வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 23: தமிழின் மறுமலர்ச்சி!

ஓவ்வொருவனும் தன் தாய் மொழியின் மீது பேரன்பு கொண்டிருத்தல் முற்றும் இயற்கையே. பேரன்பு கொள்ளுதல் என்பது மொழியின் பெருமையை மட்டும் கூறி அதனோடு அமைந்துவிடுவதல்ல. உலகத்தில் வழங்கும் மொழிகளெல்லாம் இடைவிடாது
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 23: தமிழின் மறுமலர்ச்சி!

ஓவ்வொருவனும் தன் தாய் மொழியின் மீது பேரன்பு கொண்டிருத்தல் முற்றும் இயற்கையே. பேரன்பு கொள்ளுதல் என்பது மொழியின் பெருமையை மட்டும் கூறி அதனோடு அமைந்துவிடுவதல்ல. உலகத்தில் வழங்கும் மொழிகளெல்லாம் இடைவிடாது மாறிக்கொண்டும் வளர்ந்து கொண்டும் வரும் இயல்புடையன. இவ்வளர்ச்சிக்குத் தடையாக மேற்குறித்த அன்பு இருக்குமானால், அவ்வகை அன்பு நெறிதவறிய அன்பு என்றுதான் நாம் சொல்ல வேண்டும். குழந்தையை அதன் தாய் மிகவும் அன்போடுதான் போற்றி வருவாள். அதனோடு அவளுக்குத் தன் குழந்தை மேன்மேலும் விருத்தியாக வேண்டும் என்ற ஆசையும் இருத்தல் இயல்பல்லவா?

""ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்''

என்ற திருக்குறள் இத் தாயன்பை உட்கொண்டதாகும். தனது குழந்தையைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கமுள்ள தாய், அதன் முன்னிலையிலேயே அதற்கு மிஞ்சிய அழகும் அறிவுமுள்ள குழந்தை கிடையாது என்று புகழ்ந்து பாராட்டினால் போதும்; வேறு வினை வேண்டாம். இதுபோன்றதுதான், தாய்மொழி மீதுள்ள அன்பு காரணமாக, தமிழுக்கு முழுமுதல் - தன்மை கற்பித்து அதைப்போன்ற சிறந்த மொழி உலகத்திலேயே இல்லையென்று சொல்வதும். எல்லா வகையான அம்சங்களிலும் அது பரிபூரண நிலையை அடைந்துவிட்டது என்று சொல்வது நமது அருமைத் தாய்மொழிக்குக் கேடு விளைவிப்பதாகும்.

குழந்தைக்கு உணவு கொடுக்காமல் அதன் அழகைப் புகழ்ந்து கொண்டு மட்டும் இருந்தால், அதன் உடலும் அறிவும் வலிவுற்று வளர்ந்துவிடமாட்டா. இங்ஙனமே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவனவற்றைச் செய்யாது, அதன் தொன்மையையும் பெருமையையும் பற்றியே நம்மவர்கள் பேசிக் கொண்டிருந்தால், அது முன்னேற்றம் அடைந்துவிட மாட்டாது. அதன் வளர்ச்சியைப் பேணுவதே நமது முதற் கடமையாகும்.

""எல்லா பொரும் இதன்பாலுள, இதன்பால்

இல்லாத எப்பொருளும் இல்லையால்''

என்று வள்ளுவர் நூலுக்கு ஒரு புலவர் சிறப்புப் பாயிரம் கொடுத்துள்ளார். அதுபோன்ற சிறப்புப் பாயிரம் இக்காலத்து நகையினையே விளைக்க வல்லது; வள்ளுவனுடைய நூலின் பெருமையை எடுத்துக் காட்டுவதாகாது. இவ்வகை மனப்பாங்கே தமிழ் மக்களுக்கு இருத்தலாகாது என்பதே நான் முதன் முதலாகச் சொல்லவேண்டுவது. இம்மனப்பான்மையால் எழுங் கொள்கைக்கு "முழுமுதல் தன்மை வாதம்' என்று பெயரிடலாம். இதனால் விளையும் தீங்குகள் பல. இக் கட்சியோடு போர்புரிந்து உண்மையான தமிழ் நிலையைத் தமிழ் மக்களுக்கு உணர்த்துதல் அவசியம்.

