காலத்தால் அழியாத "கல்வியொழுக்கம்'!

கல்வியொழுக்கம் தமிழில்  முதன்முறையாக யாழ்ப்பாணம் கரவெட்டி

பதிப்புகள்
கல்வியொழுக்கம் தமிழில்  முதன்முறையாக யாழ்ப்பாணம் கரவெட்டி கிழக்சைச் சேர்ந்த க.பொன்னம்பலம் என்பவரால் 1926}ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. சுவடி கிடைத்த விபரம் எதுவும் கூறப்படவில்லை. மீண்டும் முதல் பதிப்பை வெளியிட்ட க.பொன்னம்பலத்தின் தம்பி மருத்துவர் க.குழந்தைவேலு யாழ்ப்பாணம் சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் 1968-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

÷பெரும் புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் 1953-ஆம் ஆண்டு ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி ஆண்டு மலரில் கல்வியொழுக்கத்தை வெளியிட்டு, பின் அதைத் தனி நூலாகவும் வெளியிட்டார்.

÷1966-ஆம் ஆண்டு தாம் எழுதிய "அவ்வையார்' என்னும் நூலில் கல்வியொழுக்கம் பற்றிக் குறிப்பிட்ட "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி., பின் கல்வி ஒழுக்கத்தைத் தனி நூலாகவும் வெளியிட்டார்.

÷1995-ஆம் ஆண்டு "அருட்செல்வர்' டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் நாண்மங்கல நாளில் திருவிடை

மருதூரில் கல்வியொழுக்கம் நூல் என்னால் வெளியிடப்பட்டது.

÷தாயம்மாள் அறவாணன் எழுதிய "அவ்வையார்' நூலில் கல்வியொழுக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்பறிந்த மேனாட்டவர்கள் ஆங்கிலத்திலும், ஜெர்மானிய மொழியிலும் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். ஜெர்மானிய மொழியில் வெளியிட்டவர் வான் ரூதீன் என்பவர்.

÷"உரைவேந்தர்' அவ்வை துரைசாமிப்பிள்ளை, "அவ்வையார் கல்வியொழுக்கம்' என்றொரு நூல் செய்திருப்பதாகக் கேள்வி;   அன்றி அதனைக் கண்டதில்லை. அதனை மேல் நாட்டறிஞர்கள் மொழி பெயர்த்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

ஓலைச் சுவடிகள்
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில்  எட்டு கல்வியொழுக்கம் ஓலைச்சுவடிகள் உள்ளன. ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் இரண்டு கல்வியொழுக்கம் ஓலைச்சுவடிகள் உள்ளன.  ஈரோடு அரசு அருங்காட்சியகத்திலும், பேரூர் சாந்தலிங்கர் திருமடத்திலும் பல கல்வியொழுக்கம் ஓலைச் சுவடிகள் உள்ளன. சில ஏடுகள் தனியார் வசமும் உள்ளன.

கொடுமணலில் படிப்பு
மேற்கண்ட சுவடிகள் அனைத்தும் தொல்பொருள் சிறப்புமிக்க கொடுமணலில் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணலில் கல்வி கற்ற மாணவர்கள் கல்வியொழுக்கம் நூலை ஓலைச் சுவடியில் எழுதிவைத்து ஆசிரியர் மூலமாகப் படித்திருக்கின்றனர்.

÷பல ஓலைச்சுவடிகளில் "யிது கனகசபாபதி ஏடு, "யிது பொன்னையன் ஏடு' என்று அறியவும் "யிது சுப்பிரமணியன் ஏடு', "எடுத்தவன் குடுக்கவும், குடாதொழியில் நரகத்துக்கு ஏது',  "யிது றாமசாமி ஏடு எடுத்த இடத்தில் வைக்கவும்' என்று பலவாறு எழுதப்பட்டுள்ளன. எனவே, கொடுமணலில் கல்வியொழுக்கம் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது.

சில புலவர்கள் மாணவர்கட்கு கல்வியொழுக்க ஏட்டுச் சுவடியை எழுதித் தந்துள்ளனர். "யிது குப்புசாமி குமாரன் தம்பணன் ஏடு எழுதியது வெள்ளோடு ரத்தினாசலப் புலவன்' என்று ஒரு சுவடியில் காணப்படுகிறது.

பாடபேதம்
பல காலங்களில் பயிலப்பட்ட கல்வியொழுக்கம் பலரால் எழுதப்பட்டதால் பல பாடபேதங்கள் ஏற்பட்டுள்ளன.

""நூறாண் டாயினும் கல்வியை நோக்கு'' என்ற தொடர், ""நூற்றுண் டாயினும் நூல்பல கல்'' என்றும், ""கைப்பொருள் என்பது கசடறு கல்வி'' என்ற தொடர், ""கைப்பொருள் தன்னிலும் மெய்ப்பொருள் கல்வி'' என்றும், ""தெளிய ஓதத் திறமுண்டாமே'' என்ற தொடர் ""தெளிய ஓதத் திருவுண் டாமே'' என்றும் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன. வேறு சில பாடபேதங்களும் உள்ளன.

சில மாற்றங்கள்
சில தொடர்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.  ""பூமியில் செல்வம் புகழ்பெருங் கல்வி'' என்ற தொடருக்குப் பதிலாக ""பூலோ கத்தின் பொருளே கல்வி'' என்ற தொடர் எழுதப்பட்டுள்ளது. கொடுமணலில் கிடைத்த இரண்டு ஓலைச் சுவடிகளில்,

""அஞ்சு வயதில் ஆதியை ஓது''

""ஆதியை ஓத அறிவுண் டாமே''

என்பதற்குப் பதிலாக

""அஞ்சு வயதில் ஆரியம் ஓது''

""ஆரியம் ஓத அறிவுண் டாமே''

என்று எழுதப்பட்டுள்ளது. ஐந்து வயதில் கல்வி தொடங்குவதுதான் அக்கால வழக்கம். இராசிபுரம் முத்துக்காளிப்பட்டியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் நா.குமாரசாமி தமிழ்மணி (21.10.12-இல் வெளியான) கட்டுரை பார்த்து தன்னிடம் உள்ள கல்வியொழுக்கம் ஓலைச் சுவடியில் ""ஆதி'' என்பதற்குப் பதிலாக ""ஆரியம்'' என்று இருப்பதாகத் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கம்
பல ஏடுகளிலும், ""அரகரா அவ்வையார் அருளிச் செச கல்வியொழுக்கம்'' என்று ஏட்டின் மையத்தில் எழுதப்பட்டுள்ளது. நூல் தொடக்கத்தில் ""கல்வி யொழுக்கம் கருத்துடன் கற்கச்; செல்வம் மிகுத்துச் சிறப்புண் டாமே'' என்றும் எழுதப்பட்டுள்ளது. இத்தகு பல சிறப்புகள் பெற்ற கல்வியொழுக்கம் என்ன காரணத்தாலோ நாட்டில் பயிலப்படாமல் குடத்தினுள் இட்ட விளக்காக அதன் சிறப்பு வெளிப்படாமல் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com