கலைமகளும் கனித்தமிழும்!

இலக்கியங்களில் மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய முப்பெருந்தேவியர் குறித்த செய்திகள் காணப்படுகின்றன.
கலைமகளும் கனித்தமிழும்!

இலக்கியங்களில் மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய முப்பெருந்தேவியர் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. மூவர் அருள்பெற்ற அருளாளர்களும் இந்நிலவுலகில் வாழ்ந்து வீடுபேறு எய்தியுள்ளனர். அந்த வகையில் கலைமகள் அருள் பெற்ற தமிழ்ப் புலவர்கள் குறித்தும் கலைமகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை குறித்தும் ஆராய்வோம்.

மணிமேகலைக் காப்பியத்தில், ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை அளித்தது சிந்தா தேவியாவாள். இச் சிந்தாதேவி கலைமகள் என்று கருதப்படுகிறாள்.

இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படும் இளஞ்சூரியன், முதுசூரியன் ஆகிய இருவரும் பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாமாத்தூர் எனும் சிவத்தலத்தின் மீது ஒரு கலம்பகம் பாடினர். அதிலுள்ள ஒரு பாடலில் ஆற்றின் மேற்கரையில் கோயில் அமைந்திருப்பதாகத் தவறாகப் பாடிவிட்டனர். இப்பிழையை இந்நூல் அரங்கேற்றத்தின்போது பிறர் சுட்டிக் காட்டினர். எங்கள் நாவில் உள்ள கலைமகள் பொய் சொல்லாள் என்று புலவர்கள் கூறினர். அன்றிரவில் பெய்த கடும் மழையில் ஆறு திசைமாறி ஓடத் தொடங்கியது. புலவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஆற்றோட்டத்தின் திசையையே மாற்றிய கலைமகளின் கருணையை என்னென்பது!

திருமலைராயன் என்ற மன்னன் தமிழ்ப் புலவர்களைப் போற்றி வந்தவன். இவனது அரசவைப் புலவர் கவி அதிமதுரம் என்பவர். இவர், ஆசுகவி பாடுவதில் வல்லவரான கவி காளமேகத்திற்குச் சரியான இருக்கை கொடுக்கவில்லை. இதைக் கண்ட கவி காளமேகம் கலைமகளை நினைத்து வழிபட்டார். அரசனின் இருக்கைக்கு இணையாக அவளருளால் ஓர் உயரிய இருக்கை வந்தது. அப்போது காளமேகம்,

""வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு

வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை

அரியா சனத்தில் அரசரோடு என்னைச்

சரியா சனம்வைத்த தாய்''

என்று போற்றிப் பாடினார். அரசனும் மக்களும் புலவரைப் போற்றி மகிழ்ந்தனர்.

கம்பர் இயற்றிய "சரசுவதி அந்தாதி' என்ற நூல், அந்தாதித் தொடையில் அமைந்ததொரு சிற்றிலக்கிய நூல். கல்விக்கும் கலைகளுக்கும் உரிய கடவுளாகப் போற்றப்பெறும் தெய்வம் கலைமகள், கலைமடந்தை, நாமடந்தை, நாவின்கிழத்தி, சொல்லின் கிழத்தி, வெண்டாமரைச் செல்வி போன்ற பெயர்களால் இலக்கியங்களில் புகழப் பெறுகின்றாள். இவளைக் குறிக்கும் "சரசுவதி' என்னும் வடமொழிப் பெயர் பிற்கால நூலாகிய சூடாமணி நிகண்டில்தான் இடம்பெறுகிறது.

இந்த அந்தாதியைப் பற்றிய ஒரு செவிவழிச் செய்தியை வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் தாம் பதிப்பித்த நூலில் சுட்டியுள்ளார். அச்செய்தி வருமாறு: "சோழ மன்னன் அவையை அலங்கரித்த கம்பர் அம்மன்னனுடன் மாறுபட்டு அந்நாட்டை விட்டு மாறுவேடம் பூண்டு சேர மன்னனை அடுத்து அவனுக்கு வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரனாய் (அடைப்பைக்காரன்) இருந்தார். சேர மன்னனின் அவைப் புலவர் பொறாமையால் கம்பரை இழிவுபடுத்தச் செய்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டி, கம்பர் சரசுவதி தேவியை இந்த அந்தாதியால் போற்றி அவளுடைய இடக்காற் சிலம்பைப் பெற்றார் என்றும், பின்னர் மன்னன் வேண்டுகோளுக்கிசைந்து தேவியைத் துதிக்க, கலைமகள் தன் வலக்கால் ஒன்றைச் சிலம்புடன் தோன்றி நடனமிட்டுக் கம்பருக்கு அளித்த இடக்காற் சிலம்பை மீண்டும் பெற்று அணிந்துகொண்டு காட்சி தந்தாள்' என்றும் கூறப்படுகிறது.

சரசுவதி அந்தாதி முப்பது கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் அமைந்ததோர் துதி மாலை.

இதன் காப்பாக ""ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்'' என்றும், ""படிக நிறமும் பவளச் செவ்வாயும்'' என்றும் தொடங்கும் இரு வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காப்புப் பாடல்களைப் பின்னாளில் பல்வேறு நூல்களைப் படி எடுத்தவர்களும் தம் நூல்களின் தொடக்கத்தில் சேர்த்துள்ளனர்.

கம்பரின் மகன் அம்பிகாபதி, சோழ மன்னனின் மகளாகிய அமராவதியின் மேல் ஆசை கொண்டு அவளைப் பார்த்ததும், ""இட்ட அடி நோவ'' என்றும், ""பூவரசடியிலே புது நிலாவிலே'' என்றும் காம வயப்பட்டுப் பாடலைப் பாடியதும் மன்னர் மிகுந்த சினம் கொண்டார். தன் மகனுக்குத் தீங்குவரும் என்று அஞ்சி, கலைமகளை நினைத்துக் கம்பர் அதனை மாற்றி, தெருவில் கொட்டிக் கிழங்கு விற்கும் பெண்ணைப் பற்றிய பாடல் இது என்றார். அப்பாடல் வருமாறு:

""இட்டடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க,

வட்டில் சுமந்து மருங்கு அசையக் - கொட்டிக்

கிழங்கோ கிழங்கு என்று கூறுவாள் நாவில்

வழங்குஓசை வையம் பெறும்''

ஆனால் மன்னன் இதை நம்ப மறுத்தான். கம்பரின் நிலையை உணர்ந்து கலைமகள் வெள்ளை ஆடை உடுத்தி வயோதிகத் தோற்றத்துடன் கொட்டிக் கிழங்கு (நீரில் படரும் ஒருவகைக் கொடியின் கிழங்கு) விற்பவளாக வந்து நின்றாள். கம்பர் தாம் வழிபட்ட தேவியே இவள் என்பதை உணர்ந்தார். மன்னனின் சினம் தணிந்தது.

இப்புலவர்களைத் தவிர ஒட்டக்கூத்தர், காளமேகப் புலவர், தெனாலிராமன், காளிதாசர் போன்றோருக்குக் காளி தேவியின் அருள் கிட்டவே நாவரசர்களாய்த் திகழ்ந்த செய்திகள் இலக்கிய உலகில் பரவலாகக் கூறப்பட்டு வருகிறது. கலைக்கு இணை கலைமகளே என்பதும்; அவள் என்றென்றைக்கும் எப்பொழுதும் க(ன்)னித் தமிழாள் என்பதையும் அறிந்து போற்ற முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com