இம் முழுமுதல் தன்மை வாதத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது தூய - தமிழ் வாதம். தமிழ்ப் பேச்சிலே, தமிழ் நூல்களிலே, தூய தமிழ்ச் சொற்களையே வகுத்தல் வேண்டும் என்று இவ்வாதம் கூறும். ஒருவன் எழுதும்போது தன் கருத்துக்கும், தான் எழுத முற்பட்ட நூலின் தன்மைக்கும் ஏற்ற சொற்களை எடுத்தாளுதல்தான் முறையாகுமே யன்றி, "இச்சொற்கள் தூய தமிழ்ச் சொற்களா? பிறமொழிச் சொற்களா?' என்ற ஆராய்ச்சியில் தலையிடுதல் எழுத்தாளனுக்குரிய முக்கிய கடமை என்று சொல்லுதல் தகாது. இவ் ஆராய்ச்சி மொழிநூற் புலவன் (ல்ட்ண்ப்ர்ப்ர்ஞ்ண்ள்ற்) மேற்கொள்ள வேண்டுவது.

தூய தமிழ்ச் சொற்களை ஆளும் இடமும் உண்டு; பிறமொழிச் சொற்களை ஆளும் இடமும் உண்டு; தகுதியறிந்து சொற்களை ஆளுவதுதான் சிறந்த முறையாகும். தூய தமிழ் வாதம் பெரும்பாலும் வடமொழியை நோக்கி எழுந்தது. இதனை மேற்கொண்டவர்கள் வடமொழிச் சொற்கள் தவிர ஏனைய எல்லாம் தமிழ்ச் சொற்களே என்று கருதுகிறார்கள். மொழியாராய்ச்சியில் பயின்றவர்கள் அவ்வாறு சொல்லத் துணியமாட்டார்கள். தமிழ் மக்கள் வடநாட்டோடு மட்டும்தான் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. பிறநாட்டாரோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள். இவ்வகைத் தொடர்பின் ஓர் அறிகுறியாக அப்பிறநாட்டுச் சொற்களும் தமிழில் புகுந்துதான் இருக்க வேண்டும். ஓர் உதாரணம் தருகிறேன். தமிழிளுள்ள "ஓரை' என்ற சொல் கிரேக்கச் சொல். இது தொல்காப்பியத்திலேயே காணப்படுகிறது.

""மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை''

என்பது தொல்காப்பியச் சூத்திரம். இதுபோன்ற பிறநாட்டுச் சொற்கள் பண்டைத் தமிழில் எத்தனையோ இருத்தல் வேண்டும். அவற்றை வரையறுத்தற்கு இப்பொழுது இயலவில்லை. இவைகளெல்லாம் போக எஞ்சியுள்ள சொற்களைத்தான் "தூய தமிழ்ச் சொற்கள்' என்று கூறுதல் வேண்டும்.

ஒரு சாரார், "தூய தமிழ் என்பது வேண்டுவதன்று. ஆனால், பிற்காலத்திலே சேர்ந்துள்ள வடமொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் தமிழைக் கெடுத்துவிட்டன; இச்சொற்கள் வைசூரி நோயால் தோன்றிய வடுக்கள் போலத் தமிழின் மேனியழகைக் குலைத்துவிட்டன; தமிழ் நடையும் தளர்ந்து வலிகுன்றிப் போய்விட்டது; தமிழ்மொழியும் தன்னை மிக எளிமையாக்கிக் கொண்டது. ஆதலால், பழந்தமிழ் நடையிலேயே பழந்தமிழ்ச் சொற்களையே வழங்கி, அதன் பெருமையையும், செறிவு முதலிய நலன்களையும் காட்டுதல் வேண்டும்' என்று கூறுவர். இவர்கள் கூறுவனவற்றைப் "பழந்தமிழ் வாதம்' என்று அழைக்கலாம். இவ்வாதத்தை ஒத்துக்கொள்வதானால், முதலில் பழந்தமிழ் என்று சொல்வது எது என்று தெரிதல் வேண்டும்.

