தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம்!

'தடம்', 'யானை', 'சினம்' என வரிசையாகப் பணிபுரிந்த அழகு ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு எக்கச்சக்க பெயர் சேர்ந்திருக்கிறது.
தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம்!
Published on
Updated on
2 min read

'தடம்', 'யானை', 'சினம்' என வரிசையாகப் பணிபுரிந்த அழகு ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு எக்கச்சக்க பெயர் சேர்ந்திருக்கிறது. 'தில்', 'தூள்', 'கில்லி', தெலுங்கில் வந்த 'பங்காரம்' என அவர் வேலை பார்த்த அத்தனை படங்களும் ஹிட்.

எதிர்பாரா விபத்து முடக்கிப் போட, 7 வருடங்களுக்குப் பின் மீண்டு வந்து இயங்கத் தொடங்கியிருக்கிறார். தணியாத தாகம், தளராத வேகம் என தனக்கான அடுத்த கட்ட சினிமாவைத் தேடுகிறார். திறந்த ஜன்னல் வழியாக வெயிலும், காற்றும், நிழலும் பரவிக் கொண்டே இருக்கிற அந்த அறைக்குள் பேசத் தொடங்குகிறார்.

எப்படி இருக்கிறீர்கள்?

ரொம்பவும் பாதுகாப்பானவனாகவே இருந்தேன். ஒரு படப்பிடிப்புக்காக மொராக்கோ சென்றேன். அது பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சி. எல்லோருக்கும் அத்தனை வேகம். எதிர்பாராமல் மாடியிலிருந்து தவறி விழுந்தேன். பெரும் விபத்து. சுதாகரிப்பதற்குள் எல்லாம் முடங்கியது. இடது கையையும் காலையும் அசைக்கவே முடியவில்லை.

இனிமேல் அவ்வளவுதான் என உணர்ந்தேன். ஆனால், கடவுளின் ஆசியால், உறவுகளின் தீராத பிரியத்தால் நான் இன்றைக்குத் திரும்பி வந்திருக்கிறேன். 50 அடி கூட நடக்க முடியாத நான், ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் வரை நடந்து மீண்டு வந்தேன். அவ்வப்போது வீங்கிக் கொள்ளும், வலி கொடுக்கும். நம்பிக்கை மட்டுமே துணை. உறவுகளை தவிர யாரும் இல்லை. எல்லாம் கடவுள் செயல். உடல் நலம் சரியில்லை என்பது கூட பொய்தான்.

மனம்தான் சரியில்லை. ஒரு கலைஞனுக்கு உடல் நலம் எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது உணர்கிறேன். பொருளாதாரம், உறவு, நட்பு என எல்லாவற்றிலும் சிக்கல்கள். மீண்டு வந்திருக்கிறேன்.

நீங்கள் பாதிக்கப்பட்டபோது யாராவது வந்து பார்த்தார்களா?

எல்லோருக்கும் தெரியும். அதெல்லாம் இப்போது வேண்டாம். அந்தப் பயணம் மிகக் குரூரமானது. பயங்கரமானது. நினைத்துப் பார்க்க முடியாத பசி, தாகம், வலி, கொடுமைகள் நிறைந்தது. இவ்வளவையும் தாண்டி வந்து விடுகிற மன நிலை இருந்ததுதான் எனக்கான சிறப்பு. ஒவ்வொரு விடியலிலும் நம்பிக்கைதான் துணையாக இருந்தது. போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு.

தனிமை, பிரிவு, விரக்தி... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே நிரந்தரம். செயற்கைக் கால்களை வைத்துக் கொண்டு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய பிஸ்டோரியஸின் ஒரு வியர்வைத் துளி, மூங்கிலில் விரல் தடவி விரல் தடவி ஒரு தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம், இடுப்புக்குக் கீழே எதுவும் செயல்படாமல் கணினியில் புதிய மென் பொருள் கண்டுபிடிக்கும் ஒரு சகோதரியின் விரல்கள், நோயாளிகளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக்கிக் கொண்ட செவிலித்தாயின் புன்சிரிப்பு, தூக்கு கைதியாக நின்ற மகன் பேரறிவாளனையும் மற்றவர்களை மீட்க, சதா அலைந்து திரிந்த அற்புதம்மாளின் வார்த்தைகள்... இதற்கு எல்லாம் முன்பு நமது சோகங்களும் விரக்திகளும் தூசியானது.

7 வருட இடைவெளி... மீள முடியாத துயரம்... இருந்தும் 'தடம்', 'யானை', 'சினம்' என ஆச்சரிய உழைப்பு... எப்படி உணர்கிறீர்கள்?

ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. மொழிகள் பல இருந்தாலும், எனக்கான ஒரே மொழி சினிமாதான். என் உலகமே அதுதான். ஒரு இருக்கையில் கட்டிப் போட்டாலும், சினிமாதான் மன ஓட்டமாக இருக்கும். அது என் இயல்பு. திருவாரூரில் எல்லாம் இருந்தது. பெரும் விவசாயி மகன். அதையெல்லாம் விட்டு விட்டு சினிமா தாகத்தில் சென்னைக்கு வந்தவன் நான்.

சினிமா விரும்பி ஏற்றுக் கொண்டது. என் உயரமும் இதுதான்... என் தாழ்வும் இங்கேதான் என்று தீர்மானித்து வந்தவன். பரபரப்பான நாள்களில் எந்தப் புள்ளியில் இருந்தேனோ, அதே புள்ளிக்குத் திரும்ப வேண்டும்.

அதுதான் என் இலக்கு. கிடைத்த நாள்களில் அவ்வளவு படித்தேன். பக்குவப்பட்டு வந்திருக்கிறேன். நல்ல சினிமாவுக்கான இலக்கணம் எது என்பது இப்போது புரிகிறது. நல்ல இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒரு கதை என்னை ஈர்க்க வேண்டும். எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது. நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவு

மறைவின்றித் தரிசித்து, அப்படி தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து அதையே உணர்வு பூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா. அப்படியான சினிமாக்கள்தான் என் தேர்வு. என் அனுபவங்கள் பெரிதாகிறது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் வந்திருக்கிறது. அடுத்தடுத்த பயணங்கள் வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.

சமீபமாக ஆச்சரிய சினிமாக்கள் பல வந்திருக்கின்றன... யாரெல்லாம் கவனம் ஈர்த்தார்கள்?

எல்லோருக்கும் வாழ்த்துகள். நான் பெரிதாக படங்கள் பார்க்கவில்லை. திரையரங்குப் போய்ப் பார்ப்பதற்கான சூழல் இல்லை. ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. ஒரு ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றிப் போய் கதை செய்வது மட்டும்தான். அதைப் புரிந்து கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். எனக்குப் பொதுவாக பிரதான் சாரின் படங்கள் பிடிக்கும். அனில் மேத்தா, சுதீப் சட்டர்ஜி இருவரும் என்னை அதிகம் ஈர்த்தவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com