"வெளி உலகத்தின் சாளரம்' வெ.சாமிநாத சர்மா!

காய்தல், உவத்தல் இன்றி எழுதுவதே ஒரு வரலாற்றாசிரியரின் எழுத்தறமாக அமைய வேண்டும்' என அறைகூவல் விடுத்தவர், ""நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை'' என அறிவித்து, தமது இறுதி மூச்சு உள்ளவரை
"வெளி உலகத்தின் சாளரம்' வெ.சாமிநாத சர்மா!

காய்தல், உவத்தல் இன்றி எழுதுவதே ஒரு வரலாற்றாசிரியரின் எழுத்தறமாக அமைய வேண்டும்' என அறைகூவல் விடுத்தவர், ""நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை'' என அறிவித்து, தமது இறுதி மூச்சு உள்ளவரை எழுதிக் குவித்தவர் வெ.சாமிநாத சர்மா!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வெங்களத்தூர் என்னும் சிற்றூரில், 1895-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17-ஆம் தேதி, முத்துசுவாமி ஐயர்-பார்வதி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்புவரை கல்வி பயின்றார். ""உண்மையில் பள்ளிக் கூடத்தை விட்ட பிறகுதான் என் படிப்பு ஆரம்பமாயிற்று'' என்று தமது கல்வி வளர்ச்சியைப் பற்றிச் சொல்லிக் கொண்டவர் சாமிநாத சர்மா!

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயின்ற சாமிநாத சர்மா, சுருக்கெழுத்துப் பள்ளியில் ஆசிரியராகவும், ஆயுள் காப்பீட்டுக் கழகம், கூட்டுறவுத் துறை முதலியவற்றில் எழுத்தராகவும் பல பணிகளைச் செய்துள்ளார்.

"இந்துநேசன்', "பிழைக்கும் வழி' முதலிய இதழ்களில் ஆரம்ப காலத்தில் கட்டுரைகள் எழுதினார். திரு.வி.க. ஆசிரியராக இருந்த "தேசபக்தன்', "ஸ்வராஜ்யா' நாளிதழ்களிலும் பின்னர் "நவசக்தி' வார இதழிலும் துணையாசிரியராக இருந்துள்ளார்.

1932-ஆம் ஆண்டு தமது மனைவியுடன், தற்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவுக்குச் சென்று பத்தாண்டு காலம் வாழ்ந்தார். அங்கு, சுதேசிய பொருள்கள், கதர்த் துணிகள், தரமான தமிழ் இலக்கிய நூல்கள் முதலியவற்றை "பாரத் பந்தர்' என்ற தமது கடையில் விற்பனை செய்தார். ரங்கூனில் "ஜோதி' என்னும் மாத இதழில் 14 ஆண்டுகள் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.

21.02.1942-இல் ரங்கூனில் இருந்து தமது மனைவியுடன் புறப்பட்டு, நடைப்பயணமாக 24.04.1942-இல் கொல்கத்தா வந்தடைந்தார். தமது அனுபவத்தை விளக்கும், "பர்மா வழி நடைப்பயணம்' என்னும் பயண இலக்கிய நூலையும் வெளியிட்டார்.

சென்னை வந்தடைந்ததும் சக்தி, குமரிமலர், பாரதி முதலிய இதழ்களில் பணிபுரிந்தார். சென்னை-தமிழ் எழுத்தாளர் சங்கம், சாமிநாத சர்மாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி 1954-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜி தலைமையில் கேடயம் அளித்துச் சிறப்பித்தது. சென்னை-தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக 1956-ஆம் ஆண்டு பொறுப்பேற்று, சிறப்புடன் செயல்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையையொட்டி, "ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை' என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.

சாமிநாத சர்மா எழுதிய, "முசோலினி', "அபிசீனிய சக்ரவர்த்தி' ஆகிய இரு நூல்களைப் படித்துவிட்டு, உ.வே.சா. கீழ்க்கண்டவாறு தமது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

""இவ்விரு நூல்களும் இக்காலத்தில் நமது நாட்டுக்கு நல்விருந்தாக இருக்கும் என்பது எனது கருத்து. தேசத்தின் அமைப்புகளும், இயல்புகளும் தெளிவாகவும், உண்மையாகவும் தெரிந்து கொள்ள, உள்ளதை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு இந்நூல்கள் தக்க கருவிகளாகும்''.

இவர் எழுதி, 1936-ஆம் ஆண்டு வெளிவந்த "ஹிட்லர்' என்ற நூல், ஹிட்லரைப் பற்றித் தமிழில் வெளிவந்த முதல் நூலாகும்.

உலக அரசியலில் தோன்றிய நாசிசம், பாசிஸம், சர்வாதிகாரம், மக்களாட்சி முதலான தத்துவங்களைத் தமிழர்கள் கண்டறிந்து புரிந்து கொள்ளும் வண்ணம் சாமிநாத சர்மாவால் எழுதப்பட்ட "ஸ்பெயின் குழப்பம்' என்ற நூல் குறிப்பிடத்தக்கதாகும்.

மாஜினியின் வாழ்க்கை வரலாறு, மாஜினியின் மனிதன் கடமை, கரிபால்டி, இமானுவேல், சுரேந்திரநாத் பானர்ஜி, ஸன்யாட்சென் வாழ்க்கை வரலாறு, புதிய சீனா, சீனாவின் வரலாறு, கிரீஸ் வாழ்ந்த வரலாறு, கார்ல்மார்க்ஸ், ருஷ்யாவின் வரலாறு முதலிய ஒப்பற்ற நூல்களைத் தமிழுக்கு உவந்து அளித்துள்ளார்.

சீனக் குடியரசின் தந்தை எனப் போற்றப்படுபவர் ஸன்யாட்சென். அவர் சீனாவின் கான்ட்டன் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய பதினெட்டுச் சொற்பொழிவுகளின் ஆங்கில மொழியாக்கத்தில் இருந்து தமிழாக்கம் செய்து, "சுதந்திரத்தின் தேவைகள் யாவை?' என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார்.

சாமிநாத சர்மா தமிழாக்கம் செய்து வெளியிட்ட "பிளேட்டோவின் அரசியல்' என்னும் நூல், தமிழ் மக்களுக்கு கிரேக்கத்தின் அரசியலையும் அறிவியலையும் புகட்டியதோடு, அவர்களைத் தங்கள் சுதந்திரத்துக்குத் தகுதிப்படுத்திக் கொள்ளவும் தூண்டியது எனலாம்.

அரசியல், பொருளாதாரம், அறிவியல் முதலிய முக்கிய துறைகளில் வழங்கப்படும் கலைச் சொற்கள், பிற மொழிகளிலிருந்து தமிழில் சரியாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை சாமிநாத சர்மா வலியுறுத்தினார்.

கெüரிமணி என்னும் குறுநாவல், தலை தீபாவளி என்னும் சிறுகதைத் தொகுப்பு, லட்சுமி காந்தம், லவகுசன், ஜீவபாலன், மனோதர்மம், பீஷ்மன், உத்யோகம், அபிமன்யு, பாணபுரத்துவீரன், பசிக்கொடுமை, வாடகைக்கு இடம் முதலான நாடகங்களையும் பதிமூன்று ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார்.

மகனே உனக்கு, அவள் பிரிவு, பிளேட்டோவின் கடிதங்கள், வரலாறு கண்ட கடிதங்கள், பாரதமாதாவின் கடிதங்கள் முதலிய கடித இலக்கியங்களையும் படைத்துள்ளார்.

முயற்சியும் பயிற்சியும் என்னும் கடிதத்தில், ""தாய் மொழியில் பயிற்சி இல்லாதவன், தாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது. மொழியின்றி நாடு இல்லை. மொழிப்பற்று இல்லாதவன், எந்த நாட்டிலும் இல்லை. நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்கள், முதலில் மொழி சுதந்திரத்திற்காகவே பாடுபட்டார்கள்'' என்று தாய்மொழிப் பற்று குறித்துப் பதிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மரபு உண்டு, அதைத் தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் மொழிபெயர்த்தல் என்பதை தமது மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாகக் கொண்டவர் சாமிநாத சர்மா!

ஐசக் நியூட்டன், பிரபுல்ல சந்திரரே, ஜகதீச சந்திரபோஸ், சார்லஸ் டார்வின், தாமஸ் ஆல்வா எடிசன் முதலிய அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர் என்னும் இரு ஆன்மிக ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியுள்ளார். இக்கரையும் அக்கரையும், எப்படி வாழ வேண்டும்? முதலிய வாழ்வியல் நூல்களையும் படைத்துள்ளார். நான் கண்ட நால்வர் என்னும் நூலில், திரு.வி.க., வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதியார் ஆகிய நான்கு அறிஞர்களின் வரலாறுகளையும் வடித்துத் தந்துள்ளார்.

""எளிய நடை என்ற பெயரால் கொச்சை நடையில் எழுதுவது தமிழ்மொழிக்குச் சிறப்பு சேர்க்காது, எந்த ஒரு நூலும் அமர வாழ்வு பெற வேண்டுமானால், இலக்கண வரம்புக்கு உள்பட்ட எளிய நடையில் அமைய வேண்டும் என்பதை எழுத்தாளர்கள் கவனத்தில் கொண்டு, தங்கள் நூல்களைப் படைக்க வேண்டும்'' என்பதை வலியுறுத்திச் சென்றுள்ளார் சாமிநாத சர்மா!

கடித இலக்கியம், குறுநாவல், சிறுகதைகள், வாழ்வியல், இதழியல், மொழிபெயர்ப்பு எனப் பல்துறை வழியே தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் சாமிநாத சர்மா, 1978-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

உலகத் தலைவர்கள், அறிஞர்களின் வரலாறு, உலக அரசியல் சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் வரலாறு, தேசியத் தலைவர்கள் வரலாறு, தமிழ் அறிஞர்கள் வரலாறு எனப் பலபட எழுதி, "வெளி உலகின்' சாளரமாக விளங்கியுள்ளார் சாமிநாத சர்மா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com