திரைக்கதிர்

இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
திரைக்கதிர்
Updated on
2 min read

இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, குடியரசுத் தலைவரால் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், நடிகை சமந்தாவும் விருந்தில் கலந்துகொண்டார். அது தொடர்பான படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.

''நான் வளர்ந்த காலத்தில் எனக்குத் துணையாகவோ, தட்டிக் கொடுக்கவோ யாரும் இல்லை. இங்கெல்லாம் வந்து சேருவேன் என்று ஒருபோதும் என் உள்ளுணர்வு சொன்னதே இல்லை. என் உழைப்புக்கு மதிப்பளித்த இந்தத் தேசத்துக்கு நான் என்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'சிறை' படத்துக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பூ. இது குறித்து பதிவில் அவர், ''சமீபகாலமாகப் பலராலும் பேசப்பட்டு, அமைதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள 'சிறை' படத்தை ஒரு வழியாகப் பார்த்துவிட்டேன். இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். ஒரு சாதாரண கதையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சரியான நடிகர்களைத் தேர்வு செய்த இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி பாராட்டுக்குரியவர். உண்மையில் படத்தில் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. ஒரு தேவையில்லாத காட்சியோ, வேண்டாத பாடல்களோ எதுவுமே இல்லை. மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள்.'' எனக் குறிப்பிட்டிருக்கிறார். விக்ரம் பிரபு உள்ளிட்ட நடிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முப்பது வருடங்களுக்கு மேலாகியும் வெளியாகாமல் இருந்த ரஜினி நடித்த 'ஹம் மெய்ன் ஷ ஹென்ஷா கவுன்' என்ற ஹிந்தி படம் கூடிய விரைவில் வெளியாகிறது என அறிவித்திருக்கிறார்கள். பிரபல இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவான இப்படம், தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இப்படத்தின் ரிலீஸை நிறுத்தியது. ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஏ.ஐ. உதவியுடன் படத்தை ரீமாஸ்டரிங் செய்து, நவீன திரையரங்குத் தரத்துக்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.

'ஆம்பள', 'ஆக்ஷன்', 'மதகஜராஜா' படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஷால் - சுந்தர்.சி காம்போ இணைந்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பு 'மதகஜராஜா' பட ரிலீஸ் சமயத்திலேயே வந்திருந்தது. படத்துக்கு புருஷன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

'அரண்மனை 4', 'மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் இப்படத்துக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தமன்னா மீண்டும் சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இப்போது இந்த அட்டகாசமான காம்போவுக்குள் யோகி பாபுவும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துல விஷால் ஒரு பக்கம் சைலண்டான புருஷனாகவும் இருப்பாரு, அதே சமயம் வைலண்டான பக்கமும் அவருக்கு இருக்கும். இதுதான் படத்தின் லைன் என்கிறார்கள். இது குறித்த அறிமுக விடியோவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com