூல்கள் புகழ்பெற்றன. இந்தத் தீவில் வசித்தபோது, "ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன்' என்ற புனை பெயரில் எழுதினார். பிற்காலத்தில் புனை பெயரே பிரபலமாகி இவரது பெயராகிவிட்டது.
இவர் உடல்நலக் குறைவால் தனது 44-ஆம் வயதில் 1894-இல் உயிர்நீத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.