புதுமைச் சித்தர் - சுஜாதா!

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர் சுஜாதா. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் எழுத்து நடையால் வாசகர்களைக் கவர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள்
புதுமைச் சித்தர் - சுஜாதா!

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர் சுஜாதா. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் எழுத்து நடையால் வாசகர்களைக் கவர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படக் கதை-வசனங்கள், தொலைக்காட்சித் தொடர் எனப் பல துறைகளில் தன் முத்திரையைப் பதித்தவர்.

சுஜாதா என்கிற ரங்கராஜன் 1935-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்தவர். படித்து, வளர்ந்தது ஸ்ரீரங்கத்தில்.

1987-ஆம் ஆண்டு, அறிவியல் கலைச் சொல்லாக்கம் பற்றியும் பாமரர்க்கு அறிவியல் பற்றியும் "இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹுசேன்' கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டைத் தொடங்கிவைக்க சுஜாதாவை அழைத்தோம்.

பெங்களூருவிலிருந்து இளையான்குடிக்குக் காரில் பயணம். வழிநெடுக வானொலியில் அறிவியல் பற்றி வளமான ஆலோசனைகள் தந்தார் சுஜாதா. இளையான்குடி மாநாட்டில்தான் தமிழில் கணினிக் கலைச் சொற்கள் ஆயிரம் ஆக்கித் தருவதாக அறிவித்தார். மாலை 4 மணிக்கு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் மாணவரிடையே பேசினார். அப்போது கவிஞர் மீரா, அக்கல்லூரியின் முதல்வர்.

சுஜாதாவிடம் மாணவர் ஒருவர் கேட்டார், ""சிறுகதை எழுத என்ன செய்ய வேண்டும்?''

""இதோ, இந்த ஹாலிலேயே சிறுகதை இருக்கிறது. மாணவர்களே! எல்லோரும் "பெஞ்ச்'களில் அமர்ந்திருக்கிறீர்கள். மாணவிகளில் சிலர் தரையில். அதைப்போலவே இதோ, இந்தச் சுவர்களில் நேரு, இராஜேந்திர பிரசாத், உள்ளூர் பிரமுகர்கள் என்று ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாத புகைப்படங்கள். இதில் கதை இருக்கிறது. ஆக, உங்களைச் சுற்றிப் பாருங்கள், உற்றுப் பாருங்கள்'' என்றார்.

1991-ஆம் ஆண்டு தேசிய அளவிலான அறிவியல் நெடுந்தொடர் திட்டமிடல் கூட்டத்தில் பங்கேற்று நிகழ்ச்சித் தொடரின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.

1993-ஆம் ஆண்டு ஓர் அறிவியல் நாடகம் எழுதித் தருமாறு சுஜாதாவைக் கேட்டோம். நாடகத்தை எழுதித் தந்ததோடு அதன் தயாரிப்புத் தரத்திலும் தனிக்கவனம் செலுத்தினார். நாடகத்துக்குத் தேவையான சிறப்பான ஒலிக்குறிகளும், "டிஜிட்டல்' ஒலிப்பதிவு வசதியும் அப்போது சென்னை வானொலியில் கிடையாது. சுஜாதாவின் பரிந்துரையில் அருண் வீரப்பனின் "மீடியா ஆர்ட்டிஸ்ட்' பதிவகத்தில் நாடகத்தைப் பதிவு செய்தோம். இதற்காக வானொலி நிலையத்தின் விதிகளைத் தளர்த்த வேண்டியிருந்தது. வானொலிக்காகச் சிந்தித்த அந்த புதுமைச் சித்தருக்காக இதைச் செய்ததில் எங்களுக்குப் பெருமை.

இதே காலகட்டத்தில் பண்பலைப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. 1993-ஆம் ஆண்டு பொங்கல் புது நாளில், சென்னை பண்பலை ஒலிபரப்பை ஐந்து மணி நேர மாலை ஒலிபரப்பிலிருந்து காலை, பகல் என்று நேரத்தை மிகுதிப்படுத்தினோம். பின்னர், ஆகஸ்ட் இறுதிக்குள் 24 மணி நேர ஒலிபரப்பாக விரிவாக்கிச் சரித்திரம் படைத்த சமயம். இத்தகைய வளர்நிலையில் அறிவிப்புகளில் பல புதுமைகளைப் புகுத்தினோம். அதைக் குறிப்பாகப் பாராட்டி, சுஜாதா தமது "கற்றதும் பெற்றதும்' தொடரில் எழுதியிருந்தார்.

"பெல்' நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னையில் குடியேறி, "குமுதம்' ஆசிரியப்பணி, திரைப்படம் முதலிய பன்முகப் பணியின் ஓர் அங்கமாகப் புத்தாயிரம் ஆண்டின் உதயத்தில் "பெண்டா மீடியா' இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது, அதே நிறுவனத்தின் "நம் டி.வி' (இணைய டி.வி, வானொலி) ஆலோசகராக நான் பொறுப்பேற்றேன். அந்த வானொலியின் வளர்ச்சியில் சுஜாதா பெரும் பங்காற்றினார். அவரது ஆலோசனைகளுள் ஒன்று: தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் "வேங்கடம் முதல் குமரிவரை' தொடரை வாசிப்பது. அந்தத் தொடருக்குத்தான் "ஹிட்ஸ்' அதிகம்.

குமுதத்தில் எழுதிய "நைலான் கயிறு' என்ற முதல் நாவலின் மூலமாகவே வாசகரின் மனதில் இடம்பிடித்து விட்டவர் சுஜாதா. "கணேஷ்-வசந்த்' துப்பறியும் தொடர், நாற்காலி நுனிக்கு அழைத்துச் செல்லும் சுவாரஸ்யமான கதைகள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றன.

"நித்யா-ஆத்மா' இடம்பெறும் விஞ்ஞானக் கதைகள் தமிழில் இப்போதும் அதி நவீன இடம்பிடித்து முன்னணியில் இருக்கின்றன. ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில் கதைகள் போன்ற அவருடைய சிறுகதைகள் தமிழில் பலரை எழுத்தாளராக்கிய திறம்படைத்தவை. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற விஞ்ஞானக் கதைகளும், மூளையைப் பற்றி எழுதிய "தலைமைச் செயலகம்' என்ற விஞ்ஞானத் தொடரும் ஒரு தலைமுறை தமிழர்களுக்கு விஞ்ஞான அறிமுகத்தை

அளித்தது என்று பெருமையாகக் கொள்ளலாம்.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கொண்டுவந்ததில் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம். திரைப்பட வசன கர்த்தாவாகவும் (விக்ரம், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன்), கடைசி மூச்சு வரை இளமையான தமிழுக்குச் சொந்தக்காரராகவும் இருந்தார்.

2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி தம் 73-ஆம் வயதில் காலமானார்.

ஒவ்வொரு வார்த்தையிலும் இலக்கியம் படைத்த ஒரு மாபெரும் படைப்பாளியான சுஜாதாவை நாம் முறையாக கெüரவிக்கத் தவறிவிட்டோம் என்பது தேர்ந்த இலக்கிய ரசிகர்களின் ஆறாத ஆதங்கம்தான்.

இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என்று அனைத்து ஊடகங்களிலும் புதுமைகள் பல செய்த சுஜாதாவை "ஆனந்த விகடன்' இவ்வாறு வர்ணித்தது: "20-ஆம் நூற்றாண்டின் தமிழ்மொழி, தமிழிலக்கிய ஃபாஷன் டிசைனர் சுஜாதா'!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com