மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள், பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து படங்கள் வெளியிடப்பட்டு வருவது ஹாலிவுட்டில் வழக்கமாகிவிட்ட ஒன்று. இப்போது இது இந்தியாவிலும் தொடங்கி தொடர்ந்து வருகிறது.
மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் திரை வடிவம் பெறும் போது அப்படைப்பு வழக்கமான வணிக முயற்சிகளில் இருந்து மாறுபட்டு வேறு ஒரு தோற்றம் கொள்கிறது. இவ்வகையில் வெளிவந்த 'காந்தாரா', 'கல்கி' போன்ற படங்களின் வெற்றி மக்களின் ஆதரவுக்கு சாட்சியாக விளங்குகிறது.
எனவே திரைத் துறையினர் இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அப்படி தமிழ்நாட்டு நாட்டார் கதையை மையமாக வைத்து 'தி டார்க் ஹெவன்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.
படத்தின் கதையை எழுதி இயக்குகிறார் பாலாஜி. சித்து, தர்ஷிகா, வேல ராமமூர்த்தி, ரித்திகா, அருள் ஜோதி, பிரதீப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது, 'இது ஒரு க்ரைம் த்ரில்லர் ரகத்திலான கதை. அதற்குப் பொருத்தமாக இந்தத் தலைப்பை வைத்தேன்.
படத்தை ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி உருவாக்கி வருகிறேன். ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றிய கதை. அந்த ஊரில் சில ஆண்கள் சீரான கால இடைவெளியில், அதாவது ஏழாண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
இந்த மரணத்திற்குப் பின்னால் உள்ள ரகசியங்களை காவல்துறையைச் சேர்ந்த கதாநாயகன் எப்படி வெளிக்கொண்டு வருகிறார் என்று கதை செல்கிறது. டிசம்பரில் வெளியிடும் நோக்கில் பணியாற்றி வருகிறோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.