உடையும் குடையும்!

தலை குளித்துவிட்டு சாம்பிராணிப் புகையில் உலர்த்துவதற்காக தாழிருங் கூந்தலை விரித்துப் போடுவதுபோல் தரை எங்கும் இருள்பரந்து கவியும் இரவு நேரம்.
உடையும் குடையும்!

தலை குளித்துவிட்டு சாம்பிராணிப் புகையில் உலர்த்துவதற்காக தாழிருங் கூந்தலை விரித்துப் போடுவதுபோல் தரை எங்கும் இருள்பரந்து கவியும் இரவு நேரம். வீழும் அருவியில் விளையாடி, ஒழுகும் நிலவொளியில் உடல் துடைத்து, பூவின் மணத்தைப் பூசிக்கொண்டு தென்றல் உலா வரும் சில்லென்ற நேரம்.

""வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு'' (குறள்-1108)

என்ற திருக்குறள் அரங்கேறும் சிந்தைக்கினிய நேரம். அவ்வேளை ஒருத்தி, ஆளன் முயக்கத்தில், ஆனந்த மயக்கத்தில், நிலவின் ஒளியைத் துகிலென நினைத்து கை நீட்டுகிறாள் எடுக்க - உடுக்க.

÷திங்கள் ஒளியைச் சேலையென எண்ணும் மங்கையின் மயக்கக் குழப்பத்தைக் கூறுகிறது கலிங்கத்துப்பரணி "கடைத்திறப்புக் காதை'.

"" ...... கலை மதியின்

நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்

நீள்பொற் கபாடம் திறமினோ''

மங்கைக்கு மட்டுமா இப்படியோர் மயக்கம், மதகரிக்கும் இதேபோல் மயக்கம் உண்டு. எதிரிகளை அதம் செய்யும் போர் மதங்கொண்ட யானை ஒன்று. அடிக்கடி போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சேரனின் அச் சினக்களிறு, படைகளின் தடைகளைக் கடந்துபோய் பகை மன்னனின் முத்துச்சரங்கள் முறுவலிக்கும் வெண்கொற்றக் குடையைப் பிடுங்கி நொறுங்கிப் போகும்படி தரையில் அடித்துப் பழக்கப்பட்ட அக்களிறு, விண்ணில் மிதக்கும் வெண்ணிலவைப் பார்க்கிறது. முழு நிலவு, வேழத்தின் பார்வைக்குப் பகை மன்னனின் வெண்கொற்றக் குடைபோல் தெரிகிறது. கோட்டானைத் தன் துதிக்கையை நீட்டுகிறது நிலவைப் பறிக்க - நொறுக்க.

""வீறுசால் மன்னர்

விரிதாம வெண் குடையைப்

பாற எரிந்த

பரிச்சயத்தால் - தேறாது

செங்கண்மாக் கோதை

சினவெங் களியானை

திங்கள்மேல் நீட்டும்தன் கை''

(முத்தொள்ளாயிரம்)

கலிங்கத்துப்பரணியில் நிலவை உடையென எண்ணி மயங்கினாள் பாவை ஒருத்தி; முத்தொள்ளாயிரத்தில் நிலவைக் குடையென எண்ணி மயங்கியது ஒரு யானை. இவை இலக்கியத்துக்கு சுவை சேர்க்கும் கவிஞர்களின் கற்பனைத் திறம். இந்தக் கற்பனையைத்தான் ஒரு திரைப்படத்தில், "இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை' என்ற பாடலில் ""ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்'' என்று கவிஞர் கண்ணதாசன் பாடினார்போலும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com