ஏ.எம்.ஆர். கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பனை'. ஹரிஷ் பிரபாகரன், மேக்னா, வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார் எம்.ராஜேந்திரன். படத்தை இயக்குபவர் ஆதி ஆறுமுகம்.
படம் குறித்து அவர் பேசும் போது, ' பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருவெடிப்பால் உருவான பூமிப்பந்தில் பரிணாம வளர்ச்சிப் படிநிலையில் மனிதன் தோன்றினான். மனித குலத்தின் தொடக்கக் கால வாழ்க்கையானது மரப்பொந்துகளிலும், பாறை இடுக்குகளிலும், குகைகளிலும் கழிந்தது. நாடோடியாக வாழ்ந்த மனிதன் இயற்கை வேளாண் தந்த அறிவு வெளிச்சத்தால் சமூகமாக வாழத்தொடங்கினான்.
நாடோடி மக்களின் வளர்ச்சி "கொம்பை' எனப்படும் "குடிசைகள்' அமைத்து வாழ்விடத்தை வகுத்துக் கொள்ளும்படியான சிந்தனை மாற்றத்தை உண்டாக்கிற்று. அத்தகைய சூழ்நிலையில் வெயில், மழை, குளிர், காற்று, இன்னபிற இயற்கைச் சீற்றங்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள பிந்தைய கால மனித சமூகத்திற்கு பரந்து விரிந்த பனை மர ஓலைகள் பேருதவி புரிந்திருக்கின்றன.
கிராமப் புறங்களில் இன்றும் கண்களில் தென்படும் பனை ஓலைக் குடிசைகள் தமிழர்களின் மரபான வாழ்வியலுக்கும் பனை மரத்துக்குமான உறவு நீட்சியைத் தொட்டுக்காட்டும் சரித்திரச் சாட்சியங்கள்.தமிழக வரலாற்றின் தொடக்கக் காலத்தில் இருந்தே பனை மரங்கள் முக்கிய அங்கத்தை வகித்திருக்கின்றன.
இன்று நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் உயர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான சிந்தனை கருக்கொண்டதே உயர்ந்து நின்ற பனைமரங்கள் ஈன்ற ஓலைக் குடிசைகளில்தான். இப்படியான பனைமரங்கள் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது'' என்றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.