இராஜராஜ சோழன் புகழ் அரு.ராமநாதன்

வரலாற்றுப் புதினங்கள் எழுதி, வாசகர்களிடையே ஆவலைத் தூண்டியவர்கள் பெயரைப் பட்டியலிடுவதும் வரலாற்றுப் பதிவாகும். இலக்கிய உலகில் வரலாற்றுப் புதினப் படைப்பாளிகளுக்குரிய மதிப்பை இன்னும் அதிகம் தர வேண்டும்.
இராஜராஜ சோழன் புகழ் அரு.ராமநாதன்

வரலாற்றுப் புதினங்கள் எழுதி, வாசகர்களிடையே ஆவலைத் தூண்டியவர்கள் பெயரைப் பட்டியலிடுவதும் வரலாற்றுப் பதிவாகும். இலக்கிய உலகில் வரலாற்றுப் புதினப் படைப்பாளிகளுக்குரிய மதிப்பை இன்னும் அதிகம் தர வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மகாகவி பாரதியின் "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி' என்ற பாடலைப் படித்துணர வேண்டும். வரலாற்றுப் புதினம் எழுதி இன்றளவும் மறக்க முடியாதவராக விளங்குபவர் அரு.ராமநாதன்.

 அரு.ராமநாதன் என்று கூறியவுடன், ஒரு கணம் யோசித்து, ""ஓ! அரு.ராமநாதன் "காதல்' இதழ் நடத்தியவர்'' என்று சிலர் கூறுவார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று, நாடக ரசனை உள்ளவர்கள், ""டி.கே.சண்முகம் தயாரித்த "ராஜராஜசோழன்' நாடகம் எழுதிய ஆசிரியர்'' என்று தங்கள் நினைவாற்றலை வெளிப்படுத்துவார்கள்.

 சினிமா ரசிகர்கள், ""சிவாஜிகணேசன் நடித்த "உமா' ஆசிரியர் ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் அமரர் ஜி.உமாபதி தயாரித்த ராஜராஜசோழன் திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதியவர்'' என்பார்கள்.

 ஆக, முக்கோணங்களில் மறக்க முடியாதவராகிவிட்டவர் அரு.ராமநாதன். ஆனால், வரலாற்று ரசனையுடன் வரலாற்றுப் புதினங்களைப் படிக்கும் ஆர்வம் உடையவர்கள் ""வீரபாண்டியன் மனைவியை மறந்துவிட முடியுமா?'' என்று கேட்பார்கள். ஆம், அரு.ராமநாதன் எழுதிய "வீரபாண்டியன் மனைவி' வரலாற்றுப் புதினத்தை மறந்துவிட முடியாது.

 தேசப்பற்று மிக்க, படைப்பிலக்கியத்துக்குப் பெரும் புகழ் சேர்த்த இவர், செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த கண்டனூரில், வயி.ராம. அருணாசலம் செட்டியார்-வள்ளியம்மை ஆச்சி தம்பதிக்கு, 1924-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி பிறந்தார்.

 திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பதினாறு, பதினேழு வயதிலேயே கதைகள் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. பிறகு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் இன்டர் மீடியட் படித்தார். தேசிய இயக்கப் பற்றும், எழுத வேண்டும் என்ற ஆர்வமும் கல்லூரிப் படிப்பைத் தொடரச் செய்யவில்லை.

 1947-இல் திருச்சியிலிருந்து "காதல்' என்ற பெயரில் இதழைத் தொடங்கினார். அதற்கு வசதியாக அவர் பங்குதாரராயிருந்த ரெயின்போ அச்சகத்தில் "காதல்' இதழ் அச்சடிக்கப்பட்டது. காதல்-புதிய பெயரைப் பார்த்து முகம் சுளித்தவர்கள், வரவேற்றவர்கள் என்று "காதல்' இதழ் பிறக்கும்போதே பிரச்னையுடன் பிறந்தது. அரு.ராமநாதன் காதல் புனிதமானது என்ற கொள்கையை உடையவர். பெரியபுராணக் கதைகளைப் படித்தவர். அதிலுள்ள ஒவ்வொரு வரலாறும் நாடகமாக்கக் கூடியது என்பது அவருள்ளத்தில் எழுந்தது. குறிப்பாக சுந்தரர் வரலாறு அவரை மிகவும் கவர்ந்தது. சுந்தரர் நாடகத்தில் மட்டுமன்று, பிற்காலப் படைப்புகளிலும் "காதல்' பற்றிய தனது கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தினார்.

 ÷ரங்கநாயகி ஆச்சி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு 3 ஆண் மக்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர்.

 1945-ஆம் ஆண்டு டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகப்போட்டி ஒன்றை அறிவித்தார்கள். அதில் அரு.ராமநாதன் கலந்துகொண்டார். அதற்காக எழுதப்பட்ட நாடகம்தான் "ராஜராஜசோழன்'.

 1955-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலியில் ராஜராஜசோழன் அரங்கேறியது. அரங்கேற்ற விழாவில் டி.கே.சண்முகம், அரு.ராமநாதனைப் பாராட்டிப் பேசும்போது, ""பரிசு பெற்ற தம் நாடகம் பத்தாண்டுகளுக்குப் பிறகு நாங்களாகவே அரங்கேற்றும் வரை, எப்படி ஓர் எழுத்தாளர் பொறுமையோடு இருந்தார் என்பது எங்களுக்கே வியப்பாக இருக்கிறது. மேலும், அவர் ஓர் அகத்தியர். அது அவர் உருவத்தை மட்டும் குறிப்பிட அன்று. அறிவின் திறத்தையும் தமிழ்ப் புலமையையும் இணைத்துக் கூறியதாகும்'' என்றும் புகழாரம் சூட்டினார்.

 இவர் எழுதிய முதல் சிறுகதை "கோழிப் பந்தயம்' ஆகும். காதல் இதழ் தொடங்கிய இரண்டாவது மாதத்தில், "அசோகன் காதலி' என்ற நாவலைப் படைத்தார். சோழ வீரத்துக்குப் பாண்டிய வீரம் சளைக்கவில்லை என்பதை மெய்ப்பிக்க "வீரபாண்டியன் மனைவி' எனும் பெரும் நாவலை உருவாக்கினார். இது அவரது பத்திரிகையில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேல் தொடராக வெளிவந்தது.

 அடுத்து, "வெற்றி வேல் வீரத்தேவன்' என்னும் வரலாற்று நாவலை எழுதினார். சில ஆண்டுகள் வடமொழியைக் கற்றார். கோடம்பாக்கம் ஆர்க்காடு சாலையில் வாழ்ந்த இவர், தன் வீட்டிலேயே பத்திரிகை நிறுவனத்தையும் நடத்தினார். இவர் வசனம் எழுதிய திரைப்படமான "தங்கப்பதுமை' இந்திய அரசால் பாராட்டப்பட்டது. இதைத் தவிர பூலோகரம்பை, ஆரவல்லி ஆகிய திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

 1947-ஆம் ஆண்டு கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியிலும் கலந்து கொண்டார். அவர் எழுதிய "கோழிப் பந்தயம்' சிறுகதை பரிசு பெறவில்லை என்றாலும், பிரசுரிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட கதைகளுள் ஒன்றாக கல்கியில் பிரசுரமானது. அவருடைய இளம் வயதுக் கனவு நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் எழுத வேண்டும் என்பதே. அந்தக் கனவு முற்றிலும் நிறைவேறியது.

 திரைக்கலைக்காக "கலைமணி' என்ற இதழைத் தொடங்கினார். அதில் வரும் திரைப்பட விமர்சனத்துக்காக பலர் அதைப் பாராட்டினார்கள். புத்தகங்களை வெளியிட "பிரேமா பிரசுரம்' என்ற வெளியீட்டகம் தொடங்கினார். அதற்காகவே அச்சகம் தொடங்கினார். பிரேமா பிரசுரத்தின் மூலம் ஏறத்தாழ

 300-க்கும் மேற்பட்ட நல்ல பழந்தமிழ் நூல்களைக் குறைந்த விலையில் பதிப்பித்துள்ளார்.

 1963-இல் கல்கிக்காக "குண்டு மல்லிகை' என்ற சமூகத் தொடர் எழுதினார். குண்டு மல்லிகை 530 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். சரித்திர நாவல், சமூகப் புதினங்கள் தவிர தன் பத்திரிகையில் சிறுகதைகள் பல எழுதியுள்ளார்.

 சரித்திரக் கதைகளை இலக்கிய வகையில் சேர்க்க முடியாது என்று விமர்சகர்கள் சிலர் கூறி வந்தபோது, சரித்திரக் கதைகளைப் பற்றித் தன் கருத்தை அவர் தெரிவித்ததன் சாராம்சம்:

 ""சரித்திரக் கதைகள் நம் முன்னோர்களுடைய வரலாற்றை அறிய வாய்ப்பு ஏற்படுகிறது. இன்றைய மக்களின் இயல்பை அறிமுகப்படுத்த அவர்கள் எந்த இனத்தின் பரம்பரை என உணர முடிகிறது. சமூகப் புதினத்தைப் படிப்பதால் தனி மனிதன் உணர்ச்சி-அதாவது வாழ்க்கை உணர்ச்சியைப் பெறமுடிகிறது. ஆனால், சரித்திர நாவல்கள் நாட்டுணர்ச்சியை உண்டாக்குகிறது''.

 எழுத்துக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் சிலரே. அவர்களுள் அரு.ராமநாதன் மிக முக்கியமானவர். அதிகம் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தன் இலக்கியப்பணி ஒன்றை மட்டும் உயர் நோக்கமாக-உயிராகக் கொண்டிருந்த அவர், 1974-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி காலமானார்.

 அவர் மறைந்தாலும் அவரது நினைவாக, அவருடைய படைப்பிலக்கியங்களை அவரது புதல்வர்கள் மறுபதிப்பாக வெளியிட்டு வருகிறார்கள். அவர் வாழ்ந்த ஆர்க்காடு சாலையும், அங்கே அவர் வீட்டோடு கூடிய அலுவலகமும், நூல்களை இன்னும் சிறப்பாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் பிரேமா பிரசுரமும் தொடர்ந்து பல்துறை படைப்பிலக்கிய வித்தகர் அரு.ராமநாதனின் பெயரை அழியாது நினைவில் கொள்ளச் செய்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com