பெரிதினும் பெரிது செய்ய விழைவேன்!

'சினிமாவுக்குத்தான் போக வேண்டும்; பாட்டு எழுத வேண்டும்' எனப் பள்ளி நாள்களிலேயே முடிவு செய்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர்
பெரிதினும் பெரிது செய்ய விழைவேன்!
Updated on
2 min read

'சினிமாவுக்குத்தான் போக வேண்டும்; பாட்டு எழுத வேண்டும்' எனப் பள்ளி நாள்களிலேயே முடிவு செய்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர், விக்கிரவாண்டியில் இருந்து சென்னைக்கு வந்தவர், ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் சுமந்து, முதலில் சென்னைக்கு வந்தபோது, அவர் நினைத்தது நிறைவேறாமல் ஏமாற்றத்தில் சொந்த ஊருக்கே திரும்பும் நிலையில் இருந்தவர்...

ஆனால், இன்றோ தனது பாடல் வரிகள், எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களை, ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார் பாடலாசிரியர் ரமணிகாந்தன்.

2017 -ஆம் ஆண்டு 'லைசன்ஸ்' படத்தில் நான்கு பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார். 2025-ஆம் ஆண்டில் குறிப்பிடத்தகுந்த இவரது பாடல்கள் ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. இதுவரை 500-க்கும் அதிகமான பாடல்களின் மூலம் கவனிக்கத்தக்க முக்கியமான தமிழ்க் கவிஞர்கள், பாடலாசிரியர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார். தமிழ் மொழியில் இருக்கக்கூடிய குறிப்புப் பொருள், படிமம், குறியீடுகளையெல்லாம் சினிமா பாடல்களில் ரீங்காரமிடச் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இன்னும் பல ஆயிரம் மைல்கள் அனுபவம் சேகரித்துப் பயணிக்கக் காத்திருக்கிறார்.

அவரிடம் பேசியபோது:

' இந்தப் பயணத்தில் காலமும் வாழ்க்கையும் கற்றுத் தந்திருப்பவை ஏராளம். எனக்கு ஆதரவு தந்த மனிதர்களின் அன்புக்கும் வாழ்க்கையின் அருளுக்கும் என்றும் நன்றி. வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடிய பாடகர்கள், பத்திகள் பல எழுதிப் பரவலாகக் கொண்டு சேர்ந்த பத்திரிகையாளர்கள், பாடல்களில் கவிதை செய்ய விழையும் என் போன்றோருக்குப் பெரும் ஊக்கமளித்து வரவேற்கும் மக்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. பெரிதினும் பெரிது செய்ய விழைவேன். இந்த நேரத்தில் வாலியையும், அறிவுமதியையும், என் அன்பு நா. முத்துக்குமாரையும் தழுவிப் பணிகிறேன்.

என் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் நான் பலவற்றை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. பல்வேறு நூல்களை வாசித்தாலும், 'நான் யார்?', 'நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?' என்ற அகம் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் தரக்கூடிய நூல்கள்தான் எனக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன.

பொதுவாக, வாசிப்பைப் பற்றிச் சொல்லச் சொன்னால் இவ்வாறு சொல்லலாம். வாசிப்பு, அகந்தையைக் கொடுக்கும். பிறகு, அகந்தையைக் குறைக்கும்.

வாசிப்பு, குழப்பத்தின் தொடர்ச்சியாகத் தெளிவைக் கொடுக்கும். வாசிப்பு, குண இயல்புகளைக் கண்டடையும்; குணக்கோளாறுகளைச் சுட்டிக்காட்டும்; பாவனைகள், பகட்டுகள் எல்லாம் அலை ஓய்ந்த பிறகு, உணர்வுகளும் உணர்ச்சிகளுமே பிரதானம் என்பதை உணர்த்திவிடும்.

வாசிப்பின் வழியாக அறிவின் மமதை எழுந்தால் அது அகந்தையின் அனுபவமே தவிர, வாசிப்பின் அனுபவம் ஆகாது. வாசிப்பின் வழியாக உயிர்களின்பால் அன்பு சுரந்தால், நாம் தேர்ந்த வாசிப்பாளன். வாசிப்பு எனது எல்லா கோளாறுகளையும் சுட்டிக் காட்டியது. என் குண இயல்புகளை உற்று நோக்கப் பெரிதும் உதவிவருகிறது. வாசிப்பு என்பதே தியானத்தைப் பயிலுதல்தான். நான் உருவாக்கிய படைப்புகள் எல்லாம் நான் பயின்றதன் விளைச்சலாகத்தான் பார்க்கிறேன்.

தற்போதும் பாடல் எழுதிக்கொண்டிருப்பதற்கு இடையில் ஓய்வு நாளில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அண்மையில் அப்படி வாசித்ததில் சில புத்தகங்கள் என்னை மிகவும் பாதித்தன. அவற்றை வாசகர்களுக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன். கோபி கிருஷ்ணனின் கதைகள், திலீப்குமார் கதைகள் ஆகியவை அகம் சார்ந்த புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

ஆரம்பத்தில் நாம் வாசிக்கும்போது, நமக்கு நிறைய தெரிந்திருக்கிறது என்ற அகந்தை தோன்றும். அது அல்ல வாசிப்பதன் நோக்கம். தொடர்ச்சியாக நாம் வாசிக்கிறபோது, அந்த அகந்தை காணாமல்போய், நமக்கு ஓர் அமைதி கிடைக்கும். நாம் படித்துக் கண்டடைந்த விஷயங்களால் ஒரு ஞானம் கிடைக்கும். அது நமக்கு வாழ்வில் மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவேதான் வாசிப்பு அவசியம். 'துளிர்' மற்றும் 'உள்ளொளி' என்ற இரண்டு இசைக்கவிதை தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறேன்.

'வர்ணாஸ்ரமம்' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். பாடல்கள் எழுதும் வாய்ப்பை வழங்கி என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் கணபதி பாலமுருகனுக்கும், நடிக்க வாய்ப்பு தந்த இயக்குநர் சுகுமார் அழகர்சாமிக்கும் நன்றிகள் பல.

திருக்குறளைப் பொருள் அடிப்படையில் இசைப் பாடலாக மாற்றி எழுதி இருக்கிறேன். ஒரு அதிகாரத்துக்கு ஒரு பாடல் என்ற அடிப்படையில், 133 பாடல்களாக அவற்றை எழுதியுள்ளேன். ஒரு பாடகருக்கு ஒரு பாடல் என்ற முறையில் இவற்றை 133 பாடகர்கள் பாட இருக்கிறார்கள். 133 இசையமைப்பாளர்கள் இசையமைக்க இருக்கிறார்கள்.

'மாமன்னன் இராஜராஜ சோழன்', 'கீழடி அகழாய்வு' மற்றும் பல தமிழ்ப் பேராளுமைகள் குறித்த பாடல்களை தன்னிசைப் பாடல்களாக வெளியிட்டு இருக்கிறேன். இனி என் அடுத்தடுத்த முயற்சிகள் எல்லாம் தரமாக இருக்கும்' எனப் புன்னகைக்கிறார் ரமணிகாந்தன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com