சங்க நூல்கள் என்று சொல்லப்படும் நூல்களில் வழங்கும் தமிழ் மட்டுந்தானா? அல்லது நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதலியோர்களது அருளிச் செயல்களையும் பழந்தமிழ் என்பதில் உட்படுத்தலாமா? பின்னர் தோன்றிய காவியங்கள், பிரபந்தங்கள் முதலானவற்றையும் பழந்தமிழ் என்று கொள்ளலாமா? இவை முதலாகிய பல கேள்விகள் தோன்றும். இக்கேள்விகளுக்குத் தக்க விடையளிப்பது அரிய செயலாகும்.

ஒரு மொழியிலுள்ள சொற்கள் அம்மொழியைப் பேசும் மக்களுடைய அனுபவத்திற்கு அறிகுறியாக உள்ளன என்பதை மறந்துவிடலாகாது. ஏதேனும் ஒரு பழங்காலத் தமிழைக் குறித்தால், அதற்குப் பின் நிகழ்ந்த அனுபவங்களை உணர்த்தும் சொற்களை நாம் புறக்கணித்து விடுதல் கூடுமா? கூடாது. தமிழ் மொழியில் நிலைத்த வழக்காறாகப் புகுந்த பிறமொழிச் சொற்களெல்லாம் எக்காலத்தனவாயினும் தமிழ்ச் சொற்கள் என்றே கொண்டு வழங்குதல்தான் தகுதியாகும். பழந்தமிழ்க் கட்சியினரது கொள்கை பரவுமாயின், தமிழ் மொழியும் வடமொழியைப்போல வழக்கொழிந்து போவதற்கும் இடமுண்டு. பழஞ் சொற்களில் வழக்கொழிந்தனவற்றை நீக்கிவிட்டு, உயிருள்ள சொற்களோடு காலத்துக்கேற்ப புதுச் சொற்களும் கலந்து தமிழ் வளம் பெற்று விளங்க வேண்டும் என்பதுதான் நமது முன்னோர்களுடைய கருத்து.

"கடிசொல் இல்லை காலத்துப் படினே' என்று தொல்காப்பியச் சூத்திரம் இதனையே வற்புறுத்துகிறது. சொற்களைப் போன்றே மொழிநடையும் காலத்துக்குக் காலம் வேறுபட்டு வரும். இதனையும் அறிந்து தற்காலத்திற்கு உரிய நடையைக் கையாளுதலே தக்கதாகும். ஆகவே, இப் பழந்தமிழ்க் கட்சியோடு போர்புரிந்து தமிழ்மொழி என்றும் தனது புதுநலத்தோடு விளங்குமாறு தமிழ் மக்கள் பணிபுரிந்து வரல் வேண்டும். எப்பொழுதும் காலத்தோடு ஒத்தியைந்து செல்லுமாறு தமிழ் மக்கள் தங்கள் தமிழ் மொழியை நன்கு பேணுதல் வேண்டும்.

தமிழின் மறுமலர்ச்சிக்குத் தடையாயிருப்பன ஒருசிலவற்றை இங்கே ஆராய்ந்தோம். மொழியின் சிறப்பு அதனைப் பயில்வோர் சிறப்பு. ஆகையால், தமிழுக்கும் அதனைத் தாய்மொழியாக உடைய நம்மவர்களுக்கும் உள்ள மிக நெருங்கிய தொடர்பை நாம் நன்கு உணர்தல் வேண்டும். அதன் பாலுள்ள குறைகள் நமது குறைகளாகும்; அதன் பெருமை நமது பெருமையாகும்; அதற்கு வாழ்வில்லையேல் நமக்கும் வாழ்வில்லை. இப்போது உண்மையினையும் இதனால் வரும் நலன்களையும் தீங்குகளையும் முற்ற உணர்ந்து, நமது தமிழ்மொழி மாறாத இளமையோடும், குறையாத வலிமையோடும் என்றென்றும் நிலவுமாறு நாம் அனைவரும் மனமியைந்து உழைத்து வரும்படி இறைவன் அருள்புரிக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com