மோகன்லாலுக்கு தாதே சாகேப்!

நடிகர் ரஜினிக்கும் மோகன்லாலுக்கும் துவக்கம் ஒன்றாக இருந்தது.
மோகன்லாலுக்கு தாதே சாகேப்!
Shahbaz Khan
Published on
Updated on
1 min read

நடிகர் ரஜினிக்கும் மோகன்லாலுக்கும் துவக்கம் ஒன்றாக இருந்தது. ஆம், இருவரும் வில்லன் பாத்திரத்தில் அறிமுகமாகி, சில படங்களில் வில்லனாக நடித்து, பிறகு ஹீரோவானவர்கள்.

மோகன்லால் நடிக்கத் தொடங்கி 47 ஆண்டுகளில் 400 படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் படமான 'திரனோட்டம்' 1978 -இல் தயாரானாலும், 25 ஆண்டுகள் கழித்தே வெளியானது. மோகன்லாலை வில்லனாக அறிமுகப்படுத்திய 'மஞ்சில் விரிஞ்ஜ பூக்கள்' 1980 -இல் வெளியாகி, மோகன்லாலின் முதல் படமானது. இந்தப் படத்தில்தான் பூர்ணிமா ஜெயராம் நாயகியாக அறிமுகமானார்.

சுமார் 25 படங்களில் நெகட்டிவ் வேடங்களில் நடித்த மோகன்லாலை ஹீரோவாக்கியது "ராஜவிண்டே மகன்', 'இருபதாம் நூற்றாண்டு'. 'பரதம்', 'ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா', 'வானப்பிரஸ்தம்', "கிரீடம்', "தேவாசுரம்', 'நாடோடிக்காற்று', 'காலாபானி', 'கிலுக்கம்', 'பட்டினப்பிரவேசம்', 'சந்திரலேகா', 'தன்மாத்ரா' படங்கள் மோகன்லாலை ஹீரோவாக மட்டுமல்லாமல்; முழுமையான நடிகராகவும், ஹாஸ்ய பாத்திரங்களில் அசத்துபவராகவும் காட்டின.

மோகன்லால் பாடகரும்கூட. 31 பாடல்களைப் பாடியுள்ளார். மோகன்லால், படத் தயாரிப்பாளர் பாலாஜியின் மருமகன் ஆவார். மோகன்லாலுக்கு ஒரு மகன், ஒரு மகள். மோகன்லால் மகள் விஸ்மயா, 'துடக்கம்' (தொடக்கம்) என்ற மலையாளப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகிறார்.

மோகன்லால் 1977-78 ஆம் ஆண்டின் கேரள மாநில மல்யுத்த சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 'டேக்வாண்டோ' தற்காப்புக் கலையில் கெளரவ கருப்பு பெல்ட் பெற்றுள்ளார்.

மோகன்லால் நடித்து 1997-இல் வெளியான 'குரு', ஆஸ்கார் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலையாளத் திரைப்படமாகும்.

படத்தில் நடிப்பதற்காக மாயாஜால வித்தகர் கோபிநாத் முத்துக்காடு என்பவரிடம் மோகன்லால் 18 மாதங்கள் பயிற்சி பெற்றார். உலகின் மிக உயரமான கட்டடமான துபையில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மோகன்லாலுக்குச் சொந்தமாக ஃபிளாட் உள்ளது.

வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லாத பெருமை மோகன்லாலுக்கு உண்டு. மோகன்லால் 'கீர்த்திசக்ரா', 'குருக்ஷேத்ரா' போன்ற பல ராணுவப்படங்களில் நடித்துள்ளார். 2009 -இல் மோகன்லாலுக்கு இந்திய பிராந்திய இராணுவத்தில் 'லெப்டினன்ட் கர்னல்' என்ற கெளரவப் பதவி வழங்கப்பட்டது. அத்தகைய கெளரவத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகர் மோகன்லால்தான்.

மோகன்லாலைத் தன்னார்வப் படையில் சேர அனுமதிக்க இந்திய இராணுவம் அதன் விதிகளை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. ஏனெனில், இந்திய ராணுவம் அந்த கெளரவத்தை வழங்க நிச்சயித்திருக்கும் வயதை விட மோகன்லாலுக்கு வயது அதிகமாக இருந்தது. மோகன்லாலுக்கு "கெளரவ லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்க இந்திய ராணுவம் விதிகளைத் தளர்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com