"கிழார்' போற்றுதும்...

"கிழார்' போற்றுதும்...

சங்க காலத்தில் "கிழார்' எனும் சிறப்புப் பெயர் உழுவித்து உண்ணும் வேளாண் மக்களைக் குறிக்கும் பட்டம் என்பது அறிஞர்கள் கருத்து. இதை, உ.வே.சாமிநாதையரின் சங்கப்பாடல் பதிப்பிலும், ஆ.சிங்காரவேலு முதலியாரின் அ

சங்க காலத்தில் "கிழார்' எனும் சிறப்புப் பெயர் உழுவித்து உண்ணும் வேளாண் மக்களைக் குறிக்கும் பட்டம் என்பது அறிஞர்கள் கருத்து. இதை, உ.வே.சாமிநாதையரின் சங்கப்பாடல் பதிப்பிலும், ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி நூலிலும் காணலாம். பிற்காலத்தில் கல்வெட்டுகள் முதலியவை பல சமூகத்தினரைக் குறித்தது என்று கூறுகிறது. ஆனால், சங்க காலத்தில் வேளாண் மக்களையே குறிப்பதாகக் கூறுவர்.

பாண்டிய மன்னன் வேளாண்குடி மக்களுக்கு வழங்கிய பட்டத்தின் பெயர் "காவிதி' என்பது அறிஞர்கள் கூற்று. அத்தகைய "கிழார்'கள் பலர் அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்துள்ளனர். அவர்களுள் சிலரைக் காண்போம்.

அரிசில் கிழார் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடி எண்பத்து நூறாயிரம் பொற்காசுகளைப் பெற்றவர் இவர். வையாவி கோப்பெரும் பேகனையும், அவனுடைய இல்லத்தரசியான கண்ணகியையும் இணைத்து வைத்தவர். குறுந்தொகையில் 193, புறம்-146, 230, 281, 285, 300, 304, 342 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆலந்தூர் கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், நலங்கிள்ளியையும் பாடியுள்ளார். குறு.112, 350, புறம்.34, 36, 69, 225, 324 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆவூர்க்கிழார் : உறையூர் அருகிலுள்ள ஆவூரைச் சேர்ந்தவர். புறம்-322வது பாடலைப் பாடியவர்.

கண்ணனார் கிழார் : இவர் ஆவூர்க்கிழாரின் மகனார். அகம்-202-ஆம் பாடலைப் பாடியவர்.

ஆவூர் மூலங்கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். அகநானூற்றில் 24, 156, 341, புறநானூற்றில் 38, 166, 177, 196, 261, 301 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

பெருந்தலைச் சாத்தனார் கிழார் : இவர் ஆவூர் மூலங்கிழாருடைய மகன். நற்றிணையில் 262, அகம்.13, 224, புறம் 151, 164, 165, 205, 208, 294 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

இடைக்குன்றூர் கிழார் : இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியவர். புறம்.76-79 (4 பாடல்கள்) வரை உள்ள பாடல்களைப் பாடியவர்.

உகாய்க்குடி கிழார் : குறுந்தொகையில் 63-ஆம் பாடலைப் பாடியவர்.

பரங்கொற்றனார் கிழார்: இவர் உமட்டூர் கிழாரின் மகனார். அகநானூற்றில் 69-ஆம் பாடலை இயற்றியுள்ளார்.

ஐயூர் மூலங்கிழார் : இவர், பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் பாடியவர். புறம் 21-ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

கயத்தூர் கிழார் : இவர் குறுந்தொகையில் 354-வது பாடலைப் பாடியுள்ளார்.

கருவூர்க்கிழார் : இவர் குறுந்தொகை 170வது பாடலைப் பாடியவர்.

காரிக்கிழார் : இவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். புறம் 6-வது பாடலைப் பாடியவர்.

கிள்ளி மங்கலங்கிழார் : குறுந்தொகையில் 76, 110, 152, 181 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

குறுங்கோழியூர் கிழார் : சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாராட்டிப் பாடியுள்ளார். புறம் 17, 20, 22-வது பாடலைப் பாடியவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com