

சென்னையின் பண்பாட்டு வரலாற்றில் காலத்தை வென்று நிற்கும் பெருமை கொண்ட ஒரு சில அமைப்புகளில், 'ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா' தனியிடத்தைப் பெற்றுள்ளது. 1896-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1900-இல் பதிவு செய்யப்பட்டது.
2026-இல் தனது 125-ஆவது ஆண்டை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தக் கலை, கலாசார அமைப்பு குறித்து, அதன் தலைவரான தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் கூறியது:
'இசை, நடனம், நாடகம், ஆன்மிகச் சொற்பொழிவு, செயல்முறை விளக்க உரைகள் உள்ளிட்ட பல்வேறு கலைவடிவங்களையும் பேணிப் பாதுகாத்து, வளர்த்தெடுத்த பெருமையுடைய இந்தச் சபா125 ஆண்டுகள் என்ற மாபெரும் மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்தியக் கலாசார மரபின் உயிர்ப்பான அடையாளமாகத் திகழும் சபாவின் விதை 1896-ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் விதைக்கப்பட்டது.
இந்திய பண்பாட்டின் அனைத்து அம்சங்களையும் வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் சமூகத் தொண்டரும் கலாசார ஆர்வலருமான மன்னி திருமலாசாரியார், 'சங்கீத வித்வத் சபா' என்ற பெயரில் ஓர் அமைப்பைத் துவக்கினார்.
பின்னர், 1900-ஆம் ஆண்டில் இதனை ஒரு பொதுச் சங்கமாகப் பதிவு செய்து, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலின் தெய்வ அனுகிரகத்தை வேண்டி , 'ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா' எனப் பெயரிட்டார். இதுவே தென் இந்தியாவின் மிகப் பழமையான இசைச் சபா என்பதோடு, இந்த வகை அமைப்புகளில் முதன்மையானது.
தொடக்கத்தில் சபா ஸ்தாபகரான திருமலாச்சாரியாரின் வீட்டிலேயே கச்சேரிகள் நடைபெற்றன. அதன்பின்னர், பள்ளிக்கூட கூட்ட அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
1959 முதல் 1993 வரை வெங்கடரங்கம் பிள்ளை தெருவில் ஓர் இடம் கிடைத்தது சபாவுக்கு உறுதியான ஓர் அடித்தளம் அமைய உதவி செய்தது. 1997-ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள வித்யா பாரதி கல்யாண மண்டபம் சபாவின் நிரந்தர முகவரியானது. அங்கு நடைபெறும் மார்கழி இசை விழா ஏராளமான ரசிகர்களை ஈர்க்கிறது.
சபாவின் 125 ஆண்டு கால கடந்து வந்த பாதை சவால்களால் நிரம்பியது. 1939-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் உலகையே அச்சுறுத்திய காலகட்டத்தில், சபா நிகழ்ச்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்தது. 1970-களில் தொலைக்காட்சி வளர்ச்சி காரணமாக கலை அரங்குகளில் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தது.
திருவல்லிக்கேணியிலிருந்து மயிலாப்பூருக்கு இடமாற்றம் செய்ததும் சபாவுக்கு ஒரு சோதனையாக இருந்தது. ஆனாலும் ஒவ்வொரு சவாலும் சபாவை மேலும் வலுப்படுத்தியது.
மகா வைத்தியநாத ஐயர், பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், டைகர் வரதாச்சாரியார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், மதுரை மணி ஐயர், ஜி. என். பாலசுப்ரமணியம், ஆலத்தூர் சகோதரர்கள் போன்ற கர்நாடக சங்கீத ஜாம்பவான்கள் இங்கு கச்சேரிகளை அளித்துள்ளனர்.
எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி ஆகிய மூன்று இசைச் சிகரங்கள் இந்த மேடையை ஒளிரச் செய்துள்ளனர். பாலமுரளிகிருஷ்ணா, கே.ஜே. யேசுதாஸ், டி.என். சேஷகோபாலன், டி.வி. சங்கரநாராயணன் போன்றோர் அந்த மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றனர். வாத்திய இசை, நாட்டியம், நாடகம், இந்துஸ்தானி இசை உள்ளிட்ட கலைவடிவங்களை இசை ரசிகர்கள் கண்டு, கேட்டு ரசித்துள்ளனர்.
ஹரிகதா, பகவத் கீதை உரைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஆகியன நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டவை. இசைக் கல்விக்கும் சபா அளிக்கும் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது.
திருவல்லிக்கேணியில் நடைபெறும் இசைப் பயிற்சிகளும், சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற டிப்ளமா படிப்புகளும் பல திறமையான கலைஞர்களை உருவாக்கியுள்ளன.
ஆண்டுதோறும் இசை விழா சீசனில் சங்கீத கலாசாரதி, நாட்டிய கலாசாரதி, நாடக கலாசாரதி, ஆசார்ய சாரதி போன்ற விருதுகளை வழங்கி கலைஞர்களையும், கலா ஆசிரியர்களின் திறமையையும், பங்களிப்பையும் சபா அங்கீகரித்து வருகிறது. மேலும், இளம் கலைஞர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
1960 செப்டம்பர் 11-இல் சபாவின் நிதி சேர்ப்புக்காக, சி.பி.ராமசாமி ஐயர் தலைமையில் எம்.எஸ். கச்சேரி நடைபெற்றது. அந்தக் கச்சேரியின் 60- ஆம் ஆண்டை நினைவு கூரும் வகையில் 2020-இல் எம்.எஸ். பிறந்த நாளான செப் 16-இல், காயத்ரி வேங்கடராகவன் கச்சேரியை நடத்தினோம்.
உலகமெங்கும் உள்ள கர்நாடக இசை ரசிகர்கள் இணையம் வழியே அதனைக் கண்டு ரசித்தார்கள். அன்று, 1960-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சி.பி. ராமசாமி ஐயரின் தலைமை உரையையின் பகுதிகளையும் ஒளிபரப்பினோம்.
சபாவின் 125 ஆண்டுகள் என்பது வெறும் கால அளவல்ல; அது அர்ப்பணிப்பு, பாரம்பரியம், கலாசார சேவை ஆகியவற்றின் நீண்ட நெடிய பயணத்தின் அடையாளம்'' என்கிறார் நல்லி குப்புசாமி செட்டியார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.