"சினிமா உலகம்' - பி.எஸ்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், பாவாடைசாமி செட்டியார்-கமலத்தம்மாள் இணையருக்கு 1905-ஆம் ஆண்டு பிறந்தவர் பி.எஸ். செட்டியார் என்று அழைக்கப்படும் பி.எஸ்.பக்கிரிசாமி செட்டியார். பலராலும், பரவலாக அறியப்பட
"சினிமா உலகம்' - பி.எஸ்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், பாவாடைசாமி செட்டியார்-கமலத்தம்மாள் இணையருக்கு 1905-ஆம் ஆண்டு பிறந்தவர் பி.எஸ். செட்டியார் என்று அழைக்கப்படும் பி.எஸ்.பக்கிரிசாமி செட்டியார்.

பலராலும், பரவலாக அறியப்படாத பத்திரிகை-திரைத்துறையினருள் இவரும் ஒருவர். குறிப்பாக, இன்றைய திரையுலகினருக்கே கூட இவரைத் தெரிந்திருக்க நியாயமில்லை. தற்போது புதிது புதிதாகப் புற்றீசல்போல திரை இதழ்கள் பல வெளிவரத் தொடங்கிவிட்டதால், முதன் முதலில் இவரால் வெளியிட்ட "சினிமா

உலகம்' என்ற திரை இதழை நினைவு வைத்துக்கொண்டிருப்பவரை இன்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.

நன்னிலம் பள்ளியில் பயிலும்போதே தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். "பண்டிட்' (வித்துவான்) தேர்வில் தேர்ச்சிபெற்று தமிழாசிரியரானார்.

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே சிறுவர் விருந்து, செந்தமிழ்ச் செல்வி ஆகிய இரு நூல்களையும் எழுதினார். பின்னர், "பெஞ்சமின் பிராங்க்ளின் வாழ்க்கை வரலாறு, இந்தியப் பெரியார், அறிவுலக வீரர், அறிஞர் ஆர்.கே.எஸ்., தியாக உள்ளம் திருவருள், அயலவர் கண்ட இந்தியா, காப்பியக் காட்சிகள் முதலிய நூல்களையும் எழுதினார். இவர் எழுதிய "அன்னை வாசகம்' பள்ளிகளில் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாளிதழ்களான தமிழரசு, தொழிலாளன், அமிர்த குணபோதினி ஆகியவற்றின் ஆசிரியராகவும் இருந்தார். "ஆந்திர கேசரி' பிரகாசம் நடத்திய தமிழ் நாளிதழான "ஸ்வராஜ்யா'வில் இந்திய விடுதலைப் போரில் எல்லாரும் ஈடுபட எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்.

1930-இல் கோயம்புத்தூரிலிருந்து "சினிமா உலகம்' என்ற வார இதழை "அரையணா' விலையில் வெளியிட்டார். இவரின் சினிமா உலகம் பத்திரிகையே திரைத்துறை பத்திரிகைகளின் முன்னோடி. இப் பத்திரிகையில் சினிமா, நாடகம், இசை பற்றிய செய்திகளும், விமர்சனங்களும் பிரசுரமாயின. எந்த நடிக-நடிகையர், கலைஞர் பற்றிய தனிநபர் துதி பாடாத பத்திரிகையாக "சினிமா உலகம்' திகழ்ந்தது. இவருடைய "சினிமா உலகில்' பொது விமர்சனங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. 1943 பிப்ரவரியில் இப் பத்திரிகையில் சேர்ந்த வல்லிக்கண்ணன், தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கும் மேல் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

 1936-இல் வெளியான "ராஜா தேசிங்கு' என்ற திரைப்படம்தான் பக்கிரிசாமி செட்டியார் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம். சி.கண்ணன் பிள்ளை தயாரிப்பில் வெளியான "திருமழிசை ஆழ்வார்' (1948) திரைப்படத்துக்குக் கதை-வசனம் எழுதியவர் பி.எஸ்.செட்டியார். அப்படத்துக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றினார். ஆனால், அப்படத்தை டி.எஸ்.கோட்னீயும், பி.எஸ்.பக்கிரிசாமி செட்டியாரும் இணைந்துதான் இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில்தான் தண்டபாணி தேசிகர் அறிமுகமானார்.

தமிழறியாதோர் தமிழ்த் திரைப்படங்களை இயக்குவதை சினிமா உலகில் கடுமையாகச் சாடினார் பக்கிரிசாமி செட்டியார்.

இவருடைய "சினிமா உலகம்' இதழில் விபுலானந்த அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதலியோர் எழுதினர். "சினிமா உலகில்'தான் கவிக்குயில் கண்ணதாசனின் கவிதை முதலில் பிரசுரமானது. முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் "சினிமா உலகில்' சில சிறுகதைகளை எழுதியுள்ளார். தீரர் சத்திய மூர்த்தி, சினிமா பல்கலைக்கழகங்களில் இவ்விதழைப் பாடமாக வைக்கவேண்டும் என்று "சினிமா உலகில்' எழுதினார். 1935-இல் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட இப்பத்திரிகை 1947 வரை வெளிவந்தது.

இந்திய விடுதலைக்குப்பின் பக்கிரிசாமி செட்டியார் அரசியலில் ஈடுபட்டார். இருமுறை சென்னை மாநகராட்சி உறுப்பினரானார். மயிலாப்பூர் வீரப்பெருமாள் தெருவிலிருந்த தனியார் பள்ளியை, மாநகராட்சி பள்ளியாக மாற்றினார். இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கச் செய்தார். அண்ணா சாலையில் மாநகராட்சி பொது நூலகம் ஒன்றை ஏற்படுத்தினார்.

இலக்கியம், இசை, நாடகம், திரைப்படம், பத்திரிகை மற்றும் அரசியல் ஆகிய பல்துறைகளிலும் சாதனைகள் படைத்த பக்கிரிசாமி செட்டியார், 1967-ஆம் ஆண்டு காலமானார்.

தமிழகத்தில் இன்று, பல திரையிதழ்கள் வெளிவர முன்னோடியாக இருந்தது பி.எஸ்.பக்கிரிசாமி செட்டியாரின் "சினிமா உலகம்' என்பதும், திரையிதழ் வெளிவர வழி திறந்தவர் என்ற அடிப்படையிலும் பக்கிரிசாமி செட்டியாரை எத்தனை பேர் இன்று நினைவுகூர்கின்றனர் என்பது கேள்விக்குறியாகவே

உள்ளது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com