கல்லானாலும் கணவன்

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்று ஒரு பழமொழி உண்டு. கல்லையோ, புல்லையோ, ஒரு துரும்பையோ காட்டி, "இதுதான் உன் கணவர்' என்று பெற்றோர்கள் விளையாட்டாகக் கூறினால்கூட அதை அப்படியே நம்பி வாழ்ந்தது

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்று ஒரு பழமொழி உண்டு. கல்லையோ, புல்லையோ, ஒரு துரும்பையோ காட்டி, "இதுதான் உன் கணவர்' என்று பெற்றோர்கள் விளையாட்டாகக் கூறினால்கூட அதை அப்படியே நம்பி வாழ்ந்தது தொடர்பாகப் புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் நிறைய சான்றுகள் உள்ளன.

 ÷"கணவன்' என்பவன், மணந்தவளுக்குக் கண்ணைப் போன்றவன் என்ற பொருளில் "கணவன்' என்ற சொல் வழங்கிவருகிறது. "கொழுனன்' என்பார் வள்ளுவர். மனைவிக்குப் பற்றுக்கோடானவன் என்பது இதன் பொருள். உடம்பில் உள்ள உறுப்புகளுள் கண்ணே முதன்மையானது. அதுபோலத்தான் பெண்ணாய்ப் பிறந்தவளுக்குக் கணவனே கண் போன்றவன் - முதன்மையானவன் என்பதால் "கணவன்' என்று வழங்கினர்.

 ÷நீரில்லா நதி, மழையில்லா வயல்வெளி, சிறகில்லாப் பறவை, தந்தியில்லா வீணை, பூத்துக் காய்க்காத மரம், மணம் வீசா மலர், தந்தமில்லா யானை - என இவையெல்லாம் எப்படி இருந்தும் பயனற்றதோ, அதைப் போல கணவன் இல்லா பெண்ணும் வாழ்ந்தாலும் பயனற்றவளே! கணவனோடு சேர்ந்து நடத்தும் இல்லற தர்மமே பெண்டிர்க்குத் தவமாகும். அதனால்தான் ஒüவையார், "இல்லறமல்லது நல்லறம் அன்று' என்றார்.

 ÷இல்லறத்தில் நல்லறம் போற்றி வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் "கணவனே கண்கண்ட தெய்வமாக' அக்காலத்தில் இருந்துள்ளனர். சிலப்பதிகாரக் காப்பியத்தினுள் இதுபோல் வாழ்ந்த பெண் ஒருத்தி அழகாகச் சித்திரிக்கப்படுகிறாள்.

 ÷பொன்னி ஆற்றங்கரையில் கூடிய பெண்கள் பல

 வகையான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுள் சிலர், தங்கள் மனதில் தோன்றிய உருவத்தை மணலில் பாவை செய்து விளையாடுகின்றனர். அப்போது ஒருத்தி, ஓர் ஆண் மகனின் உருவத்தை "மணல் பாவை'யில் செய்திருந்ததைக் கண்ட தோழியர், அவளருகில் சென்று, ""அடியே! நீ செய்த இந்தப் பாவையே நின் கணவராம்'' என்று விளையாட்டாகக் கூறிச் சிரித்தனர்.

 ÷அவர்கள் அவ்வாறு கூறியவுடன், நாணம் மிகக்கொண்ட அந்தப் பெண்ணின் எண்ணமெல்லாம் தான் செய்து வைத்திருந்த மணற் பாவையின் மீது படிந்தது. படிந்த மாத்திரத்தில், அவளுடைய எண்ண அலைகள் வாழ்க்கைக் கப்பலை அலைக்கழிக்கத் தொடங்கின. விளையாடி முடித்துத் தன் தோழியர் வீடு திரும்பியபோது, அவர்களுடன் அவள் செல்ல மறுத்துவிட்டாள். காரணம், தான் செய்து வைத்த மணற் பாவைக் கணவனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவளுக்குள் வந்துவிடுகிறது.

 ÷பொன்னியாற்றின் அலைகள் தன் மணற் பாவைக் கணவனை அழித்துவிடுமோ என்ற ஐயத்தில் - பயத்தில் அந்தப் பாவையைச் சுற்றிலும் மணலைக் குவித்து பாதுகாப்பு அரண் அமைக்கிறாள். "கணவன்' என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, ஆற்று நீரால் பாவை அழிந்துவிடாமல் அவள் அங்கேயே இருந்து பாதுகாத்து, பெண்மைக்குப் பெருமை சேர்த்த திறத்தை,

 ""பொன்னிக் கரையில் "மணற்பாவை நின் கணவன் ஆம்'

 என்று உரை செய்த மாதரொடும் போகாள், திரைவந்து

 அழியாது சூழ்போக அங்கு உந்தி நின்ற வரியார் அகலல்குல் மாதர்''

 என்று சிலப்பதிகார வஞ்சினமாலை கூறுகிறது. மணற் பாவையைக் காட்டி, "இதுதான் உன் கணவர்' என்று விளையாட்டாகக் கூறியதற்கே அக்காலப் பெண்கள், அதைத் தன் கணவனாகவே நினைத்து வாழ்ந்த வாழ்க்கைக்கும்; இன்றைக்குள்ள பெண்கள், நீதிமன்றம் சென்று போராடிப் பெற்று வாழும் வாழ்க்கைக்கும்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்! சங்ககாலம் உண்மையிலேயே ஒரு பொற்காலம்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com