லேபிள்தான் இங்கே முக்கியம்!

கால் போனபோக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதிலிருந்தே சினிமா மேல் சிறு ஆசை.
லேபிள்தான் இங்கே முக்கியம்!
Published on
Updated on
2 min read

கால் போனபோக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதிலிருந்தே சினிமா மேல் சிறு ஆசை. ஆனால், படிப்பு முக்கியம் என அப்பாவும், அம்மாவும் சொன்னார்கள். அதற்காக வக்கீல் படிப்பு. அதற்கும் ஒரு காரணமிருக்கு. தினமும் 3 மணி நேரம் மட்டுமே கல்லூரி நேரம். மற்ற நேரங்களில் சினிமா பார்ப்பது, அது பற்றி படிப்பது,

வாய்ப்புகளை உருவாக்குவதுதான் என் வேலை. அவ்வப்போது வருகிற படங்களின் பெரிய வெற்றி, அது தரும் உத்வேகம் என் பயணத்துக்குப் பெரும் பலம். சினிமாவின் மேல் வெறும் ஆசை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றித்

தீவிரமாகத் தெரிந்து கொண்டேன். ஆனால், சினிமா வாசலுக்கான திறவுகோல் என்னிடம் இல்லை.

முதல் வாய்ப்பில் ஆயிரம் கஷ்டங்கள். ஒரு வழியாக "ஹார்ட் பீட்' வெப் சீரிஸ் நல்ல அறிமுகம் தந்தது. அது கமர்ஷியலாகவும் வெற்றி, வசூல் என நல்ல படைப்பின் பக்கமும் நின்றது. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் எனக்கு குரு, தெய்வம், ஆசான் ஆனார்கள்.'' புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் சர்வா. "ஹார்ட் பீட்' வெப் சீரிஸ் மூலம் அறிமுகம் கொடுத்தவர். இப்போது வெளிவந்திருக்கும் "தணல்' படத்திலும் முத்திரை பதித்திருக்கிறார்.

'ஹார்ட் பீட் வெப் சீரிஸýக்குப் பிறகு நிறையப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முக்கியமாக, த்ரில்லர் ஜானர், காதல் படங்களில் நடிக்கக் கேட்டார்கள். எந்த மாதிரியான ஜானரில் நடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். நிறைய கதைகள் கேட்டேன். 50 கதைகள் வரை கேட்டிருப்பேன். ஒரு கதையில் மனசு நிலைத்துக் கிடந்தது. அதற்கு ஆக்ஷன் ஜானரில் திரைக்கதை வந்து சேர்ந்தது. எனக்கு இது ஆச்சர்யம் கொடுத்தது. ஏனென்றால், இரண்டாவது படத்தில் நடிக்கிற ஒருவருக்கு ஹீரோ அதர்வாவுக்கு இணையான ரோல். அதுவே பெரும் மகிழ்ச்சி.

கதை கேட்டவுடன் இந்தக் கதையை விட்டுவிடக் கூடாது என்று தோன்றியது. அதுதான் இந்த "தணல்'.

படத்தின் இயக்குநர் ரவீந்திரா மாதவனுக்கு முதல் படம். ரொம்ப திறமைசாலி. காட்சியமைப்பைப் போல் வசனங்களிலும் கவனம் ஈர்ப்பவர். கடந்த வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். நல்ல வரவேற்பு. சென்னையில நடக்கிற கதைக்களம். படத்தில் முக்கியமான பாத்திரத்தில் லாவண்யா திரிபாதி, அழகம் பெருமாள் நடிக்கிறார்கள். படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும்.

சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறைய கதைகள் இருக்கும். ஆனால், எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்துப் பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். அதனால் நல்ல அனுபவம் கிடைத்தன. சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் இருந்த குழப்பங்களைப் புரிந்துகொள்ள துணை நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னைக் கொண்டு வந்திருக்கிறது. "இவன் பெரிய ஆளு...'ன்னு சிலர் சொன்னார்கள். சிலர் மனசைப் பார்த்துப் பழகினார்கள். இப்படி வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள். எல்லோருக்கும் நன்றி. ஒரே படம்தான் நடித்திருக்கிறேன். அடுத்த படத்துக்கு வெயிட்டிங்.

பெரிய இடங்களுக்கு இன்னும் பயணப்படவில்லை. அதற்குள் நிறையப்பேரின் அன்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. "இயல்பா இருக்கப்பா...'ன்னு நிறையப்பேர் சொல்லுவதில் மகிழ்ச்சி. இவற்றையெல்லாம்விட போராடி வெற்றிபெறத் துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் எல்லோருக்கும் என் இடம் பிடித்திருக்கிறது. ஆறுதலாக வந்து விழுகிற வார்த்தைகள் எல்லாம் அற்புதம்! இதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன்.

காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நிற்கக்கூடிய படங்களில் இருக்க வேண்டும். நான் பிரபலத்தின் வாரிசாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைக் கொண்டாடவும், உண்மையான குறைகளைச் சொல்லித் திட்டவும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படி விஷயம் தெரிந்தவர்கள் கூடவே இருந்தால், இங்கே யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.

சினிமாவில் வேலைக்குக் காசு இல்லை. பேருக்குத்தான் காசு. லேபிள்தான் இங்கே முக்கியம் என்று நினைக்கிறேன். வதவத என்று நிறையப் படங்களில் நடிப்பதைவிட, நாலே நாலு நல்ல படங்களில் நடித்தால் போதும். அந்த எண்ண ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும். அதுதான் முக்கியம். இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். இதுதான் கதை எனத் தீர்மானமாகப் பிடித்து விட்டால், அந்தக் கதையில் எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்றுவிடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் வெற்றிகளின் பட்டியல் தொடரும்.

நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. ஒருவித பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான் சினிமா. ஆனால், நம்பிக்கையோடு உழைத்தால், ஆசிர்வதிக்கப்பட்ட இடம். உன்னதமான நேரம் இது.

"நம்ம ஒரு படம் கண்டிப்பா பண்ணணும்'னு சொல்கிற இயக்குநர்களுக்கு நன்றி. இனி எல்லாமும் சாத்தியப்படும்'' நம்பிக்கையாகப் பேசி முடிக்கிறார், சர்வா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com