கண்ணதாசனின் "இயேசு காவியம்'!

தம் வாழ்நாளில் பல காவியங்கள் எழுத எண்ணியிருந்த கவிஞர் கண்ணதாசன் அவற்றுள் முழுமையாக இந்தக் காவியத்தை எழுதி முடித்தது அவருக்குக் கிட்டிய இறையருள் என்பதில் ஐயமே இல்லை.

தம் வாழ்நாளில் பல காவியங்கள் எழுத எண்ணியிருந்த கவிஞர் கண்ணதாசன் அவற்றுள் முழுமையாக இந்தக் காவியத்தை எழுதி முடித்தது அவருக்குக் கிட்டிய இறையருள் என்பதில் ஐயமே இல்லை.

நூலின் முன்னுரையில், ""பல சமயங்களில் பலர் என்னை இறவாக் காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறவாக் காவியம் "இயேசு காவியம்தான்' என்று நான் உறுதியாகக் கூற முடியும்'' என்று கண்ணதாசன் கூறியிருப்பது மகிழ்சிக்குரிய செய்தி.

"வாருங்கள் என்பின்னே' என்ற பகுதியில்

(பக்.59-62),

""பாரத்தால் அமிழ்ந்து நின்ற

படகினைப் பார்த்த இயேசு

ஓரத்தில் இறங்கி வந்து

உள்ளன்பால் அழைத்து, "இந்த

நீருக்குள் வலையை வீசும்

நீங்களே மனிதர் வாழும்

ஊருக்குள் வலையை வீசி

உள்ளத்தைப் பிடிப்பீர்' என்றார்''

என்ற பாடல் நெஞ்சைத் தொட்டது. இப்பகுதியின் இறுதிப் பாடல் இன்னும் அதிகமாக இனிக்கிறது.

""தந்தையை, வலையை விட்டுத்

தலைவனைப் பின் தொடர்ந்து

சிந்தையை அவர்பால் வைத்துச்

செயல்பட ஒருங்கே வந்தார்

மந்தையின் மேய்ப்பன் செல்ல

மற்றவை பின்னே செல்லும்

விந்தையைப் போல ஆங்கே

வியத்தகும் செய்தி யானார்!''

இயேசுவை சீடர்கள் பின் தொடர்ந்து செல்கின்ற காட்சி, மேய்ப்பனை ஆடுகள் பின் தொடர்ந்து செல்லும் காட்சியாக இருப்பதோடு சீடர்களே "வியத்தகும் செய்தி'யாகி விடுகிறார்கள்!

""எளிய மனத்தோர் பேறுபெற் றோரென

எடுத்ததும் அவர் சொன்னார் - இதில்

எளிமை என்பது பற்றில் லாமை

இறைவனை நம்புவதே..!''

எளிமை என்றால் என்ன என்பது "இறைவனை நம்புவதே' என்று கூறிச்செல்கிறார். அதேபோன்று ஒவ்வொரு பாக்கிய வசனத்திலும் கூறப்பெறும் பேறு பெற்றோர் எக்காரணத்தால் அப்பேறு பெற்றோர் ஆகிறார்கள் என்பதை அவர் விளக்கிச் செல்கின்ற முறை அவருக்கே உரித்தான ஒன்றாக இருக்கிறது.

உறவினர் யார்? என்ற தலைப்பில் உருக்கமான சொற்களால் தொடுக்கப்பட்ட ஓர் அழகிய பாடல்:

""என் தாயார் என் தம்பி யாரெனநீர் அறியீரோ?

என்னுடனே இங்கேயே இருக்கின்றார்

அவர்களெல்லாம்!

மேலுலகத் திருக்கின்ற மேலாம்என் தந்தைபணி

நாள்தோறும் செய்பவரே நம்தம்பி

அன்னை என்றார்!''

என்று ஆண்டவனின் உரையோடு அழகாக முடிகின்றது. இந்நூலில் கண்ணதாசன் பல்வகைப்பட்ட ஆசிரிய விருத்தங்களிலும், ஆசிரியப்பாக்களிலும் மட்டும் அல்லாமல், இசை நயம் ததும்பும் சந்தங்களிலும், பல பகுதிகளை எழுதியிருக்கிறார். காவியங்களுக்குரிய இலக்கணங்கள், சிறப்புகள் என்று சில இருக்கலாம்; இயேசு காவியத்தைப் பொருத்தவரையில் அந்த வரையறைகள், முத்திரைகள் அனைத்தையும் தாண்டி, தனிச்சுடர் மேம்பாட்டுத் தன்மை, பல்வகைப்பட்ட பாடல் வகைகளில்தான் வெளிப்படுகிறது.

("டாக்டர் தயாவின் இலக்கியப் பார்வைகள்' நூலிலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com