அமெரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது.
வி.ஆர்.எஸ். சம்பத்
வி.ஆர்.எஸ். சம்பத்
Published on
Updated on
4 min read

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. "உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின்' சார்பில் நடத்தப்படவிருக்கும் பன்னிரண்டாவது பொருளாதார மாநாடு இது.

இந்த மாநாட்டின் நோக்கம், ஆக்கம், தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உலகத் தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவரும், வழக்குரைஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் விரிவாகப் பேசினார். அதன் தொகுப்பு:

உலகத் தமிழர் பொருளாதார அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே, இயற்கையாகவே தமிழர்களுக்கு தங்கள் வாழ்விலே செல்வச் செழிப்பை உருவாக்க வேண்டும், தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்கிற எண்ணம்தான். ஆனால், தங்களுடைய அந்த எண்ணத்தின் செயலாக்கம் மிகவும் குறைவு.

இன்று, உலகம் முழுவதிலுமாக லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்தத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு அமைப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்தத் தமிழ் அமைப்புகளுடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் புலப்படும்.

தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்துமே இலக்கியம் சார்ந்ததாகவோ, கலை சார்ந்ததாகவோ இருக்கும். அதாவது, பட்டிமன்றம், இலக்கியச் சொற்பொழிவுகள், நாடகம், நடனம், கர்நாடக இசை, சினிமா பிரபலங்கள் மற்றும் திரை இசை, சார்ந்ததாகவே இருக்கும். உலகத்தின் எந்த நாட்டுக்குப் போனாலும் இதைத்தான் நாம் பார்க்க முடியும். தமிழ் மொழியின் அடிப்படையில் அறிவு சார் மற்றும் வர்த்தகம், பொருளாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் கிடையாது.

சிந்தி இனத்தவரை எடுத்துக் கொள்ளுங்கள்... அவர்களுக்கென்று இந்தியாவில் தனி மாநிலம் கிடையாது. ஆனால், அவர்கள் ஒருங்கிணைந்து "சிந்தி வர்த்தகக் கழகம்' உருவாக்கி, வர்த்தக ரீதியாக உலகமெங்கும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

குஜராத்திகளுக்கு ரத்தத்திலேயே வர்த்தகம் ஓடுகிறது. உலகத்தில் எங்கே சென்றாலும் அவர்கள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். பஞ்சாபியர்களும் அப்படித்தான். தொழில், வர்த்தகத் துறைகளில் மிகவும் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆந்திராவினரும் அப்படியே! கேரளாவை எடுத்துக் கொண்டால், உலகமெங்கும் சென்று பல்வேறு துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

வாஜ்பாய் அளித்த யோசனை

அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்த சமயத்தில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி, இந்திய அரசாங்கம், அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆண்டுதோறும் அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியதன் அடிப்படையில், அவர் 2003 - ஆம் ஆண்டு முதல் முறையாக அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் உலகமெங்குமிருந்து சுமார் எட்டாயிரம் பேர் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். அவர்களில் சுமார் 2000 பேர் மலேசியா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, மொரிஷியஸ் என்று பல்வேறு நாடுகளிலிருந்து வந்த தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பல்வேறு மொழி சார்ந்த அந்த அயல்நாட்டு இந்திய விருதினர்களை அந்தந்த மாநில அரசுகள் மிகவும் அக்கறையோடு கவனித்துக் கொண்டன. விருந்தளித்து கெளரவித்தன. அப்போது நான் மலேசிய அரசாங்கத்துக்கு சட்ட ஆலோசகராக இருந்தேன். மாநாட்டுக்கு மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு வந்திருந்தார்.

அவரது அழைப்பின்பேரில்தான் நான் அந்த மாநாட்டுக்குச் சென்றேன். ஆனால் வந்திருந்த தமிழர்களைக் கவனிப்பாரில்லை. அதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த அவர் தமிழ் பிரதிநிதிகளுக்கு தன் சார்பில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதன் நீட்சியாக, தமிழ் சார்ந்த தொழில் வணிகத் துறையினர் அனைவரையும் ஒருங்கிணைத்து, சர்வதேச அளவில் மாநாடு நடத்தலாம் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.

டாக்டர் ராஜன் - நெப்போலியன்
டாக்டர் ராஜன் - நெப்போலியன்

தமிழர் அமைப்பு

அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் உலகத் தமிழர் பொருளாதார அமைப்பு. அதன் சார்பில் 2005-ஆம் ஆண்டு ஒரு கருத்தரங்கு நடத்தினோம். 2008-இல் அடுத்து ஒரு கருத்தரங்கினை கோலாலம்பூரில் நடத்தினோம்.

2009-இல் அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் மாநாட்டை மத்திய அரசு சென்னையில் நடத்தியது. அதனை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதுதான் உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின் சார்பில் நடத்தப்படும் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு. அதில் சுமார் 800 சர்வதேச தமிழர்கள் கலந்துகொண்டார்கள்.

சர்வதேச அளவில் தமிழ் தொழில் துறையினர் ஒருங்கிணைப்புப் பணியின் துவக்கம் அது என்று சொல்லலாம். சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிறகு 2011-இல் துபையில் இரண்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டினை நடத்தினோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிட்டியது. அதனை அடுத்து சில வருடங்கள் இந்த மாநாட்டினை நடத்த முடியாமல் போனது.

மீண்டும் சென்னையில் 2016-இல் மூன்றாவது மாநாடு. அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நான்காவது மாநாட்டினை நடத்தியபோதும், சர்வதேச அளவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அடுத்த ஆண்டில் புதுச்சேரி அரசாங்கத்தின் ஆதரவோடு புதுச்சேரியில் ஐந்தாவது தமிழ் பொருளாதார மாநாடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் சென்னையில் நடைபெற்றது. இவற்றில் 2020-இல் நடைபெற்ற மாநாடு இணையவழியில் நடைபெற்றது. அதன் பிறகு துபை, சென்னை, கோலாலம்பூரில் தொடர்ந்து நடைபெற்ற இந்த மாநாடு இப்போது அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

அரசுகள், தொழில் துறை அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், தொழில் துறை வல்லுனர்கள், தொழில் துறை முன்னோடிகள் என்று பல்வேறு தரப்பினரது ஒத்துழைப்பின் காரணமாகத்தான் இந்த மாநாடுகளை எங்களால் வெற்றிகரமாக நடத்த முடிகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டு அரசும், மத்திய அரசும் இந்த மாநாடுகளை நடத்துவதற்காக எங்களுக்கு நிதி உதவி அளித்து வருவதையும், மாநாட்டில் பங்கேற்க தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எங்களது முந்தைய மாநாடுகளில் இந்தியாவில் இருந்து தமிழக அமைச்சர்களும், மத்திய அமைச்சர்கள், கயானா நாட்டு பிரதமர், மொரிஷியஸ் குடியரசுத் தலைவர், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகளின் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.

அதிபர்களும் அமைச்சர்களும்

தமிழ் பொருளாதார மாநாடுகளில் பொறியாளர்கள், மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் எனப் பல் தொழில் புரிவோர்களுக்கும் தனித்தனி அமர்வுகள் மூலமாக விவாதங்கள் நடத்தி ஆலோசனை வழங்குவார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில் ஆலோசகர்கள் எனப் பலரும் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு குறித்த சிறப்பு அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் இந்த வருடத்து மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொருளாதார முன்னேற்றத்துக்குச் சிறப்பான பங்களிப்பு செய்துவரும் தமிழர்கள், சிறப்பான பணி ஆற்றிவரும் தமிழ் அமைப்புகள், தமிழர்களின் முன்னேற்றத்துக்காக உதவிடும் பிற அமைப்புகள் எனத் தேர்வு செய்து விருதுகள் அளித்துக் கெளரவிக்கவிருக்கிறோம்.

இந்த மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதில் அமெரிக்காவின் மேரிலாண்ட் முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜன் நடராஜன், பிரபல நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இந்த மாநாடு அமெரிக்காவில் நடக்கவிருப்பதாலும், தற்போது அமெரிக்க - இந்திய உறவில் சில சிக்கல்கள் இருப்பதாலும், இந்த மாநாட்டில் இமிகிரேஷன் பிரச்னைகள், வரி விதிப்பு பாதிப்புகள், மனித உரிமைப் பிரச்னைகள், அவற்றுக்கெல்லாம் தீர்வுகள், இரு தரப்பு உறவு மேம்பட ஆலோசனைகள்... இவை பற்றி எல்லாம் பேசுவதற்கு சிறப்பு அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இவை தவிர பொருளாதார முன்னேற்றம், சமூக நீதி பற்றிய விவாதங்களும் நடக்க உள்ளது. தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஸ்டார்ட்- அப்களை ஊக்குவிப்பது போன்றவற்றுக்கு வல்லுநர்கள் ஆலோசனைகள் வழங்க இருக்கிறார்கள். நாடுகளின் பொருளாதார ரீதியிலான முன்னேற்றம், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மட்டுமல்லாமல், உலக அளவில் எப்படி மனித குலத்தின் ஒட்டு மொத்த மேம்பாட்டுக்காகவும், வாழ்க்கைத் தர உயர்வுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதையும் பொருளாதார வல்லுனர்கள் விளக்குவார்கள்.

சர்வதேச மையம்

பல்வேறு நாடுகளிலும் ஒய்.எம்.சி.ஏ. மாதிரி சர்வதேச தமிழ் மையம், தமிழ் இளைஞர்கள் மையம் போன்றவற்றை நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி கலந்தாலோசனை செய்யப்போகிறோம். உலகமெங்கும் அது போன்று நூறு மையங்கள் ஏற்படுத்தி, அந்த நாடுகளுக்குச் செல்லும் தமிழர்கள் தங்குவதற்கான இட வசதி, உணவு வசதி, நூல்நிலையம் ஆகியவை அளிக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

அயல்நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு இந்திய அரசு "அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்' என்பதற்காக அடையாள அட்டை ஒன்றை வழங்குகிறது. மலேசியா, மொரிஷியஸ், சூரிநாம் போன்ற பல நாடுகளில் வசிக்கும் இலைய தலைமுறை இந்திய வம்சாவளியினர் அந்த அடையாள அட்டையைப் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவர்கள் அந்த அடையாள அட்டையை சிக்கலின்றிப் பெற உதவவும் உரிய நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்.

இந்தியாவிலிருந்து சுமார் 150 பேர் இந்த மாநாட்டுக்கு வருவார்கள் என்றும், அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்களில் இருந்து தலா பத்துப் பேர் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். மாநாடு குறித்த மேலும் விவரங்களுக்கு www.economic_conference.com என்ற இணைய முகவரியை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com