மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: "கல்லாடம்' இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு

"கல்லாடம்' என்ற நூலை இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்றும், 13-ஆம் நூற்றாண்டு என்றும், 16-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதி என்றும், கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்ற

"கல்லாடம்' என்ற நூலை இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்றும், 13-ஆம் நூற்றாண்டு என்றும், 16-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதி என்றும், கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்றும் தமிழறிஞர்களால் கூறப்படுகிறது. கல்லாடரின் காலம் எது? கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்தது உண்மையா?

கல்லாடம் கற்றவனுடன் சொல்லாடாதே' என்ற பழமொழியே இந்நூலின் சிறப்புக்குச் சான்றாக உள்ளது.  இத்தகைய சிறப்புமிக்க நூலை எழுதிய ஆசிரியர் கல்லாடர் ஆவார்.

கல்லாடம் என்பது ஊரின் பெயர். அவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பெயர் கல்லாடர். அப்பெயரை மக்களுக்கு இட்டு வழங்கினர். கல்லாடர் என்ற பெயரில் பண்டைய காலத்தில் வெவ்வேறு கல்லாடர்கள் இருந்துள்ளனர். கடைச்சங்கப் புலவருள் கல்லாடர் என்ற பெயரில் ஒருவர் இருந்துள்ளார். அவர், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பாடியவர். பொறையாற்றுக் கிழான், அம்பர் கிழான், அருவந்தை என்னும் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவர். இவர் பாடியனவாக சங்க நூல்களில் 14 பாடல்கள் உள்ளன. இவரது காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. மற்றொரு கல்லாடர், 11-ஆம் திருமுறையில் "திருக்கண்ணப்பதேவர் திருமறம்' என்னும் நூலை எழுதியவர். இவர் நக்கீரர் காலத்திலோ, அவருக்குப் பிற்பட்ட காலத்திலோ வாழ்ந்தவர் எனலாம். எனவே, இவர் காலத்தை கி.பி. 9-ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொல்காப்பியம் - சொல்லதிகாரத்துக்கு உரை எழுதியவர்களுள் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் சொல்லதிகாரத்துக்கு உரை இயற்றியவர் அனைவருக்கும் பிற்பட்டவர். இவர் வாழ்ந்த காலம் நச்சினார்க்கினியர்க்குப் பின்னும், பிரயோக விவேக நூலர்க்கு முன்னும் எனலாம். இவரது காலம் கி.பி. 15, 16 -ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

திருவள்ளுவ மாலையில், "ஒன்றே பொருளெனின் வேறென்ப' என்ற பாடலைப் பாடிய இன்னொரு கல்லாடரையும் காணமுடிகிறது. இவ்வாறு பல கல்லாடர்கள் இருந்துள்ளனர் என்பதை கிடைத்துள்ள சான்றுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

இவர்களுள் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாம் சிவபெருமானின் திருவருள் செயல்களைச் சிறப்பித்துக் கூறும் "கல்லாடம்' என்னும் நூலின் ஆசிரியர் கல்லாடர் இயற்றிய "கல்லாடம்' என்ற நூலை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, அவர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. ஏனென்றால், அவரது "கல்லாடம்' நூலில் மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையாரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். அதிலிருந்து நூறு துறைகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பாடல் வீதம் ஆசிரியப்பாவில் இயற்றியுள்ளார்.

மேலும், விநாயகர் வணக்கத்தில் சிவனிடமிருந்து மாங்கனி பெற்ற செய்தியையும், திருவிளையாடற் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலச் செய்தியையும் எடுத்தியம்புகிறார்.

இந்நூல் அளவில் சிறியதாக இருந்தாலும், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள், திருவிளையாடற் புராணம் முதலியவைகளிலிருந்து கதைகள், திருத்தொண்டர் வரலாறு, இசைக்கலை, நாட்டியக் கலை முதலிய நுண்கலைச் செய்திகளையும் கொண்டு பொருள், யாப்பு, அணி முதலியனவுடன் சிறப்பாக மிளிர்கிறது.

கல்லாடத்தில் வரும் பாடல்கள் யாப்பமைதியிலும் அணி அமைப்பிலும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குவதைப் பார்க்கும்போது, கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரத்துக்குப் பின் எழுதப்பட்ட நூலாக இருக்கும் என்று கருத முடிகிறது. ஏனென்றால், தண்டியலங்காரம் குறிப்பிடுகின்ற இலக்கணத்தைப் பின்பற்றி, சற்றும் பிறழாமல் கல்லாடம் நூல் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, கல்லாடர் வாழ்ந்த காலம் திருக்கோவையாரும், தண்டியலங்காரமும் எழுதப்பட்டதற்குப் பின்னர்தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியும். "திருக்கண்ணப்ப தேவர் திருமற'த்தை இயற்றிய கல்லாடரும், "கல்லாடம்' பாடிய கல்லாடரும் ஒருவரே என்று கருதுபவரும் உண்டு. இருவரும் ஒருவர் என்று சொன்னால், 11-ஆம் திருமுறையில் "கல்லாடம்' என்ற நூலும் தொகுக்கப்பட்டிருக்கும். ஆனால், கல்லாடம் இடம்பெறவில்லை. எனவே, "கல்லாடம்' என்ற நூலின் ஆசிரியர், கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர் என்று கூறலாம்.

மதுரை சுந்தரேசர் முன்னிலையில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் இந்நூல் அரங்கேற்றம் கண்டதையும், அப்போது அதை ரசித்துப் பாராட்டி, இறைவன் நூறுமுறை தலை அசைத்ததையும்,

""கல்லாடர் செய்பனுவல் கல்லாட நூறு நூல்

வல்லார் சங்கத்தில் வந்தருளிச் சொல்லாயும்

மாமதுரையீசர் மனமுவந்து கேட்டு முடி

தாம் அசைத்தார் நூறு தரம்''

என்ற வெண்பா பாடல் தெளிவாக்குகிறது.

"கல்லாடம்' இயற்றிய கல்லாடர், பிற்கால மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவராக இருந்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது, அவர் வாழ்ந்த காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு என்று முடிவுக்கு வருவது பொருத்தமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com