'உண்ணும் உணவிலுள்ள கார்போஹைட்டிரேட், செரிமான மண்டலத்திலுள்ள நொதிகளால் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் என்னும் எளிய பொருளாக மாற்றம் பெற்று ரத்தத்தில் கலந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது அதிகமானால் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.
ஆனால், செயற்கை இனிப்புகள் உடலுக்குள் சென்றவுடன் சாதாரண சர்க்கரை போன்று உயிர்வேதி வினைகளுக்கு உட்படுவது இல்லை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதும் இல்லை' என்கிறார் காரைக்கால் அரசு அவ்வையார் கல்லூரியின் உணவியல் பேராசிரியர் ப.வண்டார்குழலி.
செயற்கை இனிப்புகளின் நன்மை, தீமைகள் குறித்து மேலும் அவர் தெரிவிப்பதாவது:
'செயற்கை இனிப்புகள் என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் செரிமான நிகழ்வுக்கு உள்ளாகிறது. 'அஸ்பார்டேம்' செயற்கை இனிப்பானது உடைந்து அமினோ அமிலங்கள், மெத்தனாலாக மாறும் நிலையில் சுக்ரலேஸ் இனிப்பு எந்த மாற்றமும் அடையாமல், உட்
கிரகிக்கப்படாமல் 80 % மலம் வழியாகவும், 15 % சிறுநீர் வழியாகவும் வெளியேற்றப்படுகிறது. சில நேரங்களில் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிரிகளால் நொதித்தலுக்கு உள்ளாகி, சிறு துகள்களாக உடைக்கப்படுகின்றன.
அஸ்சல்பேம் இனிப்பும் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. நியோடேம் இனிப்பு, சிறிதளவு உடைக்கப்பட்டு மெத்தனாலாக மாறி சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது.
செயற்கை இனிப்புகளைச் சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் அனைத்துவிதமான உடல்நலக்கேடுகளும் வரும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வமான உண்மையும் இல்லை. வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், அதிக நாள்களும் அல்லது தொடர்ச்சியாக பல ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட செயற்கை இனிப்பைச் சாப்பிட்டு வரும் நிலையில் உடல் நலக்கேடுகள் வருகின்றன. ஒவ்வொரு இனிப்பும் வெவ்வேறு வகையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உதாரணத்துக்கு, அஸ்சல்பேம், சுக்ரலோஸ் இனிப்புகள் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இதயத் தசைகளில் ஏற்படும் பெருந்தமனி அடைப்பு நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். அஸ்பார்டேம் இனிப்புகள் சாப்பிடுபவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஸ்ட்ரோக் வரும் ஆபத்து அதிகரிக்கிறது. இந்த ஆபத்துகள், என்றாவது ஒருநாள் செயற்கை இனிப்பு சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதில்லை. தொடர்ச்சியாகச் சாப்பிடுபவர்களுக்கும் ஏற்கெனவே கட்டுப்பாடற்ற நோய்நிலை உள்ளவர்களுக்கும் ஏற்படும்.
குடலில் குறிப்பிட்ட நுண்ணுயிரிகளின் அளவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அஸ்சல்பேம், அஸ்பார்டேம் போன்றவை மலத்தில் வெளியேறிவிட்டன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குடலின் ஒட்டுமொத்த நுண்ணுயிரிகளின் படலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதைக் கண்டறிந்ததால் அதிகப்படியான செயற்கை இனிப்புகள் நோய் ஏற்படுத்தும் நுண்கிருமிகளை வெளியிலிருந்து வரவழைத்துவிடும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
செயற்கை இனிப்புகளில் சுக்ரலோஸ் சேர்த்த உணவுகளைத் தொடர்ச்சியாக உட்கொண்ட நபர்களில், பலருக்கு உடல் எடை அதிகரித்ததாக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பொருள் நேரடியாக உடல் எடையை அதிகரிக்காமல், பசியின் அளவை அதிகரித்ததால் உணவின் அளவும் அதிகரித்து, உடல் எடை அதிகரித்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சுக்ரலோஸ் கொடுத்து நடத்தப்பட்ட ஓர்ஆராய்ச்சியில், செயற்கை இனிப்பு சேர்த்துக் கொண்டவர்களின் ரத்த அளவில் குளுக்கோஸ், இன்சுலின், சி பெப்டைட் போன்றவை அதிகரித்து இருப்பதையும், மற்றொரு ஆராய்ச்சியில் ரத்த குளுக்கோஸ், ரத்த கொழுப்பு அளவு குறைந்து இருப்பதையும் கண்டறிந்தனர்.
எனவே, செயற்கை இனிப்புகள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அளவைக் கொடுப்பதால், நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் உணவில் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுவதால், அவர்களின் உடல் எடையும் சரியான அளவை
விடக் குறைவாகவே இருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயற்கை இனிப்புகளால் எவ்விதப் பலனும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் செயற்கை இனிப்புகளைச் சாப்பிடுவதால் குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
செயற்கை இனிப்புகளுக்கான ஒழுங்குமுறைகள்:
அமெரிக்க உணவு - மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம், இந்திய உணவுப் பாதுகாப்பு- தரக் கட்டுப்பாடு ஆணையம் போன்றவை செயற்கை இனிப்புகளை உணவுச் சேர்மானங்கள் என்ற வகைக்குள் வைத்துள்ளன. இவ்விரு நிறுவனங்களும் உணவுச் சேர்க்கைகள் மீதான கூட்டு நிபுணர் குழு, உலக சுகாதார அமைப்பு போன்றவை அளித்துள்ள செயற்கை இனிப்புகளுக்கான 'அனுமதிக்கப்பட்ட அளவு' வரைமுறையையே பின்பற்றுகின்றன.
அவற்றையே உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், ஊட்டச்சத்து தொடர்பான நிறுவனங்களுக்கும் பரிந்துரைத்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து உடல் எடைக் குறைப்புக்காகப் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்புகளுக்கான சிறப்பு வழிமுறைகளையும் உலக சுகாதார அமைப்பு கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருளின் மேல் உறையில் இருக்கும் மூலப்பொருள்களின் பட்டியலில், எந்த வகையான செயற்கை இனிப்பு எந்த அளவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும், யாரெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்ற விவரமும் குறிப்பிடப்பட வேண்டும்' என்கிறார் ப. வண்டார்குழலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.