புகையிலைவிடு தூது...

96வகை சிற்றிலக்கியங்களுள் "தூது' இலக்கியமும் ஒன்று. தூது நூல்களுள் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவது "தமிழ் விடு தூது'தான். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த தூது நூல்களுள் "புகையிலை விடு தூது'
புகையிலைவிடு தூது...

96வகை சிற்றிலக்கியங்களுள் "தூது' இலக்கியமும் ஒன்று. தூது நூல்களுள் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவது "தமிழ் விடு தூது'தான். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த தூது நூல்களுள் "புகையிலை விடு தூது'ம் ஒன்று. இராமநாதபுரத்து வீடொன்றில் கிடைத்த மிக அற்புதமான பொக்கிஷமாக அதைக் கருதி, திருத்தம் செய்து உ.வே.சா. வெளியிட்டுள்ளார். இராமநாதபுரத்து சமஸ்தான வித்வானாக விளங்கிய சர்க்கரைப் புலவரின் குமாரராகிய சீனிச் சர்க்கரைப் புலவர் என்பவர் இதைப் பாடியுள்ளார்.

 ÷தூது விடுக்கத் தகுதிவாய்ந்த பொருள்கள் "பத்து' என்று "இரத்தினச் சுருக்கச் செய்யுள்' மற்றும் "பன்னிரு பாட்டியல்' ஆகிய நூல்கள் கூறுகின்றன. ஆனால், நமது புலவர்கள் அந்த வரன்முறையைக் கடந்து புகையிலை, வெற்றிலை, மூக்குப்பொடி, சுருட்டு முதலிய அஃறிணைப் பொருள்களையும் தூதாக வைத்துப் பாடியுள்ளனர்.

 ÷ஒருவரைப் புகழ்ந்து பாடுவதற்குத் தூதுப் பிரபந்தங்களைப் பயன்படுத்துவதைப்போல, இகழ்ந்து பாடுவதற்கும் இப்பிரபந்தம் ஒரு கருவியாவதுண்டு.

 ÷பழநி பாலதண்டாயுதபாணி கடவுள் மீது, ஒரு தலைவி அக்கடவுள்பால் கொண்ட தம் காதலைத் தெரிவிக்க புகையிலையைத் தூதாக அனுப்பி வைக்கிறாள் (புகையிலை பிரம்மாவுக்குரிய இலை ஆதலால், அதை "பிரம்பத்திரம்' என்பர்). இந்நூல் மொத்தம் 59 கண்ணிகள் கொண்டது. 53 கண்ணிகள் வரை புகையிலையின் பெருமைகளே பேசப்படுகின்றன.

 ÷வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் புகையிலையின் பெருமை, அவற்றிலிருந்து வரும் மூக்குப்பொடி ஆகியவற்றைப் பாடியுள்ளார். எப்படிப்பட்ட கல்விமான்களும் புகையிலை மோகத்தில் ஆழ்ந்துவிடுவதுண்டு இதை,

 ""கற்றுத் தெளிந்த கனப்பிரபல வான்களுமுன்

 சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ?''

 என்கிறார். புகையிலையால் செய்யப்படும் பொடியின் மகிமையை,

 ""வாடைப் பொடிக் கதம்பமான வெல்லா

 முன்னுடைய சாடிப் பொடிக்குச் சரியுண்டோ?''

 என்ற வரியில் கூறியுள்ளார். ""சார் ஒரு சிட்டிகைப் பொடி'' என்று தன் நிலையையும் மறந்து பிறரைக் கெஞ்சிக் கேட்கும் மனிதர்களைக் கண்ட புலவர், "பொடி'வைத்துப் பாடியுள்ளார்.

 ""சொற்காட்டு நல்ல துடிகாரரையும் போய்ப்

 பற்காட்ட விட்ட பழிகாரா...''

 ÷புகையிலை நம் நாட்டுக்கு வந்த இரவல் சரக்கு. ஆயினும் அதைப் பாராட்டிய புலவர்கள் ஏராளமானவர்கள் உண்டு.

 ""நாலெழுத்துப் பூடு; நடுவே நரம்பிருக்கும்

 காலும் தலையும் கடைச்சாதி - மேலாக

 ஒட்டு முதலெழுத்து மோதும் மூன்றாம் மெழுத்தும்

 விட்டாற் பரமனுக்கு வீடு!''

 நாலெழுத்துப் பூடு - புகையிலை. காலும் தலையும் - அப்பெயரிலுள்ள முதலும் கடைசியுமான எழுத்துகள். புலை-கடைச்சாதி. முதலெழுத்தும் மூன்றாம் எழுத்தும் விட்டால் எஞ்சி நிற்பது "கைலை'. சிவபெருமான் உறையுமிடம் (வீடு).

 இத் தனிப்பாடலே அன்றி, மூக்குப் பொடியைச் சிறப்பித்துக் கூறிய இன்னொரு பாடலும் உண்டு.

 ""ஊசிக் கழகு முனை மழுங்காமை; உயர்ந்தபர

 தேசிக் கழகு இந்திரியம் அடக்கல்; எரிகலன்சேர்

 வேசிக் கழகு இன்னிசை பலநூல் கற்றல்; வித்வசனர்

 நாசிக் கழகு பொடியெனக் கூறுவர் நாவலரே?''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com