ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் - சு.சமுத்திரம்!

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் ஏழை எளியவர்களைப் பற்றி, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி, அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி சிறுகதைகளில் எழுதியவர்களை முன்னோடியாகக்கொண்டு எழுதி வெற்றி பெற்றவர் சு.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் - சு.சமுத்திரம்!

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் ஏழை எளியவர்களைப் பற்றி, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி, அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி சிறுகதைகளில் எழுதியவர்களை முன்னோடியாகக்கொண்டு எழுதி வெற்றி பெற்றவர் சு.சமுத்திரம்.

நெல்லை மாவட்டம், திப்பணம்பட்டியில் 1941-ஆம் ஆண்டு பிறந்த சமுத்திரம், குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.

"கடையம்' கிராமத்தில் ஆரம்பக்கல்வி பயின்று, பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பின்னர், அகில இந்திய வானொலி நிலையத்தில் தமிழ்ச் சேவை பிரிவில் பணிபுரிந்தார்.

தன் நண்பர்களுடன் இணைந்து "தேசிய முழக்கம்' என்கிற நாளிதழை வெளியிட்டார். 1973-இல் தில்லியில் மத்திய அரசு ஊழியராக இருந்த சமுத்திரம், தன் முதல் கதையை "ஆனந்த விகடனு'க்கு அனுப்பினார். "அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா' - இதுதான் கதையின் தலைப்பு. சமுத்திரத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு வானொலிக்கு மதிப்புரைக்காக அனுப்பப்பட்டது. அப்போது வானொலியில் இருந்த பிரபல எழுத்தாளர், ஒரு மார்க்சிய எழுத்தாளரிடம் மதிப்புரைக்குக் கொடுத்து, ""பார்த்து எழுதுங்கள்; இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்'' என்று சொல்ல,

சமுத்திரத்தின் சிறுகதைகளைப் படித்த மார்க்சிய எழுத்தாளர், ""பரிந்துரை வேண்டாம்; கதைகள் அற்புதமாக இருக்கின்றன'' என்றாராம்.

மத்திய அரசின் செய்தி - விளம்பரத் துறையில் பணிபுரிந்தவர் சமுத்திரம். அத்துறையின் மூலம் அரசியல் தலைவர்களின் நட்பைப் பெற்றவர். எனினும், அடிப்படையில் அவர் ஒரு காங்கிரஸ்காரர்; இடதுசாரிக் கொள்கையில் நாட்டம் உடையவர்; முற்போக்குச் சிந்தனையாளர்.

15 நாவல்கள், 8 குறுநாவல்கள், 500 சிறுகதைகள் எழுதியுள்ளார். ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி ஆகிய புதினங்கள் அவருடைய படைப்பாற்றலுக்குக் கட்டியம் கூறுபவை.

சமுத்திரத்தின் இலக்கியப் பணிகளை ஆதரித்து அங்கீகரிக்கும் வகையில் அவர் எழுதிய "பாலைப் புறா' நாவலை அரசின் சுகாதாரத்துறை 5 ஆயிரம் பிரதிகள் விலைகொடுத்து வாங்கியதோடு, அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிமாற்றமும் செய்தது.

ஆனந்த விகடன், கல்கி, குமுதம் ஆகிய பத்திரிகைகளில் சமுத்திரம் எழுதிய கதைகளில் யதார்த்தவாதமும், மனித நேயமும், எள்ளல் ஆகியவையும் எடுப்பாகத் தென்பட்டதால், சமுத்திரம் இடதுசாரி வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளில் சமுத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அவற்றில் தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்பு கொண்டிருந்தவர். அதனால் அவர் பெற்ற நன்மைகள் ஏராளம். இந்த இலக்கியச் சங்கத்தில் ஆண்டுதோறும் கருத்தரங்குகள் நடைபெறும். அதில் "ஊருக்குள் புரட்சி', "சோத்துப் பட்டாளம்' ஆகிய நாவல்களை வெளியிட்டது சமுத்திரத்தின் படைப்பாற்றலுக்கு மேலும் மெருகூட்டியது.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் பற்றி சமுத்திரம், தாமரை, செம்மலர் ஆகிய இதழ்களில் எழுதியதையும், இடதுசாரி இலக்கிய அமைப்புகளில் பேசியதையும் வைத்து சமுத்திரம் ஓர் இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர் என்று முத்திரை குத்தப்பட்டது. எனினும், அவர் பணியாற்றிய துறையில் அரசியல் பிரமுகர்கள் அறிமுகமானவர்கள் என்பதால் அவர் ஒரு நடுநிலைவாதி என்று நம்பினர்.

சமுத்திரம் ஓர் அரசு ஊழியர் என்பதற்காக எங்கும் வளைந்து, நெளிந்து போகாமல் அவரின் சுய மரியாதைக்குப் பங்கம் விளைவித்த திசையை நோக்கிப் பொங்கியெழுந்து போராடினார். பொதுவாகவே சமுத்திரம் ஒரு சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டு இலக்கிய உலகில் வலம் வந்தவர்.

 சமுத்திரத்துக்கு "சாகித்ய அகாதெமி' விருது வழங்கி கெüரவித்தபோது, ஒருசில பத்திரிகைகள் "இட ஒதுக்கீடு' என்று ஏளனமாக எழுதின. ஆனால், "இட ஒதுக்கீடு' எதன் பொருட்டு வந்தது என்பதை நன்கு புரிந்துகொண்டு சமுத்திரம் தன்னைப் பழித்தவர்களைப் பத்திரிகை மூலமும் மேடைகளிலும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தப் போராட்டத்துக்கு இடதுசாரி இலக்கிய அமைப்புகள் தோழமையுடன் தோள் கொடுத்து உதவின.

வெகுஜனப் பத்திரிகைகளில் சமுத்திரம் எழுதினாலும் அந்த எழுத்துகள் அனைத்தும் ஒரு நோக்கத்தோடு எழுதப்பட்டவை. உயர்ந்த சிந்தனைகளை உள்ளடக்கிய நாவல்களைப் படைத்த சமுத்திரம், உலகப் புகழ்பெற்ற ரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி மேடை ஏற்றினார்.

தம் படைப்புகளை வெளியிடுவதற்கு "ஏகலைவன்' பதிப்பகத்தைத் தொடங்கி, நூல்களை வெளியிட்டார். வள்ளலாரின் மனிதநேயக் கொள்கைகளை தம் வாழ்நாள் வரை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்.

வழக்கம் போல் மனைவியிடம் "போய் வருகிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்ற சமுத்திரம், ஒரு கார் விபத்தில் சிக்கி, 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி காலமானார்.

சமூகச் சீரழிவுகளை, சுரண்டல் தன்மைகளை, அதிகாரவர்க்கப் போக்கைக் கடுமையாக விமர்சிப்பது, காயங்களுக்கு மருந்திடுவது, பாவப்பட்ட ஆத்மாக்களுக்கு ஆறுதல் கூறுவது போன்றவற்றை தம்முடைய படைப்புகளின் மூலம் வாசகர்களுக்கு அடையாளம் காட்டி, இலக்கியத் துறையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர் சமுத்திரம். அவர்தம் படைப்புகள் அனைத்தும் என்றென்றும் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com