எனக்கான ஒரே மொழி சினிமாதான்!

பயணங்களே அற்புதம். தேங்கி நிற்கிற குளம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் அழுக்குதான் இருக்கும்.
எனக்கான ஒரே மொழி சினிமாதான்!
Updated on
2 min read

'பயணங்களே அற்புதம். தேங்கி நிற்கிற குளம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் அழுக்குதான் இருக்கும். ஓடுவது சின்ன ஓடையாக இருந்தாலும், அந்தத் தண்ணீர் கண்ணாடிபோல் பளிச்சென்று இருக்கும். வாழ்க்கையில் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்று விடக்கூடாது என்பது என் தீர்மானம்.

வெகு நேரம் பயணம் செய்யும் போது, சற்று அலுப்பு வரலாம். ஆனால், அப்போது எடுக்கிற ஓய்வுகூட, ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருப்பது போல்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், எந்த ஓய்வும் நம்முடைய அடுத்த பயணத்துக்கான ஆயத்தம்தான்.

பணம், புகழ், காதல், கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே இந்தப் பயணங்கள் மூலமாகத்தான் கிடைத்தது.' என்கிறார், ஒளிப்பதிவாளர் செல்லதுரை. ரசனையும், தீவிரமும் இவரது தனி பாணி. 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நகரம்', 'முதலிடம்', 'திருட்டுப் பயலே 2', 'ரௌடி பேபி' என ஒவ்வொரு படத்திலும் தேர்ந்த ஒளிப்பதிவைத் தந்தவர். கே. வி. ஆனந்த், ரவிவர்மன், நட்டி உள்ளிட்ட ஒளிப்பதிவாளர்களுடன் பயணித்து வந்தவர். அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

ஒளிப்பதிவுக்கான முதல் சுவாரஸ்யம் எதிலிருந்து தொடங்குகிறது?

திரைக்கதைதான் முதல் சுவாரஸ்யம். அதைக் காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான். பல வருடப் பயணம், இத்தனை படங்கள் எனப் பயணித்து வந்த போதிலும், ஒளியின் சூட்சுமமே புரியவில்லை. காற்று, ஒளி, தண்ணீர் எல்லாம் ஒரு சேரச் சேர்ந்தால் விதை துளிர்க்கும். அது போல்தான் அது.

'இருள் என்பது குறைந்த ஒளி' என்றார் பாரதி. ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும், காட்சியின் தன்மை மாறி விடுகிறது. ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், அது எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதைப் பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி.

ஒரு நல்ல திரைக்கதைதான் காமிராவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், காமிராமேனுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது.

பட எண்ணிக்கை ரொம்பவே குறைவாக இருக்கிறதே?

பல மொழிகள் இருந்தாலும், எனக்கான ஒரே மொழி சினிமாதான். என் உலகமே அதுதான். ஒரு இருக்கையில் கட்டிப் போட்டாலும், சினிமாதான் மன ஓட்டமாக இருக்கும். அது என் இயல்பு. ஏதோ ஒரு விபத்தில் சினிமா ஒளிப்பதிவு கலைக்கு வந்தவன் அல்ல நான். விரும்பி ஏற்றுக் கொண்டது. என் உயரமும் இதுதான்... என் தாழ்வும் இங்கேதான் என்று தீர்மானித்து வந்தவன்.

பணியாற்றுவது குறைந்து போனதுக்குக் காரணம், கதைகள்தான். ஒரு கதை என்னை ஈர்க்க வேண்டும். எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது. நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றி தரிசித்து அப்படி தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து, அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா. அப்படியான சினிமாக்கள்தான் என் தேர்வு. நான் பணியாற்றி வந்த படங்கள் அப்படி வந்ததுதான்.

என் பயணத்தில் நல்ல படங்களே இருப்பதால்தான், என் அனுபவங்கள் பெரிதாகிறது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் வருகிறது. சில நேரங்களில் இங்கே என்ன மாதிரியான படங்கள் செய்ய வேண்டும் என்ற குழப்பமும் வரும். அதனால்தான் தொடர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை.

ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஆவது சுலபம்... அந்தத் திட்டம் இருக்கிறதா?

அது பெரும் அனுபவம். சினிமாதான் இலக்கு என்று யோசித்த வயதில் எனக்கு ஒளிப்பதிவு மேல்தான் ஆர்வம். அதை விரும்பிக் கற்றேன். பின்னர் வெளியே வந்து, நான் போனது ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ள... எப்போதும் ஒளிப்பதிவு, காமிரா, வெளிச்சம் என்றுதான் மனசுக்குள் அலை அடிக்கும். இயக்குநர் என்பது பெரும் பொறுப்பு. அந்த அனுபவத்துக்கு வர கொஞ்சம் காலம் ஆகலாம்.

தோல்விதான் அனுபவங்களை அள்ளித் தந்திருக்கிறது. இன்னும் நல்ல படங்களாக எனக்கு வந்த சேர வேண்டும். இனி வருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். படத்தின் வெற்றியில் எனக்கு சரிபாதி இருப்பதாக உணர்கிறேன். காரணம், அதற்கு வரும் பாராட்டுகள்.

முந்தைய ஆண்டில் பல வியப்பூட்டும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன... யாரெல்லாம் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றனர்?

ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. ஒரு ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றிப் போய் கதை செய்வது மட்டும்தான். அதைப் புரிந்துகொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். எல்லாப் படங்களுமே எனக்கு ஒரு மைல்கல்தான். எல்லாவற்றையும் கவனிக்கிறேன். ஒவ்வொரு ஒளிப்பதிவாளரின் பொறுப்பும் பிடித்திருந்தது. கலைஞனுடைய கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகனின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவேறும்.

அனைவருக்கும் பாராட்டுகள். வியாபாரம் தாண்டி சினிமாவின் உன்னதத்தை புரிந்துகொள்வதும் இங்கே முக்கியம். ரசிகர்களைச் சொல்லி குற்றமில்லை. நாம்தான் தயாராக வேண்டும். ஏனென்றால், சுனாமி வந்து லட்சக்கணக்கான உயிர்களைக் குடித்த போதிலும், இங்கே அரங்கு நிறைந்த ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். அதுதான் தமிழ் சினிமாவின் பலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com