புதுச்சேரியின் பொக்கிஷம்!

புதுச்சேரியின் கைவினைப் பொருள்களின் பொக்கிஷமாக, முருங்கம்பாக்கம் கைவினைக் கிராமம் விளங்குகிறது.
புதுச்சேரியின் பொக்கிஷம்!
Published on
Updated on
2 min read

புதுச்சேரியின் கைவினைப் பொருள்களின் பொக்கிஷமாக, முருங்கம்பாக்கம் கைவினைக் கிராமம் விளங்குகிறது.

நாட்டின் மறக்கப்பட்ட கைவினைப் பொருள்கள், கலைவடிவங்களுக்குப் புத்துயிர் அளிக்கவும், திறமையான கலைஞர்கள், கைவினைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் 2016-ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை அரியாங்குப்பம் ஆற்றங்கரையில் நான்கு ஏக்கரில் இந்தக் கைவினைக் கிராமத்தை உருவாக்கியது.

24 கடைகளில் கலைப்பொருள்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் தயாரிப்பையும், அதனை உருவாக்கும் கைவினைக் கலைஞர்களையும் நேரில் காணலாம். அவர்களோடு கலந்துரையாடலாம். சிற்பக் கலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி கலைஞர் வி.கே.முனுசாமி உள்ளிட்ட பல விருதாளர்களின் கடைகளும் உள்ளன.

தனித்துவமான டெரகோட்டா படைப்புகள், மண்பாண்டங்கள், தேங்காய் ஓடு சிற்பங்கள், கல் சிற்பங்கள், கடல் சிற்பங்கள், மரச்சாமான்கள், வாசனை மெழுகுவர்த்திகள், காலணிகள், கைகளால் உருவான விளக்குகள், கைத்தறிப் பைகள், விதவிதமான ஊஞ்சல்கள், கைவினைக் காகிதப் பொருள்கள், ஓவியங்கள், எழிலான விலங்கு சிற்பங்கள் உள்ளிட்ட பலவகையான கலைப்பொருள்கள் இங்குள்ளன.

இங்கு அழகிய மண் சிற்பங்களைத் தயாரிக்கும் டெரகோட்டா கைவினைக் கலைஞர் கலைமாமணி முருங்கம்பாக்கம் ந.சண்முகத்திடம் பேசியபோது:

'மண் சிற்பங்களில் ஆயிரக்கணக்கான படைப்புகளைச் செய்கிறோம். விற்பனையும் செய்கிறோம். இதுவரை சுமார் இருபதாயிரம் மாணவ, மாணவியர்களுக்கு இந்தக் கலையில் பயிற்சி அளித்துள்ளேன்.

தொன்மை வாய்ந்த அரிக்கமேட்டில் கண்டறியப்பட்ட வெள்ளை நிறப் பானை மாதிரியைக் கொண்டு, நான் டெரகோட்டா முறையில் செய்து தந்துள்ளேன். நான் செய்த பெரிய டெரகோட்டா குதிரைப் பொம்மைகள் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர்'' என்கிறார்.

'யுனிவர்சல் ஈக்கோ ஃபவுண்டேஷன்' நிறுவனர் பூபேஷ் குப்தா கூறியது:

'வனத்தையும் வன விலங்குகளையும் பாதுகாப்பதும், அதனுடைய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதும்தான் எங்கள் முக்கிய நோக்கம். 2017-இல் தொடங்கி எட்டு ஆண்டுகளில் 8 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். வன விலங்குகள் மீதான அச்சத்தைப் போக்கி, அவற்றை நேசிக்கக்கூடிய வகையில் எங்களுடைய கண்காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியை இதுவரை சுமார் 4 லட்சம் மாணவ மாணவியர்கள் பார்வையிட்டுள்ளனர். நாங்கள் உருவாக்கிய வன விலங்குகள் கலைக்கூடத்தில் வனவிலங்கு பொம்மைகள் உயிரோட்டத்தை அளிப்பதோடு, வனத்தில் நுழைந்த உணர்வையும் ஏற்படுத்தும்.

நாட்டிலேயே முதன்முறையாக, ஆரோவில் சர்வதேச நகரில் வன

விலங்கு கலை அருங்காட்சியகத்தைப் பிரம்மாண்டமாக அமைத்துள்ளோம். இது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மனிதனுக்கு இயற்கை தந்த நீர், காற்று, உணவு என எல்லாவற்றிற்கும் நாமும் நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்'' என்கிறார்.

செல்வது எப்படி:

புதுச்சேரி - கடலூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில், புதுச்சேரி நகரிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் முருங்கம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைப் பார்வையிட நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. இலவச வாகனங்கள் நிறுத்தும் இடம், ஓய்வறை, மாநாட்டு அறை, வெளிப்புற அரங்கம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. விடுமுறை ஏதுமின்றி அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை திறந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com