கால்நடை மருத்துவத்துக்கு வெளிச்சம்!

'எளிதில் மருத்துவம், கட்டுப்படியான விலை, குறிப்பிட்ட வேளைகளில் அல்லது நாள்களில் குணம் ஆகிய மூன்றும்தான் கால்நடை மருத்துவத்துக்குத் தேவை.
கால்நடை மருத்துவத்துக்கு வெளிச்சம்!
Updated on
2 min read

'எளிதில் மருத்துவம், கட்டுப்படியான விலை, குறிப்பிட்ட வேளைகளில் அல்லது நாள்களில் குணம் ஆகிய மூன்றும்தான் கால்நடை மருத்துவத்துக்குத் தேவை. இவையெல்லாம் ரசாயன மருத்துவத்தில் இல்லை. ஆனால், மூலிகை வழி கால்நடை மருத்துவத்தில் தீர்வு உள்ளது. எந்த நேரமும் வீட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, அரைத்து கால்நடைகளுக்குக் கொடுத்தால் வெற்றிகரமாக அமையும். ரசாயன மருத்துவத்தில் ஆகும் செலவில் ஆறில் ஒரு பங்குதான் மூலிகை மருத்துவத்துக்கு ஆகும். மூலிகை மருத்துவத்தில் மருந்து பொருள்களின் எச்சம் பாலிலோ, மண்ணுக்குள்ளோ செல்லாது. பால், முட்டை, இறைச்சியில் ரசாயன மருந்துகள் இருக்காது'' என்கிறார் கால்நடை ஆராய்ச்சியாளரும், பாரம்பரிய மூலிகை மருத்துவ நிபுணருமான பேராசிரியர் என். புண்ணியமூர்த்தி.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த இவர் கண்டுபிடித்துள்ள மூலிகை மருத்துவத்தின் வாயிலாக லட்சக்கணக்கான கால்நடைகள் பல்வேறு நோய்களிலிருந்து குணம் பெற்றுள்ளன. இதற்காக இவருக்கு "பத்மஸ்ரீ' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து புண்ணியமூர்த்தியிடம் பேசியபோது:

'மனிதர்களைப் போன்று, கால்நடைகளுக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகை மருத்துவத்தையே முன்னோர்கள் பயன்படுத்தினர். 1970- ஆம் ஆண்டுகளில் ஊசி, மருந்து, மாத்திரை போன்ற முழுவதும் செயற்கை ரசாயன மருத்துவத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இதனால், கால்நடைகளுக்கு நாமே மருந்துகள் கொடுத்து வந்த நிலை மாறி, கால்நடை மருத்துவரையே முழுமையாகச் சார்ந்திருக்கக் கூடிய நிலைமை உருவானது.

ரசாயன மருத்துவத்தில் கால்நடைகளைக் குணப்படுத்துவதில் இடைவெளி ஏற்பட்டது. முழுமையாகக் குணமாகாதபோது, இதைவிடச் சிறந்த மருத்துவ முறை இருக்கிறதா? என்ற ஒரு தேடல் எழுந்தது. முதலுதவிக்கான வாய்ப்புகள் ரசாயன மருத்துவத்தில் குறைவாக இருந்தது. 2001- ஆம் ஆண்டில் "டானிடா' திட்டத்தின் கீழ் மரபுவழி மருத்துவ முறைகளை ஆவணப்படுத்தி, தொகுப்பாகக் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கலில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த நிலையில், தஞ்சாவூருக்கு 2001- ஆம் ஆண்டில் பணி மாற்றலாகி வந்தேன். அப்போது, மூலிகை மருத்துவத்தில் கவனம் செலுத்தினேன். கறவை மாடுகள் மடி நோயால் பாதிக்கப்படும்போது, விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியாக இழப்பைச் சந்திப்பர். இதற்கு ரசாயன மருத்துவத்தில் ஊசி போட்டாலும் வீக்கம் வடியுமே தவிர, பால் கறக்க முடியாது. இதற்காக மூலிகை வழி மருத்துவத்தில் முயற்சி மேற்கொண்டேன். இதன் மூலம் சோற்றுக்கற்றாழை, மஞ்சள், சுண்ணாம்பு கலவையை உருவாக்கி, எங்களது வீட்டில் இருந்த மாடுகளுக்குக் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சோதனை அடிப்படையில் கொடுத்தேன். இதேபோல பயிற்சிக்கு வரும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கும் கொடுத்து பரிசோதனை செய்தேன்.

சோற்றுக்கற்றாழை 250 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், சுண்ணாம்பு 15 கிராம் என்ற அளவில் அரைத்து வரக்கூடிய கலவையில் ஒரு கை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி கரைத்து ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை கொடுத்தால், மடி நோய் குணமாகிவிடும் என்பதை நான்கு ஆண்டுகளுக்குள் உறுதிப்படுத்திவிட்டேன்.

இந்த வெற்றி அளித்த ஊக்கம்தான் சினைப் பிடிப்பு, கோமாரி நோய், உண்ணி வெளியுறை ஒட்டுண்ணி, சினை மாட்டின் மடியில் நீர்க் கோர்த்தல், கழிச்சல் வயிற்றுப்போக்கு உள்பட 34 வகையான பிரச்னைகளுக்கும் மருத்துவ முறைகளைக் கண்டுபிடித்தேன். இதை மத்திய அரசின் இந்திய பால் வள நிறுவனம் 12 மொழிகளில் மொழிபெயர்த்து, வெளியிட்டது. தரவுகள் அடிப்படையில் இந்த மருந்துகள் பத்து ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரிய வந்தது.

மாடுகள் மட்டுமல்லாமல் ஆடு, கோழிகளுக்கும் இந்த மூலிகை மருத்துவம் மிகப் பெரிய பயன் தருகிறது.

மாட்டுக்கு ஊசி போட்டவுடன் 10 முதல் 22 நாள்களுக்கு பாலை விற்கக் கூடாது. மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும்போது, பாலை வழக்கம்போல விற்கலாம். அதனால், பாதிப்பு ஏதும் ஏற்படாது. எனவே, கால்நடைக்கான மூலிகை மருத்துவம் இயற்கை வேளாண்மைக்கு அடித்தளமாக உள்ளது. இதுபோல இயற்கையான முறையில் கால்நடைகளை வளர்த்தால்தான் இயற்கை வேளாண்மையும் சாத்தியமாகும்.

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் இருட்டில் இருந்த நிலையில், அதற்கு ஒரு புதிய வெளிச்சம் மத்திய அரசு அறிவித்துள்ள "பத்மஸ்ரீ' விருதால் கிடைத்துள்ளது'' என்கிறார் புண்ணியமூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com