திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...

முருகன் பெயரில் பாடல்களை எழுதச் சொன்னார் குன்னக்குடி வைத்தியநாதன். திராவிட சிந்தனையுள்ள பூவை செங்குட்டுவன் முதலில் மறுத்தாலும், பின்னர் எழுதினார்.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...
Updated on
2 min read

முருகன் பெயரில் பாடல்களை எழுதச் சொன்னார் குன்னக்குடி வைத்தியநாதன். திராவிட சிந்தனையுள்ள பூவை செங்குட்டுவன் முதலில் மறுத்தாலும், பின்னர் எழுதினார்.

'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா... திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்...' என்ற பாடலை அவர் எழுத, இசைத்தட்டு வெளியானது. அதை சூலமங்கலம் சகோதரிகள் ஒரு விழாவில் இறைவணக்கப் பாடலாகப் பாட, விழாவுக்கு வந்த கவிஞர் கண்ணதாசன் வியந்தார். படத் தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜனிடம் கூறி, இந்தப் பாடல் உரிமையைப் பெற்று 'கந்தன் கருணை' படத்தில் சேர்த்தனர்.

பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாடிய பாடல் 'சூப்பர் ஹிட்'.

திரைத்துறையில் தடம் பதிப்பதற்காக, சிவகங்கையை அடுத்துள்ள கீழப்பூங்குடியைச் சேர்ந்த முருகவேல் காந்தி தனது மனைவி, மகன், கைக்குழந்தையுடன் சென்னைக்கு வந்தார். அவர் தனது பெயரை 'பூவை செங்குட்டுவன்' என்று மாற்றிக் கொண்டு, பாடல் ஆசிரியராக அவதாரம் எடுத்தார். பத்து ஆண்டுகள் வாய்ப்புக்காக காத்திருந்தார்.

சென்னையின் அன்றைய மேயர் சிட்டிபாபு அறிவுறுத்தலின்பேரில், 'நான் பெற்ற பரிசு' நாடகத்தை எழுதி, ஒற்றைவாடை அரங்கில் அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் 'தம்பி தவறிவிட்டார்' என்ற ஒரு ஓரங்க நாடகத்தையும் பூவை எழுதி சேர்த்திருந்தார். இதை அண்ணா மிகவும் பாராட்டினார்.

அப்போது நரசிம்ம பாரதி தனது நாடகத்துக்காகப் பாடல்களை எழுத பூவை செங்குட்டுவனை அழைத்துச் சென்றார். பல மணி நேரம் செலவிட்டு, மூன்று பாடல்களை எழுதியவருக்கு ஒரு ரூபாய்தான் சன்மானம் கிடைத்தது.

இவருடன் நடிகர் சந்திரபாபுவும் தங்கியிருந்து நடிக்க வாய்ப்புகளைத் தேடினார்.

பூவை எழுதிய 'திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும்..' என்ற பாடல் 'கெüரி கல்யாணம்' படத்தில் இடம் பெற்றது. 'கற்பூரம்' படத்துக்காக 'வணங்கும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால் வேல் போல் இருக்குதடி' என்ற பாடலை பூவை எழுத, பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி பாடினர்.

'புதிய பூமி' படத்தில் பூவை எழுதிய 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை... அது ஊரறிந்த உண்மை..' என்ற பாடலை எம்ஜிஆர் வியந்து பாராட்டினார்.

வள்ளுவர் போதனைகளை உள்வாங்கி 'குறள் தரும் பொருள்' என்ற பாடல்களாக மாற்றி அவற்றை பின்னணி இசைக் கலைஞர்களைக் கொண்டு பாட வைத்தும், நாட்டிய கலைஞர்களைக் கொண்டு ஆட வைத்தும் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் பெருமை சேர்த்தவர் பூவை செங்குட்டுவன்.

'தாயிற் சிறந்த கோயிலுமில்லை..', 'ஏடு தந்தானடி தில்லையிலே...', 'இறைவன் படைத்த உலகை...', 'ராதையின் நெஞ்சமே...', 'ஆடுகின்றானடி தில்லையிலே....', 'முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்...', 'குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா...' போன்ற பாடல்கள் பூவை செங்குட்டுவனை என்றென்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com