மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாரம்பரியத்துக்கு அங்கீகாரம்...

நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட கோத்தகிரியில் வசிக்கும் பழைய பல்லவ மரபைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் 'அலுகுறும்பர்' என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினராக உள்ளனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 10:30 pm

நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட கோத்தகிரியில் வசிக்கும் பழைய பல்லவ மரபைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் 'அலுகுறும்பர்' என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினராக உள்ளனர். கன்னடம் கலந்த கலப்பு மொழியைப் பேசும் இவர்கள், பாரம்பரிய வேட்டையாடிகளாகவும், தோட்டக்கலை வல்லுநர்களாகவும் உள்ளனர்.

ஓவியப் பாரம்பரியம் கொண்ட இவர்களின் 3 ஆயிரம் ஆண்டு பழைமையான புதிய கற்கால ஓவியங்கள் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை முறையை சித்திரிப்பதாகவும், அன்றாட வேலைகளான தேன் சேகரிப்பு, தானியங்கள் உலர்த்துதல், வனப்பகுதியின் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்தக் கலை வடிவத்தை வெள்ளரிக்கோம்பைப் பகுதியைச் சேர்ந்த 'கிட்னா' என்ற ஆர்.கிருஷ்ணன் பாதுகாத்து வந்ததோடு, புவிசார் குறியீடு பெறவும் பெருமுயற்சி எடுத்து வந்தார். கடந்த ஆண்டில் இவர் மறைவுற்ற நிலையில், கிட்னா கிருஷ்ணனின் 30 ஆண்டுகால கலைச்சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.

Story image

அவரது மனைவி சுசீலாவிடம் பேசியபோது:

'எனது கணவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அலுகுறும்பா பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தி வந்தார். மலை உச்சிகளிலும், குகைகளிலும் உள்ள ஓவியங்களைப் பார்த்து, அதனை ஓவியமாக வரைந்ததற்காக, அவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் இருக்கும் வரை வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. அவரின் மறைவுக்குப் பிறகு எங்களின் குடும்பச் சூழலே தலைகீழாக மாறிவிட்டது.

எங்களின் வீட்டை யானை இடித்துச் சேதப்படுத்தியது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள கல்லாறு பகுதியில் அடர்ந்த பாக்குத் தோப்புக்கு இடையே எனது தாயார் வசிக்கும் குடிசைக்கே எனது மகள்கள் வாசுகி, கீதா, கீர்த்திகா, மகன் ராகுல் ஆகியோருடன் வந்துவிட்டேன். நான் கூலி வேலைக்குச் செல்கிறேன்.

மகள் வாசுகியை மருத்துவராக்க எனது கணவர் ஆசைப்பட்டார். அது முடியாமல் போய்விட்டது. மிகுந்த சிரமத்துக்கு இடையே தனியார் நர்சிங் கல்லூரியில் சிலரது உதவியால் சேர்த்தேன். படிப்பையும் தொடர முடியாமல் பாதியில் கைவிட்டு, வீட்டில்தான் இருந்தாள். தற்சமயம் வாசுகிக்கு தொடர்ந்து படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகன் ராகுல் மேட்டுப்பாளையம் சீலியூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9 -ஆம் வகுப்பும், மகள் கீதா 7- ஆம் வகுப்பும், கீர்த்திகா 4- ஆம் வகுப்பும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்கள் இருவரும் அரவேணுவில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். 4 பேரையும் படிக்க வைத்து கரை சேர்த்துவிட வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறேன்' என்கிறார் சுசீலா.

Story image

மகள் வாசுகி கூறியது:

'எனது தந்தை 6-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பாறைகள், சுவர்களில் தாத்தா தீட்டி வந்த ஓவியங்களைக் கவனித்து வந்த எனது தந்தையாரும் வேங்கை மரத்தின் பாலைக் கொண்டு பல்வேறு வண்ணங்களை உருவாக்கியுள்ளார்.

பாரம்பரிய ஓவியக் கலையைப் பாதுகாப்பதற்காக, இலைகள், குச்சிகள், புற்கள், ஆலம் விழுதுகள், விலங்குகளின் சாணம், மண்ணிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கைச் சாயங்களை மட்டுமே எனது தந்தை பயன்படுத்தி, கேன்வாஸ் துணியில் ஓவியங்களை வரைந்து வந்தார். அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு சென்னை, தில்லி போன்ற பகுதிகளில் கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார். அவர் மறைவால், எனது கல்லூரி படிப்பும் தடைபட்டது. குடும்பமும் வறுமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

எனது தந்தைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஆனால், அதைக் காணவும், விருதை வாங்கவும் அவர் இல்லையே என்ற கவலை எங்களுக்கு உள்ளது. எங்களின் பாரம்பரிய கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கும், வெளியுலகுக்கும் கொண்டு சென்று பாதுகாத்தார்.

நானும் ஒரு செவிலியராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. எங்களுக்குத் தேவையான உதவிகளை நிறைவேற்றித் தருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது' என்கிறார் வாசுகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.