விசில் வித்தகர்...

இனிய குரல் வளத்தாலும், இசைக்கருவிகளை வாசிக்கும் திறமையாலும் மக்களை வசீகரிக்கும் இசைக்கலைஞர்களில், ஹைதராபாத்தைச் சேர்ந்த கே. சிவ பிரசாத் முற்றிலும் வித்தியாசமானவர்.
விசில் வித்தகர்...
Updated on
2 min read

இனிய குரல் வளத்தாலும், இசைக்கருவிகளை வாசிக்கும் திறமையாலும் மக்களை வசீகரிக்கும் இசைக்கலைஞர்களில், ஹைதராபாத்தைச் சேர்ந்த கே. சிவ பிரசாத் முற்றிலும் வித்தியாசமானவர். பாடாமலும், வாசிக்காமலும் இவர் விசிலிலேயே முழு நீள கர்நாடக இசைக் கச்சேரியையும், திரைப்படப் பாடல்களைக் கொண்ட திரையிசை நிகழ்ச்சிகளையும் அளிக்கிறார். ஏராளமான இசைத்தட்டுகள், ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது எழுபது வயதாகும் அவர், விசில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். அவரிடம் பேசியபோது:

'ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் அருகேயுள்ள இருக்கும் பாபட்லா கிராமத்தில் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்தேன். என் அப்பா வழக்குரைஞர். எனது வீட்டில் எல்லோருக்கும் இசையில் ஆர்வம் இருந்ததால், கிராமபோனும், இசைத்தட்டுகளும் இருக்கும். நாள் முழுக்க இசை வீடெங்கும் நிரம்பியிருக்கும்.

கிராமபோனில் ஒலிக்கும் கீர்த்தனைகள், பக்திப் பாடல்களை 'பத்மஸ்ரீ' விருது பெற்ற கணித நிபுணரான எனது சித்தப்பா விசிலிலேயே பாடுவார். என் அண்ணன் பார்த்தசாரதியும் விசிலில் பாடும் திறமைசாலி. இதனால் நானும் விசில் இசையில் ஈர்ப்பு ஏற்பட்டு, கர்நாடக கீர்த்தனைகள், பக்தி இசை, திரைப்பாடல்களைப் பாடினேன்.

என்னுடைய 12-ஆம் வயதில் எங்கள் ஊர் அனுமன் கோயிலில் கதாகாலட்சேபக்காரர் சதாசிவ சாஸ்திரியின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரால் குறித்த நேரத்தில் வர முடியவில்லை. உடனே கோயில் நிர்வாகிகள் திடீரென்று எங்கள் வீட்டுக்கு வந்து, 'சாஸ்திரி வரும்வரை விசிலில் பாடு' என்றனர்.

நான் மேடையேறி முதல் பாடலைப் பாடி முடித்தவுடன், ஒரே கைத்தட்டல். அடுத்தடுத்து பாடிக்கொண்டே இருக்க மக்கள் மகிழ்ச்சியில் கைத்தட்டினர். இதன்பின்னர், விசில் நிகழ்ச்சிக்கு வாய்ப்புகள் வந்தன.

காங்கிரஸ் வழக்குரைஞர் கோனா பிரபாகர ராவ் தனக்குத் தெரிந்த பிரபலங்களிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, விசிலில் பாடச் சொல்லுவார்.

ஒருமுறை ஹைதராபாத்தில் பாலமுரளி கிருஷ்ணாவின் நிகழ்ச்சியின்போது, கோனா பிரபாகர ராவ் எனக்கு இறைவணக்கம் பாடும் வாய்ப்பை வழங்கினார். நான் பாலமுரளிக்குப் பிடித்த பக்தி கீர்த்தனையைப் பாடியபோது, அவர் பாராட்டியதோடு, சென்னைக்கு வந்து தன்னிடம் இசை கற்றுக் கொள்ளும்படியும் கூறினார்.

நானும் சென்னையில் அவர் வீட்டிலேயே தங்கி, சுமார் இரண்டு வருடங்கள் இசை கற்றேன். மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது நான் அருகில் அமர்ந்து உற்று கவனிப்பேன். ஒரு கச்சேரியின் அம்சங்கள், அதை எப்படி வகைப்படுத்தி அமைப்பது என்றெல்லாம் விரிவாகச் சொல்லிக் கொடுத்தார். எனது முதல் விசில் இசைத் தட்டு ஒலிப்பதிவுக்கும் ஏற்பாடு செய்ததோடு, அவரே எனக்கு கஞ்சிரா வாசித்தார்.

இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். பாராட்டு பாலமுரளி கச்சேரிக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட சமயத்தில், என் விசில் ஒலிப்பதிவு வெளியீடு சென்னையில் நடைபெற்றது. என்னை ஊக்குவித்து வந்த கோனா பிரபாகர ராவ், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்தார். அவரது ஏற்பாட்டில் விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். மிகவும் ரசித்ததோடு, என்னைக் கட்டியணைத்துப் பாராட்டினார்.

பிரபாகர ராவின் ஏற்பாட்டில், பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்தில் பதினைந்து நிமிடங்களுக்கு விசில் நிகழ்ச்சியை நடத்தினேன். நேரம் நிறைவுற்றதும் இசையைத் தொடருமாறு இந்திரா காந்தி கூறினார். சுமார் 45 நிமிடங்கள் அமர்ந்து விசில் இசையை ரசித்தார்.

விசில் மூலமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படப் பாடல்களைப் பாடிவருகிறேன். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று விசில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். அதில் எனது தனித்துவத்தை வெளிப்படுத்தி, சாதனை புரிந்திருக்கிறேன்.

விசில் இசையின் மிகப்பெரிய பலமே அது மொழி எல்லைகளைத் தாண்டிச் செல்லும். வார்த்தைகள் இல்லாமலேயே ஒரு பாடலின் உணர்வை வெளிப்படுத்த முடியும்.

விசில் கலைக்கு மிகுந்த மூச்சுக் கட்டுப்பாடு அவசியம். எனவே நான் கடுமையான யோகா, சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்கிறேன். எழுபது வயதிலும் தினமும் ஐந்து மணி நேரம் பயிற்சி மேற்கொள்வதால், நீண்ட நேரம் சுருதி பிசகாமல் இசையை வழங்கமுடிகிறது. ஒரு பாடலின் உணர்ச்சியை வெளிப்படுத்தும்போது, குரல் அதிர்வை ஒத்த ஒலி அலைகளை உருவாக்கும் திறன் எனக்கு உண்டு. இது சாதாரண விசிலில் காணப்படாத தன்மையாகும்'' என்கிறார் கே. சிவ பிரசாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com