திருமடங்கள் வளர்த்த இலக்கணக் கல்வி!

இலக்கணக் கல்வி, இலக்கணம் வல்ல புலவர்களிடம் மாணாக்கர் தனித்தும் கூடியும் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று பாடங்கேட்கும் நிலையிலிருந்து தற்போதைய வகுப்பறை நிலையில், ஓர் ஆசிரியர் பல மாணாக்கருக்குப் பயிற்றும் நிலை திருமடங்களில்தான் முதலில் உருவானது. இதனை குருகுலக் கல்வி அமைப்பு என்பதைவிட, உணவு உறையுளுடன் தங்கிப் பயிலும் பள்ளிநிலை (ஆர்ஹழ்க்ண்ய்ஞ் நஸ்ரீட்ர்ர்ப்) என்று கொள்வது பொருத்தமானது.

÷15-ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் பஞ்சாக்கர தேசிகரால் நிறுவப்பட்ட திருவாவடுதுறை ஆதீனம் "இலக்கணக் கொத்து' சுவாமிநாத தேசிகர், தருமபுர ஆதீனம் "இலக்கண விளக்கம்' வைத்தியநாத தேசிகர், சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகிய இலக்கணப் பெரும் புலவர்களை இலக்கண உலகிற்கு அளித்த பெருமையுடையது.

÷இவர்களுள் கச்சியப்ப முனிவரும் மீனாட்சி சுந்தரனாரும் தனி இலக்கண நூல்களோ உரைகளோ செய்யவில்லை என்றாலும், இலக்கணங் கற்பித்தல் மூலம் சிறந்த இலக்கணப் புலவர்களை உருவாக்கியுள்ளனர்.

÷கச்சியப்பரிடம் பாடங்கேட்டவர் கந்தப்பையர். கந்தப்பையரின் பிள்ளைகளே திருத்தணிகை சரவணப் பெருமாளையரும் விசாகப் பெருமாளையரும் ஆவர். இலக்கணக் கொத்து சுவாமிநாத தேசிகரின் மாணவரே சங்கர நமச்சிவாயர். பிற்காலத்தில் இவர் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக விளங்கினார்; நன்னூலுக்கு விருத்தியுரை எழுதினார். விசாகப் பெருமாளையர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலமை (புலவர் பட்டம்) நடத்தினார். மீனாட்சிசுந்தரனாரின் மாணாக்கர் உ.வே.சா., கும்பகோணம் கல்லூரியில் பேராசிரியரானார்.

÷தருமபுரம் குருஞான சம்பந்தர் ஆதீனம், வெள்ளியம்பலவாணத் தம்பிரானைத் தமிழ் உலகுக்கு அளித்தது. அவரிடம், சிவப்பிரகாச சுவாமிகளின் தம்பியராகிய கருணைப் பிரகாசரும் வேலப்ப தேசிகரும் திருநெல்வேலி சிந்துபூந்துருத்தியில் இலக்கணம் கற்றனர்.

÷ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகளால் 1672-இல் நிறுவப்பட்ட திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தின் ஐந்தாம் பட்டம் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் (ஞானியார் அடிகள்) இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதிலும் உரையாற்றுவதிலும் புகழ்பெற்று விளங்கினார். இவர் மாணாக்கர்கள் பலர் பிற்காலத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியராக வீற்றிருந்து இலக்கணத்தைச் சிறப்பாகக் கற்பித்தனர்.

("ஞானச் சுரங்கம்' மே, 2012 திங்கள் இதழிலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com