நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளிலும் பல வகையான கதாபாத்திரங்களிலும் துளசி நடித்து வந்தவர். ரஜினி, கமல், விஜய் என அத்தனை உச்ச நட்சத்திரங்களுடனும் துளசி இணைந்து நடித்திருக்கிறார்.
தற்போது சினிமாவிலிருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் போட்டிருக்கும் பதிவில், 'கடந்த டிசம்பர் 31-இல் எனது ஷீரடி தரிசனத்தைத் தொடர்ந்து, நான் மகிழ்ச்சியுடன் ரிடையர்மென்ட் பெற விரும்புகிறேன். இனி சாய்நாதருடன் அமைதியான பயணத்தைத் தொடர்வேன்' எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த 'சிறை' திரைப்படம் கடந்த டிசம்பர் 25 -ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் 'சிறை' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், 'சிறை' உண்மையிலேயே ஒரு சிறந்த படம். நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன். இயக்குநர் சுரேஷ் தனது முதல் படத்திலேயே நம் மனங்களை 'சிறை' பிடித்துவிட்டார். படக்குழுவுக்கு வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.
'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னைத் தாலாட்டும்' பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு, அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துத்தான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னைத் தாலாட்டும்' பாடலை எடுத்ததாக விடியோ வெளியிட்டிருக்கிறார்.
'அவரை வைத்துத்தான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தை சூட் செய்தேன். அதில் இரண்டு பாடல்களையும் எடுத்திருந்தேன். மூணாறில் 'என்னைத் தாலாட்டும்' பாடலை சூட் செய்திருந்தேன். அந்த நினைவுகள் தோன்ற, அந்தப் பாடல் சம்பந்தமான பழைய விடியோ ஒன்று கிடைத்தது. அந்த விடியோவை உங்கள் பார்வைக்குப் பதிவிடுகிறேன்' என்று விடியோவை வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் கிட்டு இயக்கத்தில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படம் கடந்த வருடத்தின் கடைசி ரிலீஸ்களில் ஒன்றாகத் திரைக்கு வரவிருந்தது. கருணாஸ் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், கடைசி நேரத்தில் படத்துக்கு வெறும் 27 திரைகளே ஒதுக்கப்பட்டதால் திரையரங்க வெளியீட்டை தவிர்த்துவிட்டு, நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டிருக்கிறார்கள்.
'ஏன், 'சல்லியர்கள்' படத்துக்கு குறைவான திரைகள்? இதற்குப் பின்னால் நோக்கங்கள் இருக்கிறதா?' எனக் கேட்டதற்கு பதில் தந்த சுரேஷ் காமாட்சி, 'அப்படி ஆதாரம் இல்லாமல் சொல்லிவிட முடியாது. ஆனால், 27 தியேட்டர்கள் மட்டுமே கொடுத்தது அராஜகம். தெலுங்குப் படங்களுக்கு இங்கே தரும் முக்கியத்துவம் தமிழ்ப் படங்களுக்கு இல்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.