இளைஞர்களிடம் வாசிப்பு அதிகமாகிவிட்டது

தமிழில் இப்போது வாசிப்பு குறைந்துவிட்டது என்றும், இளைஞர்கள் மின் நூல்களை வாசிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இளைஞர்களிடம் வாசிப்பு அதிகமாகிவிட்டது
Updated on
2 min read

'தமிழில் இப்போது வாசிப்பு குறைந்துவிட்டது என்றும், இளைஞர்கள் மின் நூல்களை வாசிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும், இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியில் ஏராளமான இளைஞர்கள் தேடித் தேடிச் சென்று நூல்களை வாங்கி, கை நிறைய எடுத்துச் சென்றதைக் கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது' என்கிறார் மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான கே.வி.ஷைலஜா.

தமிழ் மண்ணில் வளர்ந்தாலும், தாய் பூமியான கேரளத்தின் மழைநீர்ப் பாசி படர்ந்த குளிர் மணத்தை தனக்குள்ளே தக்க வைத்துக் கொண்டிருக்கும் கே.வி.ஷைலஜா, மலையாள இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்ததற்காக எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். அவரிடம் பேசியபோது:

'அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எனது பெற்றோர் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். சேலத்திலும், அதன் பிறகு திருவண்ணாமலையிலும் எனது தந்தை தொழில் செய்தார். திருவண்ணாமலைக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் என் தந்தை இறந்துவிட்டார். உறவினர்கள்தான் அம்மாவையும், என்னையும், என் அக்கா ஜெயஸ்ரீயையும் கவனித்துக்கொண்டனர்.

இளம் வயதிலேயே பத்திரிகைகளையும், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களின் எழுத்துகளையும் வாசிப்பேன். கல்லூரியில் படிக்கும்போது சுந்தர ராமசாமி என அடுத்தக் கட்டத்துக்குச் சென்றேன்.

நான் படித்தது திருவண்ணாமலையிலும், சிதம்பரத்திலும் என்பதால் தமிழ் சரளமாகப் பேச, எழுதத் தெரியும். எழுதவும் தொடங்கினேன்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில் பங்கேற்பேன். 'முற்றம்' என்ற நிகழ்ச்சியில், மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பங்கேற்ற நிகழ்ச்சியை தினமணி கதிருக்கு அனுப்பினேன். அது அட்டைப்படக் கட்டுரையாக வெளியானது. அந்த மகிழ்ச்சிதான் எனக்குள் மொழிபெயர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவர் தனது 'சிதம்பர நினைவுகள்' என்ற நூலை மொழிபெயர்க்குமாறு அளித்தார்.

தாய் மொழியாக இருந்தும் மலையாளம் தெரியவில்லையே என வெட்கப்பட்டேன். என் அக்கா மகள், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது, அவள் உதவியுடன் நான் மலையாளம் கற்றேன். ஓராண்டு கழித்து, அந்த நூலை தமிழில் மொழி பெயர்த்தேன். சென்னையில் நூலின் அறிமுக விழா நடைபெற்றபோது, தனது நூலை மொழிபெயர்க்க வேண்டும் என்று நடிகர் மம்மூட்டி கேட்டார்.

'பசி காதல் பித்து' நூல்:

ஒருநாள் காசர்கோடிலிருந்து ராஜன் என்பவர் எனக்கு முகம்மது அப்பாஸ் என்பவர் எழுதிய 'விஷப்பு பிரணயம் உன்மாதம்' என்ற மலையாள வாழ்வு அனுபவ நூலை அனுப்பி வைத்தார். அந்த நூலைப் படித்தபோது, என்னையும் அறியாமல் நான் மெளனத்துக்குள் மூழ்கினேன். 'மிகச் சிறியது' என்று நினைக்கும் விஷயங்களும் அடுத்தவர்களுக்கு எத்தகைய ஆழமான வலியைத் தரும் என்பதை அது உணர்த்தியது. மனிதர்களை எப்படிப் பார்க்க வேண்டும்? எப்படி நடத்த வேண்டும்? என்று அந்த நூல்தான் கற்றுக் கொடுத்தது.

எங்களது 'வம்சி' பதிப்பகத்தின் நூல்களுக்கு எனது மகன் வம்சியே அட்டையை வடிவமைப்பார். இந்த நூல் மீது எனக்கு ஏற்படுத்திய தாக்கத்தைக் கவனித்துவிட்டு அவர் நூலை முழுமையாகப் படித்துவிட்டு, அதன் அட்டையையும் அவரே வடிவமைத்தார்.

மலையாளம் - தமிழ்ப் பதிப்புலகம்:

மலையாளத்தில் வாசிப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். நான் மொழி பெயர்த்துள்ள 'பசி...காதல்...பித்து' நூல் அங்கே ஒரே ஆண்டில் 15 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. தற்போது நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் 'சூசன்னாவின் புத்தக வீடு' எனும் நூல் மலையாளத்தில் 40 ஆயிரம் பிரதிகள் விற்றுள்ளது. ஒரு நல்ல நூல் வந்தால் உடனே அதை வாங்கி வாசித்துவிட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். நூலகங்களுக்கு நூல்கள் வாங்கும் திட்டத்தை மிகச் சிறந்த வகையில் அங்கே அரசு செயல்படுத்தி வருகிறது. அங்கே பதிப்புலகம் மிகவும் செம்மையாகவும், செழுமையாகவும் உள்ளது.

மலையாளப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் அளவுக்கு, கேரளத்தில் தமிழ்ப் படைப்புகள் மொழி பெயர்க்கப்படுவது இல்லை. நல்ல நூல்களை வெளியிடும் வாய்ப்புகளை ஒருபோதும் நழுவ விடக்கூடாது. நல்ல நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தமிழ் மொழியைப் போல், மலையாளத்தில் நிறைய சிறுகதைகளும், நாவல்களும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. மக்கள் அவற்றை விரும்பி வாசிக்கிறார்கள்' என்கிறார் ஷைலஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com