பொம்மைகளும், அதன் பாரம்பரியமும்...
மகாலெக்ஷ்மி சுப்பிரமணியன்
நவராத்திரி விழா நெருங்கி வருகிறது. பிற மாநிலங்களில் 'தசரா' எனும் பெயரில் நடைபெறும் விழாக் கொண்டாட்டம் நடைபெறும். பொம்மைகள் இல்லாத நவராத்திரி விழாவா? என்ற வகையில், பொம்மைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள் சிறப்பானவை. தாத்தா- பாட்டி பொம்மை, பொய்க்கால் குதிரை ஜோடி, பாவாடை நாட்டியப் பெண் பொம்மைகள் போன்றவை பிரபலமாக இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் எந்தெந்த பொம்மைகள் பிரபலம்- ஒரு பருந்துப் பார்வை.
மத்தியப் பிரதேசத்தில் தசராவில் அதிகம் இடம்பிடிப்பவை 'ஜபவா பொம்மைகள்'. ஜபவா மாவட்டத்தில் உள்ள ஆதிவாசிகள் இவற்றை உருவாக்குகின்றனர். களிமண், காகிதக் கூழ், ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு, பெயின்ட் மூலம் கண், உதடுகள், நகங்கள் வரையப்பட்டு பொம்மைகளுக்கு நிஜ ஆடைகள் உடுத்தி, பொம்மைகள் விற்கப்படுகின்றன. இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
ஜெய்பூரில் உருவாக்கப்படும் 'மார்பிள் டஸ்ட்' பொம்மைகள் பிரசித்திப் பெற்றவை. இதேபோல், செம்பு, வெள்ளிகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஒட்டகம், யானை, மயில், கிளி போன்ற பொம்மைகளும் கொலுவில் இடம்பெறும்.
குஜராத்தில் மரத்தால் செய்யப்படும் 'கார்பா' பொம்மைகளில் உழவர்கள் நடனமாடியபடி இருப்பர். ஆண்- பெண் ஜோடிகளாகக் கொலுவில் வைக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் கிருஷ்ணா நகரில் உருவாக்கப்படும் குர்னி பொம்மைகளின் தத்ரூபமான வடிவங்களே அவற்றின் சிறப்பு அம்சமாகும். இவை களிமண், காகிதக் கூழ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. துர்கா பூஜையின்போது மேற்கு வங்கத்தின் தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய, பெரிய பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் துர்கை வடிவங்கள் கிருஷ்ணா நகரில் உருவாக்கப்படுவையாகும்.
மினியேச்சர் பிரம்பு முறத்தில் ஃபோம் கொண்டு செய்யப்படும் காளி சுவர் அலங்காரங்களும் மேற்கு வங்கத்தில் பிரசித்தம்.
நதுங்கிராம் கிராமத்தில் உருவாக்கப்படும் மரப் பொம்மைகளுக்கு நவராத்தி விழாக்களில் மவுசு அதிகம்.
ராஜஸ்தானில் கொலுவில் இடம்பெறுவது கத்பத்லி பொம்மைகள். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த வகை பொம்மைகள் மரத்தில் உருவாக்கப்பட்டு, ராஜஸ்தானின் பாரம்பரிய உடை, அணிகலன்களைக் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. ஆண்-பெண் ஜோடியாக நடனமாடுதல், வாத்தியங்கள் வாசிக்கப்படுதல் போன்று இவை உருவாக்கப்படுகின்றன.
விசாகப்பட்டினத்தில் ஏட்டிக்கோபகா கிராமத்தில் உருவாக்கப்படும் 'ஏட்டிக்கோபகா பொம்மலு' என்கிற மரப் பொம்மைகளும் தெலுங்கர்கள் கொலுவில் இடம்பிடிக்கின்றன. இதில், பெண் உருவக் குங்குமச் சிமிழ் பொம்மைகள் மிகவும் பிரசித்தம்.
ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட சித்தூர், திருப்பதி, திருச்சானூரில் மரப்பாச்சி பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. 'தம்பதி பொம்மலு' என்று அழைக்கப்படும் ஜோடி பொம்மைகளை விதவிதமான அலங்காரங்களுடன் கொலுவில் வைப்பர்,
கேரளத்தில் கொலு வைக்கும் வழக்கம் இல்லை. ஆனால், எர்ணாகுளம் மாவட்டத்தில் மரம், உலோகம் கலந்து உருவாக்கப்படும் பொம்மைகள் கேரளத் தமிழர்களின் வீடுகளில் இடம்பெற்றிருக்கும்.
கர்நாடகத்தில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள 'கொம்பேகலா நகரா' என்று அழைக்கப்படும் சென்னப்பட்டணத்தில் உருவாக்கப்படும் மரப் பொம்மைகள் மிகவும் பிரபலம். மரம், உலோகம் கொண்டு உருவாக்கப்படும் இந்த வகை பொம்மைகளில் தெய்வ உருவங்கள், இசைக்கலைஞர்கள், நாட்டிய மங்கைகள், விவசாயிகள், பாடம் படிக்கும் குழந்தைகள் அதிகமாக இடம்பிடிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.