'எப்போதுமே எளிதான இலக்கை தொலைநோக்காக வைக்காமல், சவாலான இலக்கையும் கனவையும் இளையத் தலைமுறையினர் கொண்டிருக்க வேண்டும். மிகுந்த விடாமுயற்சியுடன் பணியைத் தொடருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நம்முடைய நம்பிக்கையே நடத்தைகளையும் விளைவுகளையும் தீர்மானிக்கின்றன. எதையும் எளிதில் விட்டுக்கொடுக்காதீர்கள்.
நாளைய உலகம் இளைஞர்களுக்காக, குறிப்பாக இந்திய இளைஞர்களுக்காகக் காத்திருக்கிறது. இளைஞர்களின் கனவு சரியானது என்றால், கண்டிப்பாக முயற்சிகளுக்குப் பின்னர் வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!'' என்கிறார் 'கிராம்ப்டன் கிரீவ்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலரான நாற்பத்தைந்து வயதான காளீஸ்வரன் அருணாசலம்.
கோவையைச் சேர்ந்த இவருக்கு இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான 'மிகச் சிறந்த தலைமை நிதி அலுவலர்' என்ற விருதை நுகர்வோர் பொருள்கள் பிரிவில் வழங்கியுள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பு, மிக இளம் வயதிலேயே, அதாவது முப்பத்தைந்து வயதில் கார்ப்பரேட் நிறுவனத்தில் மிகச் சிறந்த இளைய தலைமை நிதி அலுவலர் என்ற விருது பெற்றவர். 85 ஆண்டு பழைமை வாய்ந்த கிராம்ப்டன் நிறுவனத்தின் நிதி நிர்வாகம், திட்டமிடல், சட்டம், நிதிச் செயலகம் உள்ளிட்டவற்றில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் அவரிடம் பேசியபோது:
'கோவை செளடேஸ்வரி வித்யாலயாவில் பள்ளிப் படிப்பையும், பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம். படிப்பையும் முடித்தேன். சி.ஏ. முடித்தவுடன் டி.வி.எஸ்., ஆதித்ய பிர்லா, காட்பரீஸ், எய்ச்சர் மோட்டார், ஃபியூச்சர் குழும நிறுவனங்களில் பெங்களூரு, சென்னை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட இடங்களில் தலைமை நிதி அலுவலராகப் பணியாற்றினேன். மூன்று ஆண்டுகளாக கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராக மும்பையில் பணியாற்றுகிறேன்.
ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் நிதி தொடர்பான முடிவுகளும் அங்கு பணிபுரிபவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்லாமல், பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும், அந்த நிறுவனத்தின் நிதி தொடர்பான விஷயங்களில் எடுக்கும் முடிவுகளின் தாக்கமானது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் அனைத்துத் துறைகளிலும் எதிரொலிக்கும். இதில்தான் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலரின் செயல்பாடுகளின் முக்கியத்துவம் தெரியும்.
கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 கோடி ஃபேன்களை உற்பத்தி செய்கிறது. ஃபேன் மற்றும் வீடுகளுக்கான பம்ப் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடத்தில் கிராம்ப்டன் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கிய பட்டர்ஃபிளை நிறுவனத்தை வாங்கியது. வாட்டர் ஹீட்டர், ஏர் கூலர் ஆகியவற்றில் நாட்டின் 3-ஆவது இடத்தில் உள்ளது.
கிராம்ப்டன் நிறுவனம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருள்களை விற்பனை செய்தது. இதில் ரூ.850 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்ததற்காக 8 பிரிவுகளில் விருதுகளை இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு வழங்கியது நுகர்வோர் பொருள் நிறுவனப் பிரிவில் கிராம்ப்டன் நிறுவனத்துக்காக எனக்கு விருது வழங்கப்பட்டது.
ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்க, சயண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத் தலைவர் பி.வி.ஆர். மோகன் ரெட்டி ஆகியோர் விருதை வழங்கினர்.
நிதி நிர்வாகம், லாபம் உயர்த்துதல், திட்டமிடுதல் தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து விருது வழங்கப்படுகிறது. கிராம்ப்டன் நிறுவனத்தில் 200 பேர் கொண்ட குழுவில் நான் தலைமை நிதி அலுவலராகப் பணிபுரிகிறேன்.
அடுத்த 5 ஆண்டுகளில் கிராம்ப்டன் நிறுவனத்தின் பொருள்களை ரூ.15000 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கேற்ப பணியாற்றி வருகிறோம்.
தற்போதைய அதிநவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் திட்டமிடப்பட்டு வருகிறேன். வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியிலும் அதிக கவனம் செலுத்த உள்ளேன்.
கிராம்ப்டனின் தனித்துவம்:
தொழிலாளர்களால் கிராம்ப்டன் நிறுவனம் நடத்தப்பட்டு ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆசியன் பெயிண்ட், பிராக்டர் அன்ட் கேம்பிள், ஸ்ùஸனிடர் எலக்ட்ரிக், கோர்ன் பெரி ஆகிய நிறுவனங்களில் இருந்து உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்கள் குழு நிர்வகித்து வருகின்றது. இந்த நிதியாண்டில் கிராம்ப்டனின் மொத்த விற்பனை ரூ.10 ஆயிரம் கோடியைத் தாண்டும்.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் அதிகத் திறன் கொண்ட வாட்டர் ஹீட்டர் கண்டுபிடிப்புக்காக குடியரசுத் தலைவர் விருது, நிறுவன ஆண்டறிக்கை சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு ஃபிரீ பிரஸ் ஜெர்னல் விருது வழங்கப்பட்டது. கிராம்ப்டன் தணிக்கைக் குழு மிகச் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு ஆசிய நிலைத்தன்மை மையத்தால் அங்கீகரிக்கப்பட்டது. உலக அளவில் கிராம்ப்டன் ஃபேன்களை மேலும் அதிக ஆற்றல் கொண்டதாக உற்பத்தி செய்ய ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை ஆராய்ச்சிக்காகச் செலவிடுகிறது.
கூட்டுக் குடும்பத்தில் கற்றதே எனது சாதனை:
எனது அப்பா அருணாசலம், அம்மா மங்கள கெளரி. அம்மா வழித் தாத்தா அண்ணாமலை செட்டியார், பாட்டி செல்லம்மாள் ஆகியோர் எனக்கு நல்வழிகளைக் காட்டினர். கோவையில் தாத்தா, பாட்டியுடன் சித்தி, சித்தப்பா அவர்களின் குழந்தைகள் என 15-க்கும் மேற்பட்டவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்தோம். இதனால் நம்முடைய பண்புகள், விழுமியங்கள், பழக்கவழக்கங்கள், பக்தி, இலக்கியம், மரியாதைகளை அதிகம் கற்றேன்.
இதுதவிர, புத்தகங்கள் படித்ததாலும் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கையைப் படித்ததாலும் பல்வேறு விஷயங்களைக் கற்றேன். எனது மனைவி மீனாட்சி, மூத்த மகள் ஸ்ரேயா, கல்லூரியில் நிதி நிர்வாகப் படிப்பில் 3-ஆம் ஆண்டும், இளைய மகள் ஸ்மிரிதி 9-ஆம் வகுப்பும் படிக்கின்றனர். நான் இவ்வளவு சாதித்ததற்குப் பின்புலமாக இருந்தது உறவினர்கள்தான்'' என்கிறார் காளீஸ்வரன் அருணாசலